sindhurakஇரண்டாவது விமானம் தாங்கி கப்பலின் வரவுடன் மிகவும் கோலாகாலமாக தனது 67 ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடி, அதனை அரசியல் இலாபமாக்கலாம் என்ற கனவில் மிதந்த இந்திய ஆளும் கட்சியின் கனவை, கடந்த புதன்கிழமை (14) இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் சிந்துரக்சக் நீர்மூழ்கிக்கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு தகர்த்துவிட்டது.

மும்பபையில் உள்ள இந்திய கடற்படைத் தளத்தில் கட்டப்பட்டிருந்த இந்த நீர்மூழ்கிக்கப்பலில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் கப்பல் பகுதியாக கடலில் மூழ்கியதுடன், அதில் இருந்த கடற்படையினரில் 18 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இது 1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்திய – பாகிஸ்த்தான் போருக்கு பின்னர் இடம்பெற்ற மோசமான இழப்பாகும். வெடிப்பதிர்வினால் ஏற்பட்ட பெரும் தீச்சுவாலையை தொடர்ந்து அருகில் இருந்த கடற்படைக் கப்பல்களில் இருந்தவர்களும் கடலில் குதித்து தப்பியுள்ளனர்.

கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த டோபிடோ (torpedoes) வகை ஆயுதங்கள் உட்பட ஏனைய ஆயுதங்களின் நிலை குறித்த தகவல்கள் இல்லை. விரைவாக தீப்பற்றும் திறன் கொண்ட ஐதரசன் வாயுவைக் கொண்ட மின்கலங்களிற்கு மின்னேற்றும் போது ஏற்பட்ட ஐதரசன் வாயுக் கசிவினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக இந்திய கடற்படையின் பிரதம அதிகாரி அருன் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு ரசியாவில் கட்டப்பட்ட (Type 877EKM) 16 வருடங்கள் பழமையான இந்த நீர்மூழ்கிக்கப்பலானது கடற்படைக் கப்பல்களை பாதுகாத்தல், வேவுத்தகவல்களை சேகரித்தல், எதிரி இலக்குகளை தாக்கி அழித்தல் என பல்நோக்கு பயன்பாடுள்ளது. இந்தியா வசம் உள்ள 14 நீர்மூழ்கிக் கப்பல்களில் இது முக்கியமானது. ஓவ்வொன்றும் 250 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த வகையைச் சேர்ந்த 10 நீர்மூழ்கிகள் இந்தியா வசம் உள்ளன, ஏனையவை ரைப்-209 வகையை சேர்ந்தவை.

சீனாவிடம் 50 இற்கு மேற்பட்ட நீர்மூழ்கிகளும், அமெரிக்காவிடம் 100 இற்கு மேற்பட்ட நீர்மூழ்கிகளும் உள்ளன (கட்டப்பட்டுக் கொண்டு இருப்பவை உட்பட).

2010 ஆம் ஆண்டு இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு கடற்படை வீரர் கொல்லப்பட்டதுடன் சிலர் காயமடைந்திருந்தனர், இதனைத்தொடர்ந்து சிந்துரக்சக் கப்பலானது ரஸ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டு 80 மில்லியன் டொலர்கள் செலவில் புனரமைக்கப்பட்ட போது, கப்;பல் மேலும் 10 வருடங்கள் சேவையாற்றும் என தெரிவிக்கப்பட்டது, ஆனால் தற்போது அது முற்றான அழிவைச் சந்தித்துள்ளது.

இந்திவின் ஐ.என்.எஸ் சிந்துரக்சக் (Sea giant) கப்பலானது 2010 ஆம் ஆண்டு ரஸ்யாவின் முன்னனி கப்பல் கட்டும் நிறுவனத்தில் (ணுஎநணனழஉhமய (Zvezdochka (Starlet) shipyard) புனரமைப்பு செய்யப்பட்டபோது, அதன் தாக்குதல் வலுவானது பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.
sindhurakshak-600-jpg
நவீன ஏவுகணைகள், ராடார் தொகுதிகள் மற்றும் இலத்திரனியல் சாதனங்கள் பொருத்தப்பட்டதுடன், இந்திய கடற்படையின் தாக்குதல் கலன்களின் முதுகெலுப்பாக இது வர்ணிக்கப்பட்டது. டீசல் இயந்திரத்தைக் கொண்ட இந்த கப்பலானது எஸ் எஸ் கே கிலோ (SSK Kilo Class) வகையை சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பலாகும்.

ரஸ்யக் கப்பல்களில் உள்ள பல தரப்பட்ட ஏவுகணைத் தொகுதிகளைக் (Club-S multi-role missile system) கொண்ட அமைப்பு இந்த கப்பலில் பொருத்தப்பட்டதுடன், அதன் போர்த் தகமையும் இலத்திரனியல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் 250 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள எந்த இலக்கையும் இலகுவாக தாக்கி அழித்துவிட முடியும்.

சிந்துரக்சக் கப்பலில் பொருத்தப்பட்ட முக்கிய ஆயுதங்கள் வருமாறு:

3எம்-54ஈ – கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை – ஒலியை விட வேகமான மற்றும் 200 கி.மீ தூர வீச்சுக் கொண்ட இந்த ஏவுகணை 200 கிலோ வெடிமருந்தை காவிச் செல்லக்கூடியது.

3எம்-54ஈ1 – கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை – ஒலியை விட வேகமான மற்றும் 300 கி.மீ தூர வீச்சுக் கொண்ட இந்த ஏவுகணை 400 கிலோ வெடிமருந்தை காவிச் செல்லக்கூடியது.

3எம்-14ஈ – தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை – ஒலியை விட வேகமான மற்றும் 275 கி.மீ தூர வீச்சுக் கொண்ட இந்த ஏவுகணை 400 கிலோ வெடிமருந்தை காவிச் செல்லக்கூடியது.

91ஆர்ஈ1 – நீர்மூழ்கிக்கப்பல்களை தாக்கி அழிக்கும் கடலடி ஏவுகணை.

இவை தவிர ரஸ்ய – இந்தியத் தயாரிப்பான பிரமோஸ் (BrahMos) ஏவுகணையையும் இதில் பயன்படுத்த முடியும். 290 கி.மீ தூரவீச்சும், 300 கிலோ வெடிமருந்தை காவிச்செல்லும் திறனும் கொண்ட இந்த ஏவுகணை ஒலியைவிட 2.8 மடங்கு வேகமாகச் செல்லக்கூடியது. இதனை தரையில் உள்ள இலக்குகள், கடலில் உள்ள இலக்குகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றை அழிப்பதற்கு பயன்படுத்த முடியும்.

இந்த ஏவுகணைகள் ரடார்களில் இருந்து தப்பும் உத்திகளை கொண்டவை அல்லாத போதும், நவீகன கடற்படைக் கப்பல்களில் உள்ள ராடார்களின் தூரவீச்சில் இருந்து தப்பும் பொருட்டு மிக்குறைந்த உயரமாக 5 தொடக்கம் 10 மீற்றர் உயரத்தால் சென்று தாக்கக்கூடியவை. நீர்மூழ்கிகளை தாக்கும் ஏவுகணைகளும் கடலின் மேற்பரப்பில் இருந்து 40 மீற்றர் ஆழத்தால் சென்று தாக்கும் திறன் கொண்டவை.

இதனிடையே, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கியான ஐ.என் எஸ் அரிகன்ட (INS Arihant) என்ற இந்தியத் தயாரிப்பு நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா கடந்த 10 ஆம் நாள் தனது கடற்படையில் இணைத்திருந்தது.
எனினும் கடந்த வருடம் ரஸ்யக் கடற்படையினரின் ஐ.என்.எஸ் சக்ரக் (INS Chakra) என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை 10 வருடங்கள் வாடகைக்கு 60 பில்லியன் ரூபாய்களுக்கு இந்தியக் கடற்படை எடுத்திருந்ததன் மூலம் அமெரிக்க, பிரித்தானியா, ரஸ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் படைத்துறை வல்லமையுடன் இந்தியாவும் தன்னை இணைத்திருந்தது. இந்தியாவின் ஆயுதவளங்களில் 70 விகிதமானவை ரஸ்ய உற்பத்தியாகும்.

அணு ஆயுத ஏவுகணைகளை கொண்ட இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கியானது கண்டம் விட்டு கண்டம் பாயும் (ballistic missiles) ஏவுகணைகளை ஏவக்கூடியது. இதுவரையில் தரையில் அல்லது ஆகாயத்தில் இருந்தே இதனை ஏவும் திறன் கொண்ட இந்திய படையினர் இந்த நீர்மூழ்கியின் வரவுடன் கடலில் இருந்தும் ஏவும் தரத்தை பெற்றுள்ளனர்.

இந்த கப்பலில் பணியாற்றும் கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பை ரஸ்யாக் கடற்படை ஏற்றுக்கொண்டுள்ளது. எதிரியின் கண்களில் படாமல் நீண்ட காலம் கடலின் அடியில் பயணிக்கும் இந்த கப்பலில் 100 கடற்படையினர் வரை பணியாற்ற முடியும்.

எதிர்வரும் இரண்டு வருடங்களில் இந்த கப்பலானது இந்திய கடற்படையில் இணையும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ள போதும், சிந்துரக்சக் நீர்மூழ்கியின் விபத்து இந்திய கடற்படையினருக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்துள்ளது.

மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும், பாதுகாப்புச் செலவினத்தையும் கொண்ட இந்தியாவுக்கு நீர்மூழ்கிக் கப்பலின் இழப்பு பேரிழப்பு என்பது ஒருபுறம் இருக்க, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களில் இவ்வாறான விபத்துக்கள் ஏற்பட்டால் அதன் மூலம் ஏற்படும் கதிர்வீச்சு பாதிப்புக்களை தடுக்கும் சக்தி உள்ளதா என்பது கேள்விக்குறியானதே.

ஏனெனில் இதுவரையில் 21 இற்கு மேற்பட்ட நீர்மூழ்கி விபத்துக்கள் ஏற்பட்டபோதும் அவற்றில் கணிசமானவை அணுசத்தி நீர்மூழ்கிகளில் ஏற்பட்டவை. அண்மையில் பிரித்தானியாவின் போஸ்மத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த யூ எஸ் எஸ் மியாமி என்ற அணுசக்திக் கப்பலில் ஏற்பட்ட விபத்தின் போது அதில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்களின் பாதிப்பு தொடர்பாகவே அதிக கவனம் செலுத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஈழம் ஈ நியூசிற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்