முள்ளிவாய்க்கால் முற்றத்தின் கட்டுமானங்களை இடித்தழித்தமை காட்டுமிராண்டித்தனமான செயல்: தமிழ் மக்கள் பேரவை, யாழ்.மாவட்டம்

0
625

muttam-oiதஞ்சையில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் கட்டுமானங்களை தமிழக அரசு தகர்த்தெறிந்தமையானது தமிழர் தாயகத்திலுள்ள மக்களை கடும் கவலையடையச் செய்துள்ளது என்று யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்தழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையானது தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தமிழர்களில் அதிக அக்கறை காட்டுவது போன்று நடித்துக்கொண்டு தமிழின விரோதப் போக்கை கடைப்பிடிக்கின்றாரோ என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என்றும் மேற்படி பேரவை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த மனிதாபிமானமற்ற செயலை தாங்கள் மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும் இந்தப் பேரவை தெரிவித்துள்ளது.

ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் அண்மைக் காலமாக தமிழக சட்ட சபை காத்திரமான சில தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தது. இந்தத் தீர்மானங்களுக்கு மூல காரணமாக இருந்தவர் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் ஆவார். ஆனால், தமிழின அழிப்பின் சின்னமாக தமிழகத்தில் அமைக்கப்பட்ட நினைவிடம் ஒன்றை தகர்ப்பதற்கு அவர் எடுத்த நடவடிக்கையானது ஈழத்திலுள்ள தமிழ் மக்களுக்கு தமிழக முதல்வர் மீது நம்பிக்கையீனத்தைத் தோற்றுவித்துள்ளது என்றும் தமிழக அரசின் மீது வெறுப்படைய வைத்துள்ளது என்றும் யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக யாழ்.மாவட்ட தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் சிறிலங்கா அரசிடம் நீதி கேட்டு கடந்த முப்பது வருடங்களாக போராடிய போதிலும் இறுதியாக அவர்களுக்கு அழிவுகளே எஞ்சியிருக்கின்றன. ஆனாலும் அவர்கள் இன்று வரை தமது சுதந்திரத்திற்காக போராடி வருகின்றனர். போராட்ட வடிவங்கள் மாறலாம் போராட்ட இலட்சியம் மாறாது என்பதற்கிணங்க அவர்கள் தற்போது தங்கள் விடுதலை நோக்கிய போராட்டத்தை வேறு மார்க்கத்தினூடாக நகர்த்திக்கொண்டிருக்கின்றனர்.

மூன்று தசாப்த காலமாக போராடிய தமிழ் மக்கள் இறுதியில் முள்ளிவாய்காலில் அழிக்கப்பட்டமையை நினைவுபடுத்துவதற்காக மூன்று வருடங்களாக கஸ்டப்பட்டு தஞ்சையில் அமைக்கப்பட்ட நினைவு முற்றம் திறக்கப்பட்டு மூன்று நாட்களில் தமிழக அரசு அதனை இடித்தழிக்க முயன்றுள்ளது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்ட குறித்த கட்டுமானங்கள் உண்மையிலேயே சட்டத்திற்கு புறம்பானவையாக அல்லது வீதிப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்திருக்குமாயின் அதனை கட்டும்போது தடுத்திருப்பது தான் முறையானது. ஆதற்கு மாறாக அதுவும் ஒரு மாநில அரசாங்கமானது ஆலயம் போன்று பாதுகாக்கப்படவேண்டிய நினைவிடமொன்றை அழிக்க முயற்சியெடுப்பது காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு ஒப்பானது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

தள்ளாத வயதிலும் தளராத தமிழின உணர்வுடன்; இருக்கின்ற பழ.நெடுமாறன் ஐயாவின் சிந்தனையில் உதித்து செயல்வடிவம் பெற்ற குறித்த கட்டுமானங்களை சிதைத்தது போதாதென்று அவரையும் சிறையில் அடைத்திருக்கின்ற தமிழக அரசாங்கமானது உண்மையிலேயே ஒரு பகட்டுத்தனமான அரசாங்கமாகும். தமிழ் மக்களுக்கு உதவி செய்கின்றேன் என்று காட்டிக்கொண்டு மறு பக்கம் தமிழின அழிப்பிற்கு துணைபோன சோனியா காந்தி போன்று ஜெயலலிதா அம்மையாரும் மாறிவிட்டாரோ என்றே நாங்கள் எண்ணத் தோன்றுகிறது.

இங்கே தாயகத்தில் தமிழ் மக்களை அழித்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தொடர்ந்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்ற இந்த வேளையில் அங்கே தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களின் நினைவிடத்தை அழிக்க முயற்சியெடுக்கப்பட்டிருக்கின்றது. உணர்வுள்ள எந்தவொரு தமிழர்களும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எனவே, எமது மக்களின் நினைவிடமாக தமிழகம் தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தின் நுழைவாயில்கள் மற்றும் சுற்றுப்புறச் சுவர்களை இடித்தழித்த தமிழக அரசாங்கத்தின் செயலை நாங்கள் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனை ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு ஒப்பிடுகின்றோம். தமிழக அரசு தான் செய்த பிழையை ஒப்புக்கொண்டு இந்தச் செயலுக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அத்துடன் தன்னால் அழிக்கப்பட்ட குறித்த கட்டுமானங்களை உடனடியாக அரச செலவில் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

இதனைவிட, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் கட்டுமானங்களை இடித்தழித்த போது அதனைத் தட்டிக்கேட்ட பழ.நெடுமாறன் ஐயா உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளமையும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, இவர்களை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நாம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

தமிழ் மக்கள் பேரவை
யாழ்.மாவட்டம்.
15.11.2013