மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்துத் தமிழீழத் தனியரசை நிச்சயம் நிறுவுவோம்!

0
657

hero098சத்திய இலட்சியத்தை சுமந்து, அந்த சத்திய வழியில் களமாடி வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து, அந்த மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்துத் தமிழீழத் தனியரசை நிச்சயம் நிறுவுவோம். இதற்காகப் பொறுப்புணர்வுடன் உழைப்பது அனைத்துத் தமிழ் ஊடகங்களின் கடமையாகும் என பிரான்ஸ் ஊடக இல்லம் மாவீரர் நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையை இங்கே முழுமையாகத் தருகின்றோம்.

நடுவப் பணியகம்
ஊடக இல்லம்
பிரான்ஸ்

27 நவம்பர் 2013

மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்துத் தமிழீழத் தனியரசை நிச்சயம் நிறுவுவோம்!

அதற்காகப் பொறுப்புணர்வுடன் உழைப்பதே அனைத்துத் தமிழ் ஊடகங்களின் கடமையாகும்

இன்று மாவீரர் நாள். தமிழீழ தேச விடுதலையைத் தமது உயிர்மூச்சாகக் கொண்டு களமாடி வீழ்ந்த வீரமறவர்களை நாம் நினைவுகூரும் புனித நாள்.

தமிழினத்தின் வரலாற்றில் என்றுமே நிகழாத வீர சாகசங்களைப் புரிந்தவர்கள் எமது மாவீரர்கள். புறநானூற்றில் நாம் படித்து அதிசயித்த எமது பண்டைக்கால மன்னர்கள் புரிந்த வீரச்செயல்களையும், ஈகங்களையும் விஞ்சும் வகையில் வீரப்போர் புரிந்து தமது இன்னுயிர்களை தற்கொடையாக ஈந்தவர்கள் எமது மாவீரர்கள். தரையிலும், கடலிலும், வானிலும் எமது மாவீரர்கள் புரிந்த சாகசங்கள் வார்த்தைகளால் விபரிக்க முடியாதவை. அவர்கள் புரிந்த ஈகங்கள் சிற்பங்களால் செதுக்கப்பட முடியாதவை. தமிழீழ தேச விடுதலை என்ற இலட்சியத்தை இதயத்தில் சுமந்து, பிரபாகரன் எனும் பெருநெருப்பின் வழிநின்று களமாடிய சூரியக்குழந்தைகள் எமது மாவீரர்கள். அடியும், முடியும் அளவிட முடியாத அந்த சூரியத்தேவனின் முடிதரித்த உச்சியிலேயே எமது மாவீரர்களின் நதிமூலத்தை நாம் கண்டுணர்ந்து கொள்ள முடியும்.

இன்று தமிழீழத் தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்களைச் சிங்களம் இடித்து நாசம் செய்துள்ள பொழுதும் எமது மாவீரர்களின் ஆன்மா தமிழீழ மண்ணை விட்டு அகன்றுவிடவில்லை. விதைகுழிகளை உழுது, அங்கு நித்தியத்துயிலில் ஆழ்ந்திருந்த எமது வீரக்குழந்தைகளின் வித்துடல்களைச் சிங்களம் கிளறியெறிந்த பொழுதும் எமது மண்ணை விட்டு அவர்கள் நீங்கிவிடவில்லை. காற்றோடு காற்றாகவும், கடலோடு அலையாகவும், வேரடி மண்ணாகவும் தமிழீழத் தேசத்தோடு அவர்கள் ஒன்றித்துள்ளார்கள். தமிழீழத் தாயகத்தில் மட்டுமன்றி, தாய்த் தமிழகத்திலும், தமிழர்கள் பரந்துவாழும் பூமிப்பந்தின் மூலை முடுக்கெங்கிலும் எமது வீரப்புதல்வர்களினதும், வீரப்புதல்விகளினதும் ஆன்மா வியாபித்துள்ளது.

இன்று எமது விடுதலைப் போராட்டம் மிகப் பெரும் வரலாற்றுத் திருப்புமுனையை எட்டியுள்ளது. 2009 மே 18உடன் எமது போராட்டத்தை அழித்துவிட்டதாக எக்காளமிட்டுக் கொக்கரித்த சிங்களம் அனைத்துலக அரங்கில் ஓரங்கட்டப்படும் அபாயத்தை எதிர்நோக்கிய நிலையில் விழிபிதுங்கி நிற்கின்றது. ‘புலிகளை அழித்து விட்டோம்’ என்று பறைதட்டி வெற்றிக்களிப்பில் ஆழ்ந்திருந்த சிங்களம் இன்று அனைத்துலக அரங்கில் என்றுமில்லாதவாறு பெரும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றது.

ஈழத்தீவை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்தியம் அகன்ற கடந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் நிகழ்ந்திராத அதிசயம் இன்று நிகழத் தொடங்கியுள்ளது. எமது கண்ணீரைக் கண்டும் காணாதது போல் இற்றைவரை நின்ற உலகம் இன்று எமது பக்கம் திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. எமது அழுகுரல்களைக் கேட்டும் கேட்காதது போன்று மௌனியாக இருந்த உலகம் இன்று எமக்காகக் கண்ணீர் சிந்துகின்றது. எமது குரல் இனி உலகின் செவிப்பறைகளைச் சென்றடையாதா? என்று நாம் ஏங்கியிருந்த வேளையில் எமது குரலை வெளிக்கொணரும் நோக்கத்துடன் எமது பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து எமது மக்களின் குறைகளைக் கேட்டறிந்து சென்றுள்ளார் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன். இறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிச்சயம் உலகம் நீதி வழங்கியே தீரும் என்று சூளுரைத்துச் சென்றுள்ளார் பிரித்தானியப் பிரதமர். வரும் மார்ச் மாதத்திற்குள் போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீன விசாரணைகளைச் சிங்களம் மேற்கொள்ளத் தவறினால் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைகளை அது எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது எமக்குக் கிடைத்துள்ள மிகப்பெரும் வெற்றியாகும். எந்தவொரு காலத்திலும் தான் இழைத்த குற்றங்களைச் சிங்களம் சுயாதீனமாக விசாரணை செய்யப் போவதில்லை என்பது நாமறிந்த உண்மை. இந்நிலையில் பிரித்தானியப் பிரதமர் எச்சரித்திருப்பது போன்று பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து சிங்களம் தப்பிவிட முடியாது.

எமது இனத்திற்கு சிங்களம் இழைத்தது இனப்படுகொலை என்பதை இன்று உலகம் ஏற்கப் பின்னடித்தாலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையூடாகச் சிங்களத்தைப் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்கு உலகம் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. எமக்கு ஆசுவாசத்தை அளிக்கக்கூடியது. போர்க்குற்றம் என்ற அனைத்துலக வலையில் இன்று சிக்கியிருக்கும் சிங்களம் காலநீட்சியில் இனப்படுகொலை எனும் சிறைக்குள் நிச்சயம் தள்ளப்படும். அதற்கான புறநிலைகளை ஏற்படுத்தும் பொறுப்பு ஒவ்வொரு தமிழர்களையுமே சார்ந்துள்ளது.

காலத்தின் தேவையை நாம் சரியாக உணர்ந்து செயலாற்றினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்ற விசாரணைக்கு ஆளாக்கப்படப் போகும் சிங்களத்தைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியும். சுலோபடான் மிலோசவிக், சார்ல்ஸ் ரெய்லர் ஆகியோரின் வழியில் தமிழ் இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவையும், அவரது சகோதரர்கள், அமைச்சர்கள், படைத்தளபதிகள் என அனைவரையும் நாம் கூண்டோடு குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியும். இது விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, அரசியல் மதிநுட்பத்தோடு செயலாற்றினால் இனப்படுகொலை புரிந்த குற்றத்திற்காகச் சிங்களத்தை நிச்சயம் தண்டிக்க முடியும். இதனூடாக இனப்படுகொலைக்கான பரிகாரமாகப் பிரிந்து செல்லும் உரிமையை உலக அரங்கில் வலியுறுத்தி ஈற்றில் தமிழீழத் தனியரசை நாம் நிறுவ முடியும்.

மலையின் உச்சியில் ஊற்றெடுக்கும் நீர் பல திசைகளில் பிரிந்து நதிகளாக ஓடினாலும் அவை ஈற்றில் கடலையே சென்றடைகின்றன. அதுபோல் இன்று பல்வேறு அணிகளாக நாம் அனைவரும் ஆங்காங்கே சிதறுண்டு பயணித்தாலும் எம் அனைவரின் இலட்சியமும் தமிழீழத் தனியரசு என்பதை நோக்கியே உள்ளது. இந்த வகையில் எமக்குள் காணப்படும் முரண்பாடுகளைக் களைந்து தமிழீழத் தனியரசுப் பாதையில் நாம் அனைவரும் உறுதியுடன் பயணிக்க வேண்டும். தனிமனித நலன்களுக்காக வசைபாடுவதையும், ஒருவர் மீதொருவர் சேறுபூசுவதையும் நிறுத்தித் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்காக ஒரே சிந்தனையுடன் நாம் செயலாற்ற வேண்டும். ஒற்றுமையுடன் ஒரே குடையின் கீழ் செயற்படுவது இன்றைய சூழலில் சாத்தியமாகாது போனாலும் நாம் அனைவரும் ஒருவரோடொருவர் முரண்படாது எமது பணிகளை ஒரே இலட்சியத்துடன் முன்னெடுக்க வேண்டும். இதன் மூலமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிங்களத்தை நகர்த்தி அங்கு அதனை இனப்படுகொலைக் குற்றத்திற்காக முன்னிலைப்படுத்தி நாம் தண்டிக்க முடியும். தமிழீழத் தனியரசை நாம் அடைவதற்கான சூட்சுமம் இதிலேயே அடங்கியிருக்கின்றது.

நாம் இன்று எட்டியிருக்கும் வரலாற்றுத் திருப்புமுனைக்குக் காலாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள். அவர்கள் புரிந்த ஈகமே இன்று உலகை எமது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அவர்கள் புரிந்த வீர சாகசங்களே மீண்டுமொரு ஆயுதப் போராட்டம் ஈழத்தீவில் வெடித்துவிடும் என்ற அச்சத்தை உலகிற்கு ஏற்படுத்தி எமக்காகக் குரல்கொடுக்க வைத்துள்ளது. இந்த வகையில் எமது போராட்டத்தின் அசைவியக்கத்தை நகர்த்தும் சக்தி இன்று மாவீரர்களிடமே உள்ளது. ஈற்றில் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான திறவுகோலும் அவர்களிடமே உள்ளது.

இன்று சிங்களத்தைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்துவதற்குத் தயாராகும் உலகம் எமது மாவீரர்களை இழிவுபடுத்துவதையும் நாம் மறந்து விடக்கூடாது. அதனை சாதாரண விடயமாக எண்ணி நாம் அலட்சியம் செய்துவிடவும் முடியாது. எமது மக்களுக்காகக் குரல்கொடுக்கும் ஒவ்வொரு உலகத் தலைவர்களும் எமது மாவீரர்களைப் பயங்கரவாதிகளாகவே வர்ணிக்கின்றனர். மனிதவெடிகுண்டுகளையும், சிறுவர் போராளிகளையும் தோற்றுவித்த ‘கொடிய பயங்கரவாதிகள்’ என்ற முத்திரை எமது மாவீரர்கள் மீது குத்தப்படுகின்றது. இந்நிலையை மாற்றியமைத்து எமது மாவீரர்களைச் சுதந்திரப் போராளிகளாக உலகத் தலைவர்கள் அனைவரும் அழைப்பதற்கான புறநிலையைத் தோற்றிவிப்பதற்கு நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும். இனி நிகழப் போகும் போர்க்குற்ற விசாரணையாக இருந்தாலும்சரி, அதன் விளைவாகக் காலநீட்சியில் நடந்தேற போகும் இனப்படுகொலை விசாரணையாக இருந்தாலும்சரி, இவற்றின் ஊடாக எமது மாவீரர்கள் மீது இப்பொழுது வீழ்ந்துள்ள களங்கம் துடைக்கப்பட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் மதிநுட்பத்துடன் செயலாற்ற வேண்டும். சிங்களத்தைத் தண்டிப்பதற்கான முயற்சிகளோடு மட்டும் எமது அரசியல் பணிகளை நிறுத்திவிடாது எமது மாவீரர்களின் பெயர் மாசுபடாதிருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இதுவே எமக்காகத் தமது இன்னுயிர்களை ஈந்த மானமாவீரர்களுக்கு நாம் புரியக்கூடிய குறைந்தபட்ச நன்றிகடனாகும்.

இதற்காகப் பொறுப்புணர்வுடன் உழைப்பது அனைத்துத் தமிழ் ஊடகங்களின் கடமையாகும். இதனை உணர்ந்து, முரண்பாடுகளைக் களைந்து அனைத்து தமிழ் ஊடகங்களையும் செயற்படுமாறு தோழமையுடன் அழைக்கின்றோம்.

சத்திய இலட்சியத்தைச் சுமந்து அந்த சத்திய வழியில் களமாடி வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள். தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்து, அந்த மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்துத் தமிழீழத் தனியரசை நிச்சயம் நிறுவுவோம் என இன்றைய புனித நாளில் உறுதிபூணுவோமாக.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’