“மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள். வெற்றியை அவர்கள் பெற்றுத்தருவார்கள்”

0
683

தமிழீழ விடுதலையை வெள்ளை வேட்டி கட்டிய தமிழ் அரசியல்வாதிகளாலும், கோட்சூட் போட்ட படித்த மேதாவிகளாலும் என்றும் பெற்றுத்தரமுடியாது.

இது தமிழீழத்திற்கு மட்டுமல்ல உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிற நடந்து முடிந்த அனைத்துப் போராட்டங்களுக்கும் பொருந்தும்.

போராளிகளின் புரட்சிகர வன்முறைப் போராட்டத்திற்கும், உழைக்கும் மக்களின், மாணவர்களின் புரட்சிக்கும் ஒரு தொய்வு ஏற்பட்டு அதற்கான சாதகமான சூழல் உருவாகும்வரை அந்த போராட்டத்தை தற்காலிகமாகத் தாங்கிப்பிடிக்க அல்லது அதை முழுமையாக நீர்த்துப் போகாமல் செய்ய ஒரு தற்காலிக பாத்திரமாக உருவாகுபவர்கள்தான் இந்த அரசியல்வாதிகளும் படித்த மேதாவிகளும்..

அவர்களின் கொள்ளளவு அல்லது அவர்கள் குறித்த வாசிப்பு இதுதான். இவர்களால் தனிநாடு எடுத்து தருவது ஒருபுறம் இருக்கட்டும், போராட்டத்தின் போக்கைக் கூட ஒரு சாதகமான திசை நோக்கி நகர்த்த முடியாது. இதுதான் யதார்த்தம்..

போராளிகளாலும், மக்களாலும், மாணவர்களாலும் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ நடத்தப்படும் தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் வீரமும் செறிந்த புரட்சி அது.

இந்த புரட்சியை அரசியல்வாதிகளாலும் கோட்சூட் போட்ட படித்த மேதாவிகளாலும் என்றுமே நிகழ்த்த முடியாது. அது அவர்களுக்கு தெரியாது என்பது ஒரு புறமிருக்க அத்தகைய புரட்சி ஏதும் நடக்காமல் இருக்க காய் நகர்த்துவதிலும் இவர்கள் குறியாக இருப்பார்கள்.

ஏனென்றால் அத்தகைய மக்கள், மாணவர்கள், போராளிகள் மீளிணைவு மீண்டும் சாத்தியமாகிவிட்டால் தமது இடம் மீண்டும் காலாவாதியாகிவிடும் என்று அவர்களுக்கு தெரியும்.

எனவே நந்தி மாதிரி குறுக்கே நின்று தமது இடத்தை தக்க வைப்பதற்காக ஒரு ஆட்டத்தில் இவர்கள் இறங்கி விடுவார்கள்.

விளைவாக அந்த இனம் படிப்படியாக தெடர்ந்து அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். இது நாம் மே 18 இற்கு பிறகு தமிழீழத்தில் காணும் சகமகால உண்மையாகும்.

இத்தகைய போக்கு உலகெங்கும் உள்ள போராட்டங்களில் சிறிதளவேனும் காணப்பட்ட தன்மையாயினும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முழுமையாக விழுங்கிவிடும் அளவிற்கு நச்சாக பரவிப் பிடித்திருக்கிறது.

தமது “தற்காலிக” பாத்திரத்தை உணர்ந்து என்னசெய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் தமது இருப்பை தக்கவைக்க முற்படுகிறது இந்த கூட்டு கும்பல்.

ஓரளவிற்கேனும் தற்காலிகமாக மக்கள் கொடுத்திருக்கிற அங்கீகாரத்தை பயன்படுத்தி அதை ஒரு பேரம் பேசும் வல்லமையாக மாற்றி மக்கள் அவலங்களை போக்கவும், சிறைப்பிடித்தவர்கனை விடுவிக்கவும், பெண்கள், குழந்தைகள் நலனை பேணி ஒரு பாதுகாப்பான சூழலை அவர்களுக்கு உருவாக்க என்று பலதரப்பட்ட பணிகளே இவர்களுக்கு இடப்பட்டது.

குறிப்பாக கூறினால், தொடரும் இன அழிப்பை மட்டுப்படுத்தி அதாவது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிலிருந்து எமது மண்ணையும் மக்களையும் தற்காலிகமாக காத்துக்கொள்ளும் பணியே இவர்களுடையது.

ஆனால் அதை இந்த கூட்டு கும்பல் செய்கிறதா?

பதில் நம் எல்லோருக்கும் தெரியும்.

geneva11-03-14
பழையதை விடுவோம்.. கடந்த ஒரு சில வாரமாக இன அழிப்பு அரசு இனஅழிப்பு நோக்கங்களுடன் பாரிய இராணுவ அடக்குமுறைகளையும் பால் வயது வேறுபாடின்றி மக்களை வகைதொகையில்லாமல் கைது செய்யவும் தொடங்கியிருக்கிறது.

இதற்கு எதிராக எந்த போராட்டமோ? ஏன் துண்டறிக்கை கூட படித்த கனவான்களாலும் அரசியல்வாதிகளாலும் விடப்படவில்லை..

தமிழக்கட்சிகளும் தமிழ் சிவில் அமைப்புக்களும் இருந்தும் மக்களுக்கு என்ன பாதுகாப்பு?

இதை நாம் தட்டி கேட்டால் நிலைமை தெரியாமல் பேசாதீர்கள்? இங்கு அதைக் கண்டிக்க கூடிய சூழல் இல்லை என்று எமக்கு வகுப்பு எடுக்கிறார்கள்..

இதைத்தான் நாமும் சொல்கிறோம். அது உண்மைதான். உங்களால் முடியாதல்லவா? அந்த உண்மையை பட்டவர்தனமாகப் போட்டு உடைத்து மக்களுக்கு சொல்லுங்கள்.. மக்கள் நீங்கள் இருக்கிறீர்கள் என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்..

தமக்கான ஒரு பிரதிநி அல்லது தம்மை காக்க யாரும் இல்லை என்ற உண்மையை உணர்ந்தால் அல்லது அது தெளிவாக விளக்கப்பட்டால் மக்கள் தாமே தம்மை பாதுகாக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளுவார்கள்.. விளைவாக போராட உந்தப்படுவார்கள்..

அப்போது மாணவர்களும் மக்களுடன் இணைந்து கொள்வார்கள். இதுதான் புரட்சி. இதுதான் போராட்டம்.

ஆயுதப்போராட்டத்தை அழித்தொழித்தது போல் மக்கள் மாணவர் போராட்டங்களை அழித்தொழிக்க முடியாது. தமது நலன்கள் கருதியேனும் உலகம் இலங்கையை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. உலக மனித உரிமை அமைப்புக்களின் தினப்பட்டியலில் இலங்கை வந்து நீண்ட நாட்களாகிவிட்டது.

எனவே குறிப்பிட்ட எல்லைக்கு மேல் சிங்களம் மக்களை நசுக்க முடியாது.

அத்தோடு புலமும் தமிழகமும் சும்மா போராடாது. அது தவறுதான். ஆனால் அதன் பின்னுள்ள தாக்கத்தையும் உளவியலையும் சேர்த்தே அது விமர்சிக்கப்பட வேண்டியிருக்கிறது. மக்கள் போராட்டம் என்ற அடிப்படையில் களம், புலம், தமிழகம் ஒன்றிணையாமல் இருப்பதற்கு காரணமே நீங்கள்தான்.

எனவே நந்தி போல் இருக்கிற நீங்கள் விலகிவிட அங்கு மக்கள் புரட்சி வெடிக்கும்போது அதற்கு சமாந்தரமாக புலமும் தமிழகமும் உயிர்த்தெழும்.

ஒரு அர்த்தமுள்ள அரசியலை தமிழீழ விடுதலை சார்ந்து உலகத்தமிழினம் சேர்ந்து எழுதும்.

எனவே கோட்சூட் போட்ட கனவான்களுக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்.. ஏன் எச்சரிக்கையும் கூடத்தான்..

மக்களுக்கு உண்மையை சொல்லி மக்கள் போராட்டத்திற்கு வழி விட்டு ஒதுங்கி நில்லுங்கள்..

“மக்களுக்கு உண்மையை சொல்லுங்கள். வெற்றியை அவர்கள் பெற்றுத்தருவார்கள்” என்பது மக்கள் போராட்டம் குறித்த எளிய பால பாடம்..

ஈழம்ஈநியூஸ்.