மாவீரர்களுக்கு கிடைத்த வெற்றி!- அனந்தி எழிலன் சிறப்பு பேட்டி

0
672

anathi-interviewஇலங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு (1,32,255 வாக்குகள்) அடுத்து, 2வது இடத்தைப் பிடித்திருப்பவர் அனந்தி எழிலன். பெற்றது 87,870 வாக்குகள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆவார்.

வாழ்த்துச் சந்திப்புகள், முதலமைச்சரைத் தேர்வுசெய்த கூட்டம் என பரபரப்பாக இருந்தவரை தொலைபேசியில் பிடித்தோம். தாய்த்தமிழகத்தின் மீது பாசத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் நன்றியோடும் வட இலங்கை மாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன்.

நக்கீரன் என்றதும், “உங்கட பத்திரிகையை நிரம்பப் பிடிக்கும்’ என்றார், மகிழ்ச்சி பொங்க. கேள்விகளை முன்வைத்தோம்.

கேள்வி – மக்களிடம் என்ன சொல்லி வாக்கு கேட்டீர்கள்? இந்த வாக்குத் தீர்ப்பை என்னவாக நினைக்கிறீர்கள்?

பதில் – போரின் இறுதிக் காலகட்டத்தில் சரண் அடைந்த எம் மக்களையும், காணாமல்போக வைக்கப்பட்ட உறவுகளையும், நீண்டகாலமாக அரசியல் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் தமிழ் மக்களையும் விடுவிக்க வேண்டும், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவேண்டும், இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து எங்களின் பூர்வீக நிலம் மீட்டெடுக்கப்படவேண்டும், எங்களின் இன இருப்பு தக்கவைக்கப்பட வேண்டும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதையும், ’உரிமைக்காக எம் இனம் போராடியதே தவிர, நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல’ என்பதையும் சர்வதேசத் துக்குத் தெரியப்படுத்தவே, மக்களிடம் ஆணை கேட்டோம். அவர்களும் தந்திருக்கிறார்கள்.

தந்தை செல்வா முன்வைத்த அதே கொள்கையைத்தான், தமிழீழ விடுதலைப்புலிகளும் வைத்தார்கள். தந்தை செல்வா கேட்டதையே, நாங்களும் கேட்கிறோம். எங்களை நாங்களே ஆளக்கூடிய, தன்னிச்சையான அரசமைப்பாக, மற்றவர்கள் வந்து, நீ அதைச் செய், இதைச் செய் என தலையிடாத அரசு வேண்டும். அதாவது, சுயநிர்ணய உரிமைதான் வேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக் கிறார்கள்.

கேள்வி – அப்படியானால், இந்த மாகாணசபை முறையை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?

பதில் – மாகாண சபை முறையை 1987-இலேயே எம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மிகக் குறைந்த அளவான அதிகாரமே, இந்த சபைக்கு இருக்கின்றது. இதில் எங்களுக்கு சிறிலங்கா எந்தத் தீர்வையும் வழங்கிவிடவில்லை. ஆனால், பயங்கரவாதிகள் எனக் கூறி, சர்வதேசமும் சேர்ந்துதான் எம் மக்களை அழித்தது. பயங்கரவாதத்தை அழித்துவிட்டு, உரிமைகளைத் தருகிறோம் என்றார்களே! இப்போது உரிமையைக் கொடுங்கள் என்று சர்வதேசத்தை, அவர்களின் பாணியிலேயே கேட்கிறோம்.

கேள்வி – போராளி இயக்கச் செயல்பாடுகளை நெருக்கத்தில் இருந்து பார்த்திருப்பீர்கள். இந்த அரசியல் தேர்தல் களம் எப்படி?

பதில் – இந்தத் தேர்தலில் ஒரே ஒரு பெண் வேட்பாளர், நான்தான். கூடவே, எழிலனின் மனைவி என்ற பின்னணியும் இருந்தது. எனக்கு, மக்கள் அமோகமாக வரவேற்பு தந்தார்கள். எதையும் அவர்கள் மறக்கவில்லை, மாவீரர் களையும் போராளிகளையும் நினைவில் தேக்கிவைத்தபடி இருக்கிறார்கள். அவர்களின் தியாகத்துக்குக் கிடைத்த வெற்றிதான் இது. போரின் நேரடி சாட்சியாகத்தான் என்னைப் பார்த்தார்கள். இனப்படுகொலை பற்றி நான் பிரச்சாரத்திலும் பேசினேன். அதற்காகவோ என்னவோ என்னைக் கொல்லப் பார்த்தார்கள். நல்லவேளையாக, கொலைத்தாக்குதல்களில் இருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பி விட்டேன்.

முதல் முறையாக நான் மனுத்தாக்கல் செய்தபோதே, எனக்கு எதிராக ஊர்வலம் நடத்தினார்கள். புலிப்பயங்கரவாதி என தென்னிலங்கையில் உள்ள தொலைக்காட்சிகளில் இனத்துவேசத்துடன் செய்தி வெளியிட்டார்கள். ஏராளமான துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து, விநியோகித்தார்கள். பிரச்சாரத்தின்போது, யாழ்ப்பாணத்தில் வைத்து என் மீது கொலைமுயற்சித் தாக்குதல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்னர், துப்பாக்கிகளோடும் வாள்(கத்தி)களோடும் ராணுவ உடையில் வந்தவர்கள், என் வீட்டில் தாக்குதல் நடத்திவிட்டுப் போனார்கள். ஆனால், அவர்கள் செய்ததை, எந்தக் காலத்தில் ஒத்துக்கொண்டார்கள். இவ்வளவு இராணுவப் பிரசன்னம் இருக்கும் நாட்டில், அந்நிய ராணுவமா வந்து எங்களைத் தாக்கும்?

கேள்வி – தேர்தலின்போது, நீங்கள் அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்துவிட்டதாக, தகவல் வெளியானதே?

பதில் – ஆமாம், அது தகவல் அல்ல, முற்றிலும் திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்தி. வாக்குப்பதிவு அன்று பிரபல உதயன் நாளேட்டைப் போலவே, அச்சடித்து, அதில், ‘அரசாங்கத்தோடு அனந்தி சேர்ந்துவிட்டார்’ என்று செய்தியடித்து, எல்லா பகுதிகளிலும் வீடுவீடாகப் போய், அதை வீசி எறிந்தார்கள்.

அதனால், பல ஆயிரம் மக்கள் குழம்பிப்போனார்கள், நிறைய பேர், நான் மாறிவிட்டேனோ என நொந்துபோனார்கள். எத்தனை பேருக்குத்தான், நான் விளக்கம் தெரிவிக்கமுடியும்? ஆனாலும், கீழ்த்தரமான இந்த செய்கைகளால், மக்களின் மன எழுச்சியைத் தடுக்கமுடியவில்லை. மாவீரர்களை நினைவில் ஏந்தி, அவர்கள் தங்கள் வாக்குகளை, ஆணையாகத் தந்திருக்கிறார்கள்.

கேள்வி – இந்த சபை பயனற்றது என்றால், மக்களுக்கான பணிகளை எந்த முறையின் மூலம் செய்யப் போகிறீர்கள்?

பதில் – மாகாணங்களுக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிகாரத்தில், 10 சதவீதம்கூட இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. இது, நிதி அதிகார வலுவற்ற ஒரு வெற்றுசபைதான். காணி (நிலம்) உரிமை அதிகாரம் இல்லை. ஆனாலும், இந்த சபை பிழையானவர்களின் கைகளுக்குப் போயிருந்தால், எம் மக்களின் நிலைமை, அடிமையிலும் மிக மோசமான நிலைக்குத்தான் போயிருக்கும். அப்படி நிகழ்ந்துவிடக்கூடாது என திடசங்கல்பம் கொண்டு, தமிழ் இனம் கொண்ட மன எழுச்சி தந்ததுதான், இந்த வெற்றி. மாகாண சபையின் நிலைமை தொடர்பில் இழுபறியான நிலைமைதான் காணப்படுகின்றது. தெளிவான நிலைக்கு, பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

இந்த சபையை மட்டுமின்றி, தனியான அமைப்புகளின் ஊடாகவும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் சிறுவர்களுக்குமான திட்டங்களையும் பெண்களின் வாழ்வாதாரங்களை உருவாக்குவதற்கான பணிகளில் நான் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளேன்.

கேள்வி – தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து, நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் – தமிழ்நாட்டுத் தமிழர்கள், எம் சொந்த சகோதர உறவுகள். காலம்காலமாக எங்களுக்கு அவர்கள் காட்டிவரும் ஆதரவைத் தொடர்ந்து பேணவேண்டும். எம் இனத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக, அவர்கள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைக் காட்டவேண்டும். அங்கிருந்து வந்த சில தலைவர்களின் உறுதிமொழியை நம்பித்தான், என் கணவர் உள்பட பலரும் அரசபடையிடம் சரணாகதி அடைந்தனர். அவர்களின் கதி என்ன என்று தெரியக்கூட இல்லை. இந்தப் புதிய களத்தில் தனி ஒரு பெண்ணாக இறங்கியுள்ள என் மீது நடத்தப்படும் மட்டமான எதிர்ப்புகள், தாக்குதல்களாலும், தனிப்பட்ட பாதுகாப்பு பிரச்சினையாகக் கிடக்கிறது. என்னுடைய மூன்று பிள்ளைகளையும் (நல்விழி-14 வயது, எழில்விழி-12, கல்கி-10) பள்ளியில் இருந்து இடை நிறுத்தும் நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, என் பாதுகாப்பு தொடர்பில் எம் உறவுகளின் கூடுதல் அக்கறையை தனிப்பட்ட வகையில் எதிர்பார்க்கிறேன். எம் தமிழக உறவுகளுக்கு நன்றிகள்” என்ற அனந்தியின் வார்த்தைகள் அனைத்தும், அர்த்தம் பொதிந்தவை என்பது மட்டும் நிதர்சனம்!

நக்கீரன்