மக்களை காக்க அரசு தவறின் சர்வதேசம் பொறுத்திருக்காது! தீர்மானம் குறித்து நவநீதம்பிள்ளை

0
598

தனது சொந்த மக்களைப் பாதுகாக்க இலங்கை அரசாங்கம் தவறும் போது, அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு சர்வதேசத்துக்கு இருக்கின்றது. சர்வதேசச் சட்டமும் அதையே சொல்கின்றது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

அத்துடன், காஸாவில் ஆயிரத்து 600 பேர் கொல்லப்பட்ட போது ஒரு வாரத்திலேயே சர்வதேச விசாரணைக் குழு அமைக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டிய அவர், இலங்கையில் 40 ஆயிரம் பேர் கொல்லப் பட்டு 5 வருடங்கள் கடந்துள்ள மையையும் எடுத்துக்காட்டி னார்.இதனால் இலங்கை மீதான விசாரணை அவசியம் என்பதை அவர் நியாயப் படுத்தியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில், அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, “அல்ஜசீரா’ தொலைக்காட் சிக்கு வழங்கியுள்ள நேர் காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம் அரசியல் நோக்கங்களைக் கொண்டது என்று இலங்கைப் பிரதிநிதி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று அல்ஜசீரா செய்தியாளர் நவநீதம்பிள்ளையிடம் கேள்வியயழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அவர், தன்னுடைய சொந்த மக்க ளைப் பாதுகாக்க அரசுகள் தவறும்போது, அதைச் செய்ய வேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்துக்கு இருக்கின்றது.

இதையே சர்வதேசச் சட்டவிதிகளும் சொல்கின்றன. சர்வதேச விசாரணையை இலங்கை மீது விரைவாகக் கோரியுள்ளதால் இலங்கைப் பிரதிநிதி அவ்வாறு தெரிவித்திருக்கலாம்.

எங்களிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. இலங்கையில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்படுகின்ற வரை நாங்கள் காத்திருக்க வேண்டியதில்லை.

pillai
காஸாவில் ஆயிரத்து 600 பேர் கொல்லப்பட்டபோது ஒரு வாரத்தினுள்ளேயே சர்வதேச விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டது. ஐ.நா மனித உரிமைகள் சபை அரசியல் அழுத்தங்களுக்காக வேலை செய்யும் இடமில்லை. இலங்கை விடயத்தில் ஐ.நா பொதுச் சபை, ஐ.நா செயலாளர், ஐ.நா மனித உரிமைகள் சபை என்பன 5 வருடங்களாகக் காத்திருந்தன.

இலங்கை உள்நாட்டுப் பொறிமுறையினூடாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம் என்று குறிப்பிட்டார். ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை ஒத்துழைக்க மறுப்பது தொடர்பில், ஆணையாளரிடம் செய்தியாளர் கேள்வியயழுப்பினார்.

அதற்கு அவர், இலங்கை மீதான விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும்போது அதன் பொறுப்பாளராக நான் இருப்பேன் என்று நினைக்கவில்லை. இலங்கையின் ஒத்துழைப்பைக் கண்டிப்பாகக் கேட்போம். நான் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டபோது இலங்கை ஒத்துழைத்திருந்தது.

பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கைக்கு அரசியல் ரீதியாக விருப்பம் இருக்கின்றது. ஆனால் அவர்களின் கவலைகள் எல்லாம், தாங்கள் செய்தவற்றைச் சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

இலங்கை நிச்சயமாகச் செய்திருக்கின்றது.உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆயுதக் களைவு, இடம்பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துதல் உள்ளிட்டவற்றைச் செய்து இருக்கின்றது.

நீதி, பொறுப்புக் கூறல் என்ற விடயம் வரும்போது, விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்டவர்களும் நீதிக்காகக் காத்திருக்கின்றார்கள்dஎன்றார்.

இலங்கை மீதான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் 12 நாடுகள் எதிர்த்தமை மற்றும் 12 நாடுகள் கலந்து கொள்ளாமை தொடர்பில் என்ன கருதுகின்றீர்கள் என்று ஆணையாளரிடம் எழுப்பிய கேள்விக்கு,

எதிர்த்து வாக்களித்தமை மற்றும் வாக்களிக்காமல் விட்டமை தொடர்பில் நான் கவலைப்படுகின்றேன்.ஐ.நா பொதுச் சபை, ஐ.நா மனித உரிமைகள் சபை என்பன இலங்கைக்கு எதிராகச் செயற்படவில்லை.

இலங்கையை இலக்கு வைத்து இதனைச் செய்யவில்லை. இதே மாதிரியான நடைமுறைகள் முன்னரும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பலஸ்தீனம், சிரியா அண்மையில் மத்திய ஆபிரிக்க குடியரசிலும்,தென்சூடானில் ஆபிரிக்க ஒன்றியத்தாலும் இதே மாதிரியான பொறிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சர்வதேச அமைப்புக்களால் இவை பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்று.மனித உரிமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதையும்,மனித உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும் என்பதையும் நோக்காகக் கொண்டே செயற்படுகின்றோம்.
எமது செயன்முறைகளினூடாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்பது கடந்தகாலத்தில் நடந்துள்ளது என்று பதிலளித்தார்.

இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க முடியும் – யாஸ்மீன் சூகா

இதனிடையே, இலங்கையின் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும் என ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் உறுப்பினர் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக தாருஸ்மான் தலைமையில் நிறுவப்பட்ட நிபுணர் குழுவில் சூகாவும் அங்கம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறான தடைகள் விதிக்கப்படும் என்பதனை குறிப்பிட முடியாத போதிலும் தடைகள் விதிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

yasmin_sooka
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கத் தவறினால் பாதகமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரச அதிகாரிகளுக்கான பயணத்தடை, வெளிநாட்டு முதலீட்டு தடை, சொத்து முடக்கம் போன்ற பல்வேறு வழிகளில் தடைகள் விதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சுயாதீன விசாரணைகளை இலங்கை ஜனாதிபதி நிரகாரித்தமை அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.