முன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்

0
2026

தமிழ் மக்களின் விடுதலைப்போரை முறியடிக்கவும், வடக்கு கிழக்கு என இணைந்த தமிழர் தாயகத்தை கூறு போடுவதற்கும் ஏதுவாக சிறிலங்கா அரசுகள் காலம் காலமாக முஸ்லீம் சமூகத்தை தமிழ் மக்களுக்கு எதிராக களமிறக்கியதை நாம் அறிவோம்.

 

சிறீலங்கா படையினரின் பராமரிப்பு, ஆயுதப்பயிற்சி மற்றும் காவல் என சகல வசதிகளுடனும் கிழக்கில் இயங்கிய முஸ்லீம் தீவிரவாதக்குழுக்கள் பெருமளவான தமிழ் மக்களை படுகொலை செய்ததுடன், பெருமளவான தமிழ் கிராமங்களை அழித்தும், தமிழ் மக்களின் தொன்மையான கலாச்சார வரலாற்று மையங்களை சூறையாடியும் வந்திருந்தனர்.

 

இந்த தீவிரவாதக் கும்பலுக்கு துணைபோன முஸ்லீம் அரசியல்வாதிகள் தென்னிலங்கை சிங்கள அரசுடன் இணைந்து வடக்கு கிழக்கு இணைப்பை பிரிப்பதற்கு துணைபோனதுடன், மீண்டும் ஒரு இணைப்புக்கு உரியை வழியையும் அடைத்து நிற்கின்றனர்.

 

தமிழ் மக்களுக்குள் ஊடுருவி அவர்களின் போராட்டத்தை அழிக்கவும், தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யவும் முஸ்லீம் சமூகத்தினரை தனக்கு ஒரு கேடையமாக பயன்படுத்தி வந்தது சிங்கள அரசு. எனவே தான் சிறீலங்காவின் புலனாய்வுக் கட்டமைப்புக்குள் பெருமளவான முஸ்லீம் சமூகத்தினர் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

 

தமிழ் மக்களின் படுகொலைகளில் அவர்களின் பங்குகள் மிக மிக அதிகம். ஆனால் போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்கா அரசினால் பயிற்சி அளிக்கப்பட்ட முஸ்லீம் தீவிரவாதிகள் தமது அடுத்த பரிணாமத்திற்குள் சென்றுவிட்டதை சிறீலங்கா அரசு கண்டறியத் தவறிவிட்டது. அதற்கான காரணம் முஸ்லீம் புலனாய்வாளர்களை நம்பியிருந்ததன் விளைவாகக் கூட இருக்கலாம்.

 

ஆனால் தற்போது மீண்டும் பழைய இராஜதந்திரத்தை பயன்படுத்த சிங்கள தேசம் முற்பட்டுநிற்கின்றது. முன்னாள் போராளிகளை துணைக்கு அழைப்பதன் மூலம் சிங்களத்திற்கும் முஸ்லீம் சமூகத்திற்கும் இடையில் தோற்றம் பெற்றுள்ள முறுகல் நிலையை மடைமாற்றிவிட எத்தனிக்கின்றது சிறீலங்கா அரசு.

 

முஸ்லீம் சமூகத்துடன் மற்றுமொரு மேதலுக்கு போவது தனது இருப்பை பலவீனப்படுத்தும் என்பதுடன் தென்னிலஙகை அரசியலிலும் எதிரொலிக்கும் என்பது சிறீலங்கா அரசுக்கு நன்கு தெரியும், இரு சிறுபான்மை இனங்களுடனும் மோதுவது பௌத்த பேரினவாத சிங்களத்திற்கு மிகப்பெரும் ஆபத்துக்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம் எனவே தான் தந்திரமாக தமிழர் தரப்பை இந்த மோதல்களுக்குள் இழுத்துவிட சிங்களம் முன்னிற்கின்றது.

 

அதற்கு ஏதுவாக யாழில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா இராணுவத்தின் 51 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட் போராளிகளை அழைத்து தேனீரும், பலகாரங்களும் கொடுத்து கொம்பு சீவிவிட முனைந்து நிற்கின்றது.

 

சிறீலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலையானது தமிழ் மக்களுக்கு பலத்த உயிரிழப்புக்களை ஏற்படுத்தினாலும், அரசியலில் ஒரு சாதகமான சூழ்நிலையை அது தோற்றுவித்துள்ளது. சிங்களம் தற்போது அந்தரத்தில் தொங்குகின்றது. இந்த சந்தர்ப்பத்தை மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி நாம் எமக்கான வலுவான தளம் ஒன்றை உருவாக்க முடியும். ஆனால் அதனை மேற்கொள்ளக்கூடிய அரசியல் பலம் தாயகத்திலும், புலத்திலும் எம்மிடம் இல்லை.

 

ஆனாலும் நாம் முயற்சி எடுப்போம், அதுவரை போராளிகளே சிங்களத்தின் சூழ்ச்சி வலைக்குள் வீழ்ந்து ஒரு ஒட்டுக்குழு என்ற நிலைக்கு செல்லாதீர்கள். சிங்கள அரசின் தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க சொல்லுங்கள், தமிழர் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை அகற்றச் சொல்லுங்கள், காணிகளை விடுவிக்கச் சொல்லுங்கள், தமிழர் தாயகத்தில் இருந்து படையினரை அகற்றச் சொல்லுங்கள் அதன் பின்னர் உதவி கேட்டு வரச்சொல்லுங்கள் ஆனால் அவர்கள் வரப்போவதில்லை. ஏனெனில் எம்மை அடிமைகளாக வைத்திருப்பதும், அடியாட்களாக பாவிப்பதுமே இந்த ஒன்று கூடலுக்கு அழைத்ததன் நோக்கம்.

 

ஈழம் ஈ நியூஸ் ஆசிரியர் தலையங்கம்.