அமெரிக்காவினதும் அதன் கூட்டணி நாடுகளினதும் அனைத்துலகக் கொள்கை என்பது ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் வேறுபட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் அவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி அந்த நாடுகளில் தனது படையினரை நேரிடையாக களமிறக்குவது என்பது ஒரு உத்தி.

 

ஐரோப்பாவைச் சுற்றியுள்ள நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பை முன்நிறுத்துவது மற்றுமொரு உத்தி. அதனைத் தான் நேட்டோ படையினர் செய்துவருகின்றனர்.

 

அதேசமயம் ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மை இனங்களின் மீதான அரச வன்முறைகளை பயன்படுத்துவது மேலுமொரு மாற்று உத்தி.

 

அதாவது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் கிளை அமைப்புக்களில் ஒன்றான மனித உரிமைகள் பேரவை என்பவற்றின் சுயாதினத்தன்மை என்பது ஒரு மயையாகும், வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு அல்லது அழுத்தங்களுக்கு வழி ஏற்படுத்தும் அமைப்புக்களாகவே அவை செயற்பட்டுவருகின்றன.

 

எனவே தான் 2009 ஆம் ஆண்டு ஒரு முழு அளவிலான இனஅழிப்பை மேற்கொள்வதற்கு சிறீலங்கா அரசுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு ஐக்கிய நாடுகள் சபை வன்னியில் இருந்து விலகிக்கொண்டது. இதனை மறுவழமாகக் கூறுவதானால் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு ஆசீர்வாம் வழங்கிச் சென்றது ஐ.நா தான்.

 

அன்று அவர்களை வெளியேறவேண்டாம் என மன்றாடிக் கேட்டு போராடிய தமிழ் மக்களில் குழந்தைகள், பெண்கள் வயதானவர்ககள் என 40,000 இற்கு மேற்பட்டவர்கள் இன்று உயிருடன் இல்லை.

 

எனினும் இந்த இனப்படுகொலை இடம்பெற்று பத்து ஆண்டுகள் அண்மிக்கும் நிiயிலும்; படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தமிழ் மக்கள் ஐநாவின் முன் போராடி வருகின்றனர்.

 

ஆனால் தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை தனக்கு கிடைத்த பேரம்பேசும் பொருளாகப் பனப்டுத்தியுள்ளது அமெரிக்கா அதற்கு துணைவழங்கியுள்ளது அதன் மேற்குலகக் கூட்டணி.

 

அதன் வெளிப்பாடு தான் 40ஃ1 என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தின் மூலம் சிறீலங்கா அரசுக்கு மேற்குலகம் வழங்கியுள்ள மேலும் இரண்டு ஆண்டுகள் காலநீடிப்பு. அதாவது தற்போதைய சிறீலங்கா அரசுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதில் அமெரிக்கா வெற்றிகண்டுள்ளது. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு மக்கள் வழங்கிய ஆணையை புறம்தள்ளி ஆதரவளித்துள்ளது.

 

அது மட்டுமல்லாது இந்த தீர்மானத்தை கொண்டுவருவதற்கு உதவிய இணை அனுசரனைக்குழுவில் உள்ள நாடுகளின் பட்டியலை ஆராய்ந்தால் தமிழ் மக்களின் அனைத்துலக நடவடிக்கையில் ஏற்பட்ட தோல்வியை நாம் தெரிந்துகொள்ளலாம்.

 

ஏனெனில் கனேடிய நாடாளுமன்றத்திலும் சரி உள்ளுர் அரசியல் சபைகளிலும் சரி பல தமிழ் மக்கள் பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர், கனடா வாழ் தமிழ் மக்கள் கொண்டாடும் பொங்கல் விழாவிற்கு வந்து பொங்கல் பானையில் அரசிபோடுகின்றார் கனேடியப் பிரதமர், ஆனால் மறுபுறத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவருவதில் முன்னிற்கின்றது கனேடிய அரசு.

 

பிரித்தானியாவின் நிலையும் அதுவே இலட்சக் கணக்கில் தமிழ் மக்கள் வாழும் பிரித்தானிவில் பல முக்கியமான தமிழ் அமைப்புக்கள் உள்ளன, தமிழ் மக்களில் பலர் உள்ளூர் அரசியலில் உள்ளனர், தமிழ் மக்களின் விழாக்களுக்கு வந்து சிறப்பித்துச் செல்கின்றனர் பிரித்தானியா அரசியல்வாதிகள் ஆனால் அவர்களின் ஆதரவும் சிறீலங்கா அரசுக்கே உண்டு.

 

அதாவது புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தமிழ் மக்களும் ஒரு தவறான திசையில் தொடர்ந்து போராடிவருகின்றனர் என்பதையே இந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் உணர்த்துகின்றது. இதனை மறுவழமாகக் கூறினால் எமது போராட்ட உத்திகளை காலத்துக்கு காலம் மீள்ஆய்வு செய்வதில் நாம் தவறிழைத்துள்ளோம்.

 

விடுதலைப்புலிகளின் போராட்ட காலத்தில் ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டபோதும், தியாகி திலீபன், அன்னை பூபதி போன்றோர் மூலம் அகிம்சைப்போரும் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டது, அமைதிப்பேச்சுக்களின் போது தமிழ் மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்த இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தையும் சில சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகள் புறக்கணித்திருந்தனர். அதாவது தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை காண்பிப்பதற்கு அவர்கள் பல வழிகளை தெரிவுசெய்திருந்தனர்.

 

விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர் தமிழ் சமூகமே எதிர்காலத்தில் முன்னகர்த்த வேண்டும் என தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் 2008 – 2009 காலப்பகுதியில் விடுத்த கோரிக்கையை உள்வாங்கும் நடவடிக்கையில் புலம்பெயர் தமிழ் சமூகம் பின்தங்கியுள்ளது என்பது தற்போது வெளிப்படையாகியுள்ளது. எந்தவித நிபந்தனைகளுமின்றி சிறீலங்கா அரசுக்கு வழங்கப்பட்ட காலநீடிப்பு அதனையே காட்டுகின்றது.

 

புலம்பெயர் தேசத்தில் ஏற்பட்ட இந்த பின்னடைவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனக்கு சாதகமாக கடந்த 10 வருடங்களில் பயன்படுத்திவந்துள்ளது. எனவே தான் சிறீலங்கா அரசுடன் இணைந்து ஒரு சிங்களக் கட்சியாக அது தற்போது பகிரங்கமாகவே செயற்பட ஆரம்பித்துள்ளது.

 

அதாவது சிறீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்று தெரிவித்து கடந்த வாரங்களில் தமிழ் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களை எல்லாம் புறக்கணித்து சிறீலங்கா அரசுக்கு காலஅவகாசம் வழங்குவதற்கான ஆதரவுகளை பகிரங்கமாகவே வழங்கும் கட்சியாக கூட்டமைப்பு செயற்பட்டபோதும், அதன் உறுப்பினர்கள் ஜெனீவாவுக்கு வந்து போரினால் பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடும் தமிழ் மக்களின் வரிசையில் அமர்வதை நாம் அனுமதித்ததே எமது போராட்டத்தின் தோல்வியை வெளிப்பாடுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் எதிர்வரும் இரண்டு வருடங்களில் நாம் என்ன செய்யவேண்டும் என்பதே தற்போதைய கேள்வி?

 

புலம்பெயர் தமிழ் மக்கள் தமது தேசத்தில் உள்ள உள்ளூர் அரசியல் மற்றும் தேசிய அரசியலில் ஈடுபடும் தமிழ் உறுப்பினர்கள் தொடர்பில் மீள்ஆய்வு ஒன்றை மேற்கொள்ளவேண்டும். சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக செயற்பட்ட நாடுகளின் தலைவர்களை புறக்கணித்தல் அல்லது அவர்களுக்கான எதிர்ப்புக்களை தெரிவிப்பதன் மூலம் அவர்கள் மீதான அழுத்தங்களை ஏற்படுத்த முடியும்.

 

தற்போது தாயகத்தில் எழுச்சிபெற்றுவரும் மாணவர்கள் மற்றும் மக்களின் போராட்டங்களுக்கான தொடர் ஆதரவுகள் மற்றம் உதவிகளை வழங்குவதன் மூலம் தாயகத்தின் அரசியலில் ஒரு மாற்றத்திற்கான பாதையை ஏற்படுத்தமுடியும் என்பதுடன் தமிழ் மக்களின் விடுதலைப் போரை ஒரு உயிர்ப்பு நிலையிலும் வைத்திருக்க முடியும்.

 

புலம்பெயர் தமிழ் சமூகத்தில் ஒரு ஒருமித்த செயத்திட்டத்தை முன்னெடுக்கும் பணிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். வியாபார ஊடகங்களை புறம்தள்ளி தேசிய ஊடகங்கள் உயிர்பெறவேண்டும், அதன் மூலம் தான் உண்மையான செய்திகளை மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்பதுடன் ஏமாற்றும் அரசியல் கட்சிகளையும் இனங்காண முடியும்.

 

அதாவது எதிர்வரும் இரண்டு வருடங்களில் நாம் மேற்கொள்ளப்போகும் திட்டங்களில் தான் சிறீலங்கா அரசை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் கொண்டுவருவதும், நாம் ஒரு காத்திரமான அரசியல் தீர்வை நோக்கி நகர்வதும் தங்கியுள்ளது.

 

நன்றி: இலக்கு (24-03-2019)