sla-jaffnaசிறீலங்காவில் இடம்பெற்ற போர் நிறைவடைந்த பின்னர் அங்கு இனங்களுக்கு இடையே நல்லிணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்தப்போவதாக கூறி அனைத்துலக சமூகத்தை ஏமாற்றிவரும் சிறீலங்கா அரசு பல்வேறு வழிகளில் தமிழ் இனத்திற்கு எதிரான இனஅழிப்புக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. இந்த இனஅழிப்பின் ஒரு வடிவம் குறித்து அண்மையில் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் சார்பில் அதன் தலைவர் அருள்திரு S.V.B. மங்களராஜா அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் முழுமையான வடிவத்தை ஈழம்ஈநியூஸ் இங்கு தருகின்றது.

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் வகை தொகையின்றி பல்லாயிரக்கனக்கில் அழிக்கப்பட்ட பின்னரும் வேறு வடிவத்தில் இவ்வின அழிப்பு வடபகுதியில் தொடர்வது மிகவும் வேதனைக்குரிய விடயம் இதற்கு அண்மையில் (30, 31.08.2013) கிளிநொச்சி மாவட்டத்தில் வடமேற் கரையோரப் பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் (வலைப்பாடு, வேரவில், கிராஞ்சி) அரங்கேறிய விவகாரம் தெளிவான சான்றாகும்.

இறுதிப் போரினால் பாதிக்கப்பட்டு மீளவும் தமது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முயன்றுகொண்டிருக்கும் பின்தங்கிய இக்கிராமங்களின் பெண்கள் ஒருவிதத்தில் கட்டாய கருத்தடைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 30ம் நாள் வேரவில் வைத்தியசாலைப் பணியாளர்கள்; மேற்குறிப்பிட்ட மூன்று கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளையுடைய தாய்மார் அடுத்த நாள் அவர்களுடைய குழந்தைகளின் நிறையை எடுப்பதற்கும் தடுப்பூசி பெறுவதற்கும் வேரவில் வைத்தியசாலைக்கு வரவேண்டும் என அறிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 31ம் நாள் கிளிநொச்சியிலிருந்து வந்த 20க்கும் மேற்பட்ட தாதியர்களும் மற்றும் மருத்துவமாதர்களும் வந்து இப்பகுதியில் வீடுவீடாகச் சென்று வேரவில் வைத்தியசாலைக்கு வரும்படி அழைத்துள்ளனர். இவர்களை குறிப்பிட்;ட வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்க 2 நோயாளர் காவி வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

43 வயதுப் பெண் ஒருவரின் கூற்றுப்படி ‘ஒரு மருத்துவ பணியாளர் எனது வீட்டுக்கு வந்து எனது 5 வயதுக்குட்பட்ட குழந்தையின் நிறையை எடுப்பதற்காக கிளினிக் காட்டுடன் வைத்தியசாலைக்கு வரும்படி சொன்னார். அதற்கு நான் எனது குழந்தை நற்சுகத்துடன் தான் உள்ளார் என்றேன். அதற்கு அந்த பெண் பணியாளர் ஒரு சிறப்பு தகைமை மருத்துவ ஆராய்;ச்சிக்குழுவினர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருந்து வந்துள்ளார்கள் என்றும் அவர்கள் விசேட நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றும் கூறினார். நானும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலிருந்து வரும் ஒரு சிறப்பு நிபுணர் வைத்தியக்குழுவின் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது தான் என்று கருதினேன். அவர்கள் உண்மையில் எதற்காக வந்தார்கள் என்பதன் உள்நோக்கம் எனக்கு தெரிந்திருக்கவில்லை.

வைத்தியசாலைக்கு வந்ததும் அங்கு ஏற்கனவே வந்திருந்த வைத்தியர்களும் தாதியரும் எங்களை இந்த குடும்ப கட்டுப்பாட்டு முறைக்குட்படுமாறு வற்புறுத்தினர். இதன்படி குறிப்பிட்ட பெண்களின் கையின் மேற்புறத்ததில் ஒரு சிறிய உள்ளீடு அல்லது ஒரு சிறிய ‘சிப்’ உட்செலுத்தப்படும். (Progestogen-only subdermal implants (POSDI): a long term hormonal birth control inserted under the skin of a woman’s upper arm.) இதற்கு முன்னதாக இந்த வைத்தியக்குழுவினர் இப் பெண்களிடம் என்னென்ன குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடிப்பதாகக் கேட்டுள்ளனர். இதற்கு அங்கிருந்த கணிசமான தொகையினர் தாம் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதாக கூறினர். இதற்கு அந்த வைத்தியக் குழுவினர் தாம் அறிமுகப்படுத்தும் மேற்குறிப்பிட்ட முறையானது கருத்தடை மாத்திரைகளை விடச் சிறப்பானதென்றும் உடல் எடை இழப்பு மற்றும் பக்க விளைவுகள் எதுவும் அற்றது என்றும் கூறினர்.

துவக்கத்தில் இப் பெண்;கள் இப்புதிய கருத்தடை முறையை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இதற்கு அங்கு வந்திருந்த மருத்துவ தாதியர் இவ்வாறு பிடிவாதமாக மறுத்தால் அவர்களுக்கு இனி வரும் காலத்தில் எதுவித மருத்துவ உதவிகளும் வழங்கப்படாது என்று எச்சரித்தனர்.

இன்னுமொரு 43 வயது ஆசிரியை தனது அனுபவத்தை பற்றி கூறும் போது சொன்னார். ‘அவர்கள் எனது மகளது நிறையை பார்த்து அவரது ‘கார்ட்டில்’ பதிந்த பின் அதனை திருப்பி கொடுக்கவில்லை 2 மணித்தியாலயம் வரை காத்திருந்தேன் அந்த ‘கார்ட்டை’ அவர்கள் தாராததால் வீட்டில் இருந்த எனது மற்ற மகளைப் பற்றிய கவலையேற்பட்டது. அங்கிருந்த தாதியர் மற்றப் பெண்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பலவற்றையும் கூறி அந்தப் பெண்களை ஏதோ விடயமாக நம்பவைக்க முயன்று கொண்டிருந்தனர். இவ்வாறாகச் சிலரை வைத்தியரிடம் அனுப்பிக் கொண்டிருந்தனர். சிலர் வைத்தியரின் அறையில் இருந்து வெளிவரும் போது கையில் பெரிய கட்டுடன் வெளிவருவதைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாகவிருந்தது. திருப்பவும் நான் ஒரு தாதியிடம் சென்று எனது ‘கிளினிக் கார்ட்டை’த் தருப்படி கேட்டதற்கு அவர்கள் இன்னும் கொஞ்ச நேரம் பொறுக்கும் படி கூறினர். இன்னும் அரை மணித்தியாலயத்தின் பின் மீண்டும் எனது ‘கார்ட்டை’ கேட்டேன்.

அவர் சினந்து கொண்டு என்னை அடுத்ததாக வரும்படி கூறினர். அவர்கள் முன்னே சென்று அமர்ந்த போது அவர்கள் எனது வயதை கேட்டபின் நான் கடைப்பிடிக்கும் மகப்பேற்று முறைகள் மற்றும் அது தொடர்பான விடயங்களையும்; கேட்டறிந்தனர் நான் கடைப்பிடித்த குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளையும் பற்றிக் கேட்டனர் நான் எனது பதிலில் எனது மாதவிலக்குச் சக்கரத்தின்படி இயற்கை முறைகளையே கடைப்பிடிப்பதாக கூறினேன். அதற்து அவர்கள் நகைத்தவாறே 43 வயதில் கருவுற்றால் ஒரு குறைபாடுள்ள சிசுவையே பெறமுடியுமென்றனர். அதற்கு நான் பதிலாக நான் கருவுற்றால் அது கடவுள் விருப்பம் என்று கூறி அவர்களுடன் விவாதித்தபோது அங்கிருந்த தாதி என்னை தனது மேலதிகாரியிடம் அனுப்பவும் அவருக்கும் நான் ஏற்கனவே கூறியதையே கூறினேன். இவரின் வார்த்தைகள் மிகவும் கடுமையாக இருக்கவே நான் அச்சமுற்றேன்.

புரியாவிட்டாலும் இக்கருத்தடை முறைக்குட்படுமுன் நான் எனது கணவரது உத்தரவை பெறவேண்டுமென்றேன். அவர்கள் அதற்கு எனக்கு 5வருடங்களுக்கு குழந்தை பெறமுடியாது இருக்கும் என்றார்கள். அத்துடன் இக்கருத்தடை முறைதான் சிறந்தது என்றும் இதற்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என்றும் கூறினர். அதற்கு நான் எனது கணவரது உத்தரவு பெறாது இதற்கு நான் உடன்பட்டால் அவர் என்னை விட்டு பிரியக்கூடிய சந்தர்ப்பம் நிறைய உண்டு என்றேன். அவர்களுடைய கருத்தடை திட்டத்திற்கு எனது மறுப்பை எழுத்தில் தருவதாதக கூறினேன். அத்துடன் எமது திருமணநாளிலிருந்து கடைப்பிடித்து வந்த முறைகளையே நான் கடைப்பிடிக்க விரும்புகிறேன் என்று கூறி ஒரு துண்டுப் பேப்பரில் நான் கூறியபடியே எழுதிக் கையெழுத்து வைத்துக் கொடுத்துவிட்டு எனது மகளுடன் வெளியேறினேன். அன்றைய தினம் வழமையாக அங்கு வரும் வைத்தியரை நான் காணவில்லை. முதல் நாள் பிற்பகல் அவர் நான் பணிபுரியும் பாடசாலைக்கு வந்து பல வைத்தியர்களைக் கொண்ட ஒரு பெரிய குழுவினர் கிளிநொச்சியிலிருந்து ஏதோ ஒரு ஆராய்ச்சிக்காக வரவிருப்பதாகவும் அவர்களுக்கு (சமைப்பதற்காக) பெரிய சட்டி பானைகள் தேவையென்றும்; கேட்டிருந்தார். அவருக்கு இன்று இந்த வைத்திய சாலைகளில் நடக்க விருப்பது என்னவென்று தெரிந்திருக்கும் என்று எனக்கு தெரியாது.
Rajappux413
அங்கு வந்திருந்த தாய்மார் அங்கு வந்த வைத்தியக் குழுவினருடன் பேசிய பின் இந்த புதிய கட்டுப்பாட்டு முறைபற்றித் தங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை யென்றும் தாம் இந்த குடும்பக் கட்டுப்பாட்டுக்குட்படுவதாயின் தத்தம் கணவர்களது உத்தரவு பெறவேண்டும்மென்றும் குறிப்பிட்டனர். அதற்கு அந்த வைத்தியக் குழுவினர் தாம் சொல்வதைக் கேட்டு அதன்படி இக் குடும்ப கட்டுப்பாட்டு முறைக்குட்பட மறுத்தால் அவர்களது கணவர்கள் அவ்விடம் கூட்டி வரப்பட்டு அதுபோன்று ஒரு குடும்ப கட்டுப்பாட்டு முறைக்கு அவர்களது கணவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்று கூறினர். இதனைக் கேட்ட பின் அங்கிருந்த பெண்களுள் பலர் பயத்தால் அக்குடும்ப கட்டுப்பாட்டு முறைக்குட்படுவதற்கு உடன்பட்டனர்.

இந்தக்குடும்பக் கட்டுப்பாட்டு முறைக்குட்படுத்தப்பட்ட இன்னுமொரு பெண்ணுக்கு 36வயது இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். முதல் பிள்ளைக்கு 3வயதாகிறது, அடுத்த பிள்ளை 8மாதக்குழந்தை. அங்குள்ள வைத்தியசாலைப் பணியாளர்கள் தன்;பிள்ளைகளுடன் கிளினிக் கார்ட்டையும் கொண்டு குழந்தைகளின் எடையைப் பார்ப்பதற்கு வரும்படி கூறினர். அத்துடன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலிருந்து வைத்திய நிபுணர்கள் வருவதாகவும் கூறினர். இவ்வாறாக சிறப்பு நிபுணர்கள் வருவதையிட்டு மகிழ்ச்சியடைந்தேன் என்றும் இப் பெண் கூறினார். வைத்தியசாலைக்கு சென்றதும் குழந்தைகளின் எடையை எடுத்து குறித்த பின் எங்களை காத்திருக்கும்படி சொன்னதாகவும் அவர் கூறினார்.

மேலும் இப்பெண் கூறினார், ‘எனது முறைவந்ததும் நான் போனபோது அவர்கள் மேலும் குழந்தைகள் பெறாமல் இருப்பதன் நன்மைகள் என்னவென்றும் இருக்கும் இரண்டு பிள்ளைகளுடன் நான் மிகவும் வசதியாக வாழலாம் என்றும் கூறினர். இதனால் நான் குழப்பமடைந்து தீர்மானம் எடுக்க முடியாதிருந்த போது அவர்கள் என்னை வைத்தியரிடம் அனுப்பினர். அவ் வைத்தியர் என்னுடன் நன்றாகத்தான் பேசினார். அவர் என்னிடம் அமெரிக்காவிலும் மற்றும் இலங்கையில் படித்தவர்களும் இந்த குடும்ப கட்டுப்பாட்டு முறையைதான் தெரிந்தெடுக்கின்றனர் என்றார். இவ்வாறாக எனது இரண்டு பிள்ளைகளும் நன்கு கவனிக்கப்படுவார்கள் என்றார். நான் என்ன பதில் சொல்வது? மிகவும் படித்த இவர்களுடன் நான் எவ்வாறு விவாதிக்க முடியும் எனவே தயக்கத்துடன் இந்த குடும்பக்கட்டுப்பாட்டு முறைக்குட்பட்டேன். சில நாட்களுக்குப் பின் இந்த குடும்பக்கட்டுப்பாட்டு உள்ளீடு செலுத்தப்பட்ட இடத்தில் கடும் நோவு ஏற்பட தொடங்கியது. இதனால் நான் வைத்தியசாலைக்கு சென்றபோது அவர்கள் அதற்கு மருந்து தந்தனர்.

ஆனால் நான் எனக்கு இந்த குடும்பக்கட்டுப்பாட்டு உள்ளீட்டை செலுத்திய வைத்தியரை காண விரும்பியும் அவர் அங்கு இருக்கவில்லை அங்கிருந்த மற்ற வைத்தியர் அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். ஆனால் எனது நோவு விரைவில் குணமாகும் என்றார். ஆனால் இன்னும்; அது குணமாகவில்லை. படித்தவர்கள் எவ்வாறு எங்களுக்கு இவ்வாறு செய்யலாம்? அவர்கள் இதைப்பற்றி சிந்தித்து முடிவெடுக்க எங்களுக்குக்காலஅவகாசம் தந்திருக்கலாம். அவர்கள் எங்களை அந்த இடத்தில் வைத்தே உடன் முடிவு எடுக்கும் படி வற்புறுத்தினார்கள். அவர்கள் எங்களுக்கு நன்மை செய்ததாகத்தெரியவில்லை. அவர்களால் நான் ஏமாற்றப்பட்டு விட்டேன’ என்றும் கூறினார்.
idp-tamils
வலைப்பாட்டிலிருந்து வந்த இன்னுமொரு இரு குழந்தைகளின் தாயாகிய 28 வயது பெண் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளையுடைய தாய்மார் எல்லோரையும் கிளினிக் கார்ட்டுடன் அங்குள்ள முன் பள்ளியண்டை வரும்படி கேட்கப்பட்டோம். ஏறக்குறைய 30 தாதியர், மருத்துவ மாதுக்கள் மற்றும் வைத்திய அலுவலர்களும் சில மருத்துவர்களும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சுகாதார அலுவலகத்திலிருந்து அங்கு வந்தார்கள். அவர்கள் குடும்பக்கட்டுப்பாடு பற்றி எங்களுடன் பேசிவிட்டு பின்னர் வைத்தியசாலைக்கு வரும்படி சொன்னார்கள். எங்களுள் பலர் அவர்களுடன் அம்புலன்ஸ் (நோயாளர் காவு வண்டிகளிலும்) மற்றும் அவர்களது வாகனங்களிலும் ஏற்றி செல்லப்பட்டோம். அவர்கள் அங்கு எதையோ எங்கள் கை மேற்பகுதியில் ஊசி வழியாக ஏற்றினார்கள். நாங்கள் இந்த வைத்தியர் எங்களுக்கு நல்லதையே செய்வார்கள் என்று நம்பியிருந்தோம். நாம் ஒரு போதும் இந்தளவு பெரும் எண்ணிக்கையிலான வைத்தியர்களை ஒன்றாக கண்டதில்லை இவ்வளவு விடயம் தெரிந்த படித்தவர்களுக்கு நாம் எவ்வாறு மறுப்பு தெரிவிப்பது? இவர்கள் எங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று முதல் நாளே சொல்லியிருக்க வேண்டும.; இவர்கள் எங்களுடன் இதயச்சுத்தியுடன் நடந்து கொள்ளவில்லையென்று கூறினார்.

வேரவில் வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியதுறையினரிடம் இக் குறிப்பிட்ட குடும்பகட்டுப்பாட்டுமுறை (Progestogen-only subdermal implants (POSDIs)) பற்றி கேட்டபோது அவர்களால் ஒரு தெளிவான விளக்கம் தரமுடியவில்லை. இதனுடைய பக்கவிளைவுகள் பற்றி இவர்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. அத்துடன் இக் குடும்பக்கட்டுப்பாட்டு முறைக்குள்ளான பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கார்ட் கொடுக்கப்பட்டது. அதில் உள்ள வாசகங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருந்தன. அத்துடன் மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் என்ற பகுதி வெறுமையாக விடப்பட்டிருந்தது.
இக்கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் மீது திணிக்கப்பட்ட இக்குடும்பக்கட்டுப்பாட்டு முறையானது பலவழிகளிலும் இவர்களது அடிப்படை மனித உரிமைகளை மீறுவது தெளிவாகின்றது.

குறிப்பாக பெண்களது பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் உரிமை, அவர்களின் மாண்பு, மதிக்கப்பட வேண்டிய உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அரச சுகாதார நல அலுவலகர்கள் தவறான காரணங்களைக் காட்டி இப்பெண்களை வைத்தியசாலைக்கு வரவழைத்துள்ளனர்;. அத்துடன் பல்வேறு குடும்பகட்டுப்பாட்டுமுறைகள் பற்றி விளக்கமளித்து அவற்றுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு வழங்கத்தவறியுள்ளனர். மேலும் இப்பெண்களுக்குத் தம் உடல் மீதுள்ள அதிகாரம் மீறப்பட்டுள்ளது. அவர்களுக்கு கொடுத்திருக்கப்பட வேண்டிய முழுத்தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. தாம் விரும்பிய படி தத்தம் குழந்தைகளை தாம் விரும்பிய நேரத்தில் இடைவெளிவிட்டுப் பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு வந்த வைத்தியர்களும் தாதியரும் இம்முறையின் பக்கவிளைவுகள் பற்றியும் இக்குடும்பக்கட்டுப்பாடு உள்ளீடு செலுத்தப்பட்டபின் கடைப்பிடித்திருக்க வேண்டிய வழிமுறைகள் பற்றிய பிழையான அல்லது பாதிப்புக்களுக்கு இட்டுச் செல்லக்கூடிய விளக்கங்களையே வழங்கியிருந்தனர். இதன் பக்க விளைவுகளாக உயர் இரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாத விலக்கு, சமச்சீரற்ற சுரப்பிகளின் செயல்பாடு, இரத்த நாளங்களில் குருதி உறைதல் ஆகியன உள்ளன. அத்துடன் இவ் வைத்தியர்கள் தாம் செலுத்திய உள்ளீடு விரும்பிய நேரத்தில் அகற்றப்படலாம் என்ற தகவலையம் இவர்களுக்குத் தெளிவாக வழங்கவில்லை. முறைப்படி தமக்குப் பல்வேறு வயதுகளில் கிடைக்கக்கூடிய குடும்பகட்டுப்பாட்டுமுறைகள் பற்றிய நன்மை, தீமைகள் மற்றும் எதிர்கொள்ளக்கூடிய பக்கவிளைவுகள் பற்றிய அறிய வேண்டிய உரிமை இவர்களுக்குண்டு.

எந்தகுடும்பகட்டுப்பாட்டுமுறையை எப்போது ஏற்பது அல்லது விடுவது என்பது ஒவ்வொரு பெண்ணுடையவும் உரிமை அத்துடன் இங்கு அப் பெண்கள் இப்பாரதூரமான விடயத்தில் தத்தம் கணவருடன் கலந்தாலோசிக்க அனுமதிக்கப்படவில்லை மக்கள் எல்லோரும் தத்தமது மதங்களை எதுவித தடங்கல்களுமின்றி அனுசரிக்கும் உரிமையுள்ள இந்நாட்டில் இப் பெண்களின் மதநம்பிக்கைகளை குறிப்பாக குடும்பக்கட்டுப்பாடு சம்பந்தமான படிப்பினைகள் கணக்கில் எடுக்கப்படவில்லை உ10ம்: இப் பெண்களில் கணிசமான தொகையினர் கத்தோலிக்க சமயத்தவர்கள் ஆவர். கத்தோலிக்க சமய ஓழுக்க விதிகளின் படி இங்கு நடத்தப்பட்ட செயற்கை குடும்பத் திட்ட முறை ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.

இவ்விவகாரம் பி.பி.சி. யிலும் பத்திரிகையிலும் செய்தியாக வந்த பின் மேற்குறிப்பிட்ட வைத்திய குழுவினர் சார்பில் ஒரு குழுவினர் யாழ். கத்தோலிக்க ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களை சந்தித்து தமது செயல்களுக்கு விளக்கமளிக்க வந்தபோது ஆயரவர்கள் அவர்களுக்கு சுட்டிக்காட்டிய விடயங்களாவன: இம்முறை கத்தோலிக்க சமய படிப்பினைக்கெதிரானது. அத்துடன் கடந்த காலப்போரில் நாம் பல்லாயிரக்கானக்கானோரை இழந்துள்ளோம். இன்னும்பலர் நாட்டை விட்டு வெளியேறியும் விட்டனர் இவ்வாறாக வடபகுதியில் மக்கள் தொகையில் பெரு வீழ்ச்;சி ஏற்பட்டுள்ள வேளையில் இதுபோன்ற மக்கள் குறைப்பு நடவடிக்கைகளால் மக்கள் தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் என்று சுட்டிக்காட்டினார் அத்துடன் இப்பகுதியில் வாழும் இந்துக்கள் இப்படியான நடவடிக்கைகளால் அடுத்த சில வருடங்களில் சிறுவரே இல்லாத ஓர் நிலை ஏற்படலாம் என்று இந்நிலை வராமல் இருக்க மதத்தலைவர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் ஏதாவது செய்ய வேண்டுமென்று வலைப்பாடு கத்தோலிக்க ஆலய பங்குதந்தையிடம் எடுத்ரைத்துள்ளனர்

முடிவாக

முள்ளிவாய்காக்காலில் எமது மக்கள் பல்லாயிரக்கணக்கில் நேரடியாக அழிக்கப்பட்டனர். இன்னும் பலர் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சரணடைந்த பின்னரும், பெற்றோரால் விசாரணக்கென்று கையளிக்கப்பட்டும் காணமல் போயுள்ளனர் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளனர் இப்பின்னணியில் இக்கிராமங்களில் அரங்கேறிய சம்பவம் மக்களின் சனத்தொகையை குறைப்பதற்காக இரகசியமாக கபடத்தனமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகள் மாறினாலும் இதுவும் தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தை குறைப்பதற்கான ஒரு நடவடிக்கையே. இம்மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஒரு வைத்தியக் குழுவினர் ஒரு ஆராய்ச்சிக்கு வருகின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டமை ஒதுக்குப்புறமான கிராமங்களின் மக்கள் இவர்களது ‘குடும்பக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சிக்கு’ தேர்ந்தெடுக்கப்பட்டமை ஆகிய செயல்பாடுகள் இம்மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.

இதன் மோசமான விளைவுகளை இம்மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் பக்க விளைவுகளால் சில பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில குடும்பங்கள் பிரிந்து விட்டன. எனவே இந்த நடவடிக்கையை மேற்கொண்ட வைத்திய குழுவினர் விசாரனை-அறிக்கையென்று காலம் தாழ்த்தாது உடனடியாக இப்பெண்களுக்கு செலுத்தப்பட்ட உள்ளீட்டை அகற்ற வேண்டும் அல்லது செயலிழக்கச் செய்ய வேண்டும். அத்துடன் இப் பெண்கள் தமது வழமையான வாழ்க்கைக்கு திரும்ப ஆவன செய்ய வேண்டும் அத்துடன் இது போன்ற தூர இடங்களில் உள்ளவர்கள் இது போன்ற செயல்பாடுகளை தமது பகுதிகளில் இடம் பெறாதிருக்க அவதானமாக இருக்க வேண்டும். அண்மையில் பொறுப்பேற்றுள்ள வடமாகாண சபை சுகாதார அமைச்சு இதற்கு உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற் கொள்ளப்படுவதை உறுதிசெய்யவும் வரும் காலத்தில் இது போன்ற செயற்பாடுகள் இடம்பெறாதிருக்கவும் ஆவன செய்ய வேண்டும்.

அருள்திரு S.V.B. மங்களராஜா
தலைவர்
யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு
ஆயர் இல்லம்
யாழ்ப்பாணம்
08.11.2013

E-mail: mangalarajah@gmail.com
Mobile No. 077 809 6144

செய்தித் தொகுப்பும் தொடர்பும்: ஈழம்ஈநியூஸ்