மக்களின் கூட்டு கோபத்திற்குள் கூட்டமைப்பு : பரணி கிருஸ்ணரஜனி

0
632

viki-98விக்கினேஸ்வரனின் பதவியேற்பு நிகழ்வு ஒரு அபத்த நாடகமாக அரங்கேறியிருப்பதுடன் ஒரு இனத்தின் கூட்டு கோபத்தையும் கிளறி விட்டிருக்கிறது.

இந்த மகாணசபையில் ஒன்றுமே இல்லை என்று தெரிந்தும் தமிழர் தரப்பை அதன் பின் இழுபட வைத்து அரசியல் ஆதாயம் தேடும் தனது முயற்சியில் சிங்களம் இந்த பதவியேற்பு நிகழ்வுடன் உச்ச வெற்றியை பெற்றிருக்கிறது.

குறியீட்டு ரீதியாகவே விக்கினேஸ்வரன் முதலமைச்சராக ஒரு அபத்தமானது மட்டுமல்ல ஆபத்துமான ஒரு தெரிவு. இன அழிப்பு நடந்து கட்டமைக்கப்பட்டுள்ள இன அழிப்பிற்குள் சிக்கியுள்ளோம் என்று நாம் வாய்கிழிய கத்திக்கொண்டிருக்கும் சூழலில் “இனக்கலப்பின்” பிரதிநிதியை நாம் முன்னிறுத்தியதே தவறு. இது இனஅழிப்பு வாதங்களை நீர்த்துப்போக செய்து “ஐக்கிய” இலங்கை கோசத்தை முன்னிறுத்தும் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி.

இன்று பதவியேற்பு நிகழ்வு தொடர்பாக அனைத்துலக ஊடகங்களுக்கும் அனைத்துலக தூதரங்கங்களுக்கும் அனுப்பப்பட்ட பிரதான புகைப்படம் தனது சிங்கள சம்பந்திகளுடன் விக்கினேஸ்வரன் மகிந்தவுடன் நிற்கும் புகைப்படமாகும். மிகத் தெளிவாக சிங்களமும் அன்னிய சக்திகளும் லொபி செய்கிறார்கள். ஆனால் நாம் தொடர்ந்தும் எமது அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டுகொண்டிருக்கிறோம்.

இன்று வடக்கு தேர்தலை நீதியாக நடத்தி இன ஐக்கியத்தை உருவாக்கும் கூட்டு பிம்பபமாக மகிந்த – விக்னேஸ்வரன் கூட்டணியை அனைத்துலக மட்டத்தில் உலாவ விட்டிருக்கிறது சிங்கள லொபி.

இனி இன அழிப்பு விசாரணை மட்டுமல்ல போர்க்குற்ற விசாரணைகூட சாத்தியப்பட வாய்ப்பில்லை. பதிவியேற்ற ஈரம் காய முன்பே விக்கினேஸ்வரன் இன ஐக்கியம் குறித்துதான் உளறியிருக்கிறார்.

மே 18 இல் நடந்த தமிழ் உயிர்களின் பலியெடுப்புடன் இலங்கைத்தீவில் இன ஐக்கியம்இ நல்லிணக்கம் என்பதும் அழித்தொழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் அன்றிலிருந்துதான் ஐக்கிய இலங்கைஇ நல்லிணககம் என்ற பதங்களை எதிரிகள் மட்டுமல்ல அனைத்துலக சமூகமும் மிகத்தீவிரமாக உச்சரிக்கதொடங்கியிருக்கிறது. இப்போது விக்கினேஸ்வரனும்…

நடந்த இனஅழிப்பை மறைத்து தமிழர்களுக்கான நீதியை கொடுக்க மறுப்பதுதான் இதன் பின்னுள்ள அபாயமான அரசியல். இதற்காக நல்லிணக்கம்இ ஐக்கிய இலங்கை என்ற கோசங்களை உரத்து பேசுகிறது சிங்களம். இதன் குருரமான பின்னணியை புரிந்தவர்களாக நாம் இதற்குள் சிக்குபடாமல் நடந்த இனஅழிப்பிற்கான நீதியை நோக்கி அனைத்து மட்டங்களிலும் எமது போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் சம்பந்தர் குழு இணக்க அரசியலுக்குள் எமக்கான நீதியை புதைத்து விட்டது.
vignes

எமக்கு தேவை நீதி. இன ஐக்கியம் அல்ல. அதுதான் ஏற்புடையதும் ஊனப்பட்ட உளவியலில் இருந்து ஒரு இனத்தை மே;மபடுத்தும் மருந்துமாகும். நல்லிணக்கம் என்பது அழித்தவர்கள் பக்கத்திலிருந்து ஆரம்பமாக வேண்டும். ஆனால் சிங்களம் அழிக்கப்பட்டவர்களிடமிருந்து அதை எதிர்பார்க்கிறது. அதற்கு ஒத்தூதும் தமிழ் அரசியல் தலைமைகள் எமக்கு கிடைத்த இன்னொரு சாபக்கேடு.

மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. கூட்டமைப்பினர் தமக்கு தமிழீழம் எடுத்து தருவார்கள் என்று அவர்கள் நம்பவில்லை. இந்த மாகாண சபை தேர்தலினூடாக தமக்கு ஏதாவது தீர்வு வரும் என்றும் அவர்கள் நம்பவில்லை. இருந்தும் இந்த தேர்தலில் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததற்கு காரணம். தாம் வீழ்ந்துவிடவில்லை என்பதையும் தம்மை அழித்த சிங்களத்திற்கு எதிராக ஒரு கூட்டு கோபத்தை காட்டவும் தனித்தேசம்இ சுயாட்சி என்று தமது மனங்களில் படிந்திருக்கும் ஒரு கூட்டு நினைவுத் திரட்டின் விளைவாகவுமே வாக்களித்தார்கள்.

எனவே தமது இந்த செய்தியை எதிரிகளைவிட கூட்டமைப்பினர் உணரவேண்டும் என்றே எதிர்பார்த்தார்கள். வீழ்ந்துவிடாத தமது தன்மானத்தின் குறியீடாக கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் வழமைபோலவே தேர்தல் வெற்றியை அடுத்து மக்களின் கூட்டு உளவியலை புரிந்து கொள்ளாமல் அல்லது அதை புறந்தள்ளி எதிரிகளினதும் அன்னிய சக்திகளினதும் நிகழ்ச்சிநிரலுடன் ஒத்தோடி இணக்க – அடிபணிவு அரசியலுக்குள் புதைந்து விட்டது கூட்டமைப்பு.

அதன் உச்சகட்டம்தான் இந்த பதவியேற்பு விழா. சாத்தியமில்லாத ஒன்றை மக்கள் கேட்கவில்லை. தாம் அளித்த ஆணைக்கு ஏற்ற மாதிரி இந்த பதவியேற்பு நிகழ்வை எதிர்ப்பு அரசியலின் ஒரு தொடக்க புள்ளியாக ஆக்குவார்கள் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள்.

இந்த மாதிரியான சாத்தியமான சிறிய விடயங்களைக்கூட தமது விருப்பு அடிப்படையில் செய்ய முடியாதவர்கள் எப்படி சிக்கலான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பார்கள் என்று மக்கள் முணுமுணுக்க தொடங்கிவிட்டார்கள்.

மக்களின் ஆணையை தாம் புறந்தள்ள முடியாது என்பதை சிங்களத்திற்கு தெளிவுபடுத்தி அதை ஒரு பேரம் பேசும் வல்லமையாக மாற்றி எதிர்ப்பு அரசியலை தொடங்க வேண்டிய கூட்டமைப்பு சிங்களத்திற்கு வாய்;ப்பாக அதை மாற்றிய அவலம்தான் நடந்து முடிந்திருக்கிறது.

இது மக்களின் மனநிலையில் ஒரு தோல்வி மனப்பாங்கை மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு கூட்டு கோபமாக மாறி ஈழ போராட்டத்தின் போக்கை மாற்றும் அபாயம் இருக்கிறது. ஏனென்றால் அரசியல்வாதிகள் கைவிடும்போது மீண்டும் அவர்கள் போராளிகளையே நம்ப வேண்டியிருக்கும்.

இது நாம் அறிந்த வரலாறுதான். அரசியல்வாதிகள் தமது அயோக்கியத்தனத்தாலும் வங்குரோத்துதனத்தாலும் அடுத்த தலைமுறையின் கைகளில் ஆயுதத்தை திணிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

இது ஒரு ஆபத்தான விளையாட்டு. கள யதார்த்தமும் பிராந்திய பூகோள அரசியலும் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு ஏற்ற நிலையில் இல்லை. எனவே அப்படி எதுவும் நடந்தால் எமக்கு மீண்டும் இன்னொரு அழிவாகவே இருக்கும். அர்த்தமுள்ள மக்கள் பரட்சியுடன் கூடிய ஆயுதப்போராட்டத்தி;றகாக நாம் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். தற்போது அதற்கான சூழல் இல்லை. ஆனால் கூட்டமைப்பின் மக்கள் எதிர் அரசியல் அனைத்து சமநிலையையும் குழப்பிவிடுமோ என்று தோன்றுகிறது.

சம்பந்தரின் தனிப்பட்ட சில முடிவுகள் என்றே இவற்றை பலர் குறிப்பிடுகிறார்கள். எனவே மாவை மற்றும் மக்களிடம் போய் வாக்கு கேட்ட சிறீதரன் போன்றவர்கள் தமது எதிர்பபை தெளிவாக பதிவு செய்து கூட்டமைப்பை சீரமைக்க வேண்டும்.

இறுதியாக,

துரோகங்கள், தோல்விகள், சறுக்கல்கள், சதிகள் மாறிவரும் உலக ஒழுங்கின் நிமித்தமான ஏகாதிபத்திய கூட்டணிகள் – அவை முன்மொழிந்த பயங்கரவாத சாயங்கள் எல்லாவற்றிற்கும் முகம் கொடுத்து நேர்மையுடனும் கொள்கைப்பற்றுடனும் விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடிய ஒரு தலைவன் தனது தீர்க்கதரிசனங்களின் சாய்வுகளையும் சரிவுகளையும் சறுக்கல்களையும் மீறி இந்த இனத்திற்காக பெரும் பேரழிவினூடாக அந்த வரலாற்றுக் காலத்தை எமக்காகத் திருப்பிவிட்டு ஐநா வாசல்வரை எம்மை கொண்டே விட்டார்.

அங்கிருந்து எம்மை தற தறவென இழுத்துக்கொண்டு வந்து மகிந்தர் வீட்டு படலைக்குள் விட்டிருக்கிறது சம்பந்தர் கும்பல். உண்மையான முள்ளிவாய்க்கால் இதுதான்..

ஈழம் ஈ நியூஸ்.