மெட்ராஸ் கபே – தடுத்து நிறுத்த தமிழக, புலம்பெயர் அமைப்புக்கள் முடிவு

0
638

medras_cafe_londonதமிழர்களுக்கு எதிரான ‘மெட்ராஸ் கபே’ திரைப்ப படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என தமிழக அமைப்புகளும், கட்சிகளும் தமது எதிர்ப்பை காட்டமாக வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் எடுக்கப்பட்ட மெட்ராஸ் கபே என்ற திரைப்படம் தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தமிழக உணர்வாளர்களும் தமிழ் அமைப்புகளும், அப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் தங்களுக்குப் போட்டுக்காட்ட வேண்டும் என வலியுறுத்தியதுடன், இது தொடர்பாக தமிழக காவல்துறை ஆணையாளரிடம் மனு ஒன்றையும் கொடுத்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதில் அளித்த படத்தை இயக்கி, நடித்த ஜோன் ஆபிரகாம், தமிழ் அமைப்புகள் விரும்பினால் நாங்கள் படத்தை முன்கூட்டியே காட்டுவோம் என்று தெரிவித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இப்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

திரைப்படக் குழு, ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், திராவிட விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு மற்றும் சில தமிழ் அமைப்புகள் மற்றும் இயக்குநர் கௌதமன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநர் சீமான் ஆகியோர் உட்பட பலரும் இப்படத்தை பார்த்தனர். படத்தைப் பார்த்த இவர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர்.

படத்தை பார்த்து வெளியே வந்து ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்டபோது, மிகவும் கோபத்துடன் ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை தமிழகத்தில் எங்கும் வெளியிடக் கூடாதுஎன்றும் அதனை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இத்திரைப்படம் குறித்து கருத்துவெளியிட்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “மெட்ராஸ் கபே திரைப்படம் ராஜபக்ச பணம் கொடுத்து, சோனியா காந்தி இயக்கி, இந்திய றோ உளவுத்துறை கதை, வசனம் எழுதியது போல் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் “காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பற்றியும், இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்கள் பற்றியும் படம் எடுக்க இந்திய அரசு சம்மதிக்குமா? அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய இனவழிப்பு நடந்து முடிந்த பிறகு, ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் உள்ளனர் என்பதை பற்றி பொய்யான பல தகவல்களை திரட்டி படம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலை புலிகளை கெட்டவர்களாகவும், இந்திய அமைதிப் படையும், சிங்கள அரசும் நல்லவர்களாகவும் காட்டியுள்ள இந்த படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தடை செய்ய வேண்டும் என்று இப்படத்தைப் பார்த்த பலரும் வலியுறுத்தியுள்ளனர். உலகில் எங்கு திரையிட்டாலும் தமிழர்கள் அங்கு போராட்டம் செய்வார்கள். தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் இந்தப் படத்தைக் காண்பிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளனர்.

இதேவேளை, இத் திரைப்படம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கையன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மறைத்து, அவர்களின் ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தி ‘மெட்ராஸ் கபே’ என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த எல்லோருக்கும், இது சிறீலங்க அரசு தயாரித்து மகிந்த ராஜபக்ச இயக்குனராக இருந்து எடுக்கப்பட்டத் திரைப்படமோ என்று நினைக்கின்ற அளவிற்குத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

முதலில் ‘ஜப்னா’ என்று பெயரிடப்பட்டு எடுக்கப்பட்டு, பிறகு ‘மெட்ராஸ் கபே’ என்று பெயர் மாற்றம் செய்து, இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள ஜோன் ஆப்ரகாம், யாழ்ப்பாணத்தில் தமிழின மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு, ஏதோ ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது போல் சித்தரித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசு நடாத்திய ஒரு திட்டமிட்ட இன அழித்தலை நியாயப்படுத்த, 1980-90 ஆண்டுகளுக்கு இடையிலான ஒரு காலகட்டத்தை கதைக்கு அடிப்படையாக்கி, தமிழின போராட்டத்தை பயங்கரவாதமாகவும், தமிழின விடுதலைக்குப் போராடிய தமிழர்களை கொலைகாரர்களாகவும் சித்தரித்து எடுக்கப்பட்ட இந்தப் படம், சிங்கள இனவெறி அரசின் தமிழின அழித்தலை நியாயப்படுத்தவே எடுக்கப்பட்டது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, தமிழினத்தை தீவிரவாத மனப்போக்கு கொண்டவர்களாகச் சித்தரிக்கும் அதே வேளையில், ராஜீவ் காந்தியைக் காப்பாற்ற மலையாள அதிகாரிகள் சிரத்தையுடன் செயலாற்றியதாகவும் சித்தரிக்கிறது.

மெட்ராஸ் கபே திரைப்படத்தைப் பார்க்கும் எந்த தமிழனுக்கும் மலையாளிகள் மேல் கோபம் ஏற்படும். அந்த அளவிற்கு மலையாளிகளை தூக்கி வைத்தும், தமிழர்களைத் தாழ்த்தியும் படத்தை எடுத்துள்ளார்கள். எனவே, இந்த திரைப்படத்தின் பின்னணியில் தமிழினத்தை கேவலப்படுத்தும், தமிழர் – மலையாளிகளிடையே மோதலை உண்டாக்கும் உள்நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. இலங்கையில் வரும் நவம்பரில் கொமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரிக்கும் இத்திரைப்படம், சிங்கள பௌத்த இனவெறி அரசின் போரை நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.

ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராடத்திற்கான நியாயத்தைப் பற்றி ஒரு வரி கூட பேசாமல், தமிழினம் அங்கு திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறைத்து, தம் இனத்தைக் காக்க தமிழர்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கண்மூடித்தனமான தீவிரவாதமாக சித்தரிக்கும் இத்திரைப்படத்தைத் தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது. இத்திரைப்படம் தமிழர்களின் உணர்வுகளை திட்டமிட்டு கேவலப்படுத்துகிறது. இதனைத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் திரையிடக் கூடாது என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, இப்படத்தைத் தடை செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நீண்டதொரு காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது,

‘மெட்ராஸ் கஃபே’ திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரனை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தத் திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்.

ஈழத்தின் விடுதலைக்காக ஈடு சொல்ல முடியாத வீரச்சமர் புரிந்து, உன்னதமான உயிர்த்தியாகம் செய்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி, அபாண்டமான பழி சுமத்தி, நீதியை நிரந்தரமாகக் குழி தோண்டிப் புதைக்க, இலங்கை அரசு பல முனைகளிலும் தனது அக்கிரமச் செயலை முடுக்கி விட்டு உள்ளது.

எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்தே ஈழத்தமிழருக்கு வஞ்சகமும், துரோகமும் செய்த இந்தியாவின் காங்கிரஸ் தலைமை, 2004 ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைத் தன் தலைமையில் அமைத்த நாளில் இருந்து, விடுதலைப்புலிகளை அழிக்க, இலங்கை அரசோடு இணைந்து செயல்பட்டது. முப்படைத் தளபாடங்களையும் தந்தது யுத்தத்தை முழுக்க முழுக்க இயக்கியது. அந்த முயற்சியில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களையும் கொன்று குவித்தனர். ஈழத்தமிழர் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதான் இந்திய அரசு. அதனால்தான் உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவவும், சிங்கள அரசைப் பாதுகாக்கவும் திட்டமிட்டது.

தற்போது பொதுநலவாய மாநாட்டை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறது. இதயங்களில் இரத்தத்தைக் கொட்டச் செய்யும், தமிழ் இனக்கொலைக் காட்சிகளை, செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டபோதுதான் நடந்த கொடூரம் உலகுக்குத் தெரிந்தது. குறிப்பாக, எட்டு ஈழத் தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக கண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியும், இசைப்பிரியா மிகக் கொடூரமாக இராணுவத்தால் கொல்லப்பட்ட காட்சியும், மனித மனங்களை உலுக்கின.

ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசும், செய்த துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்திய அரசும், திட்டமிட்டு, இந்தியாவில் உள்ள ஒரு திரைப்பட நிறுவனத்தைப் பயன்படுத்தித் தயாரித்த படம்தான் ‘மெட்ராஸ் கஃபே’ எனும் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், பிரதானப் பாத்திரத்தில் நடித்துள்ளவனுமான, கேரளத்தைச் சேர்ந்த ஜான் ஆபிரகாம், இரகசியமாக கொடியவன் மகிந்த ராஜபக்சவை, இருமுறை சந்தித்து உள்ளான். இலங்கையிலும் படப்பிடிப்பு நடத்திவிட்டு, தற்போது, இல்லை என்று மறுக்கவும் செய்கிறான். இந்தப் படத்தை, சூஜித் சர்கார் என்பவன் இயக்கி உள்ளான்.

1987 இல், இந்திய அமைதிப்படை, இலங்கைக்குச் சென்றதைப் பின்புலமாகச் சித்தரித்து, இப்படத்தை எடுத்து உள்ளனர். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைக் கொடூரமானவர்களாகவும், இந்திய இராணுவத்தினர் பலரை அவர்கள் கொன்றதாகவும், அமைதிப்படை இந்தியா திரும்பிய பின்னர், இந்தியாவின் உளவு நிறுவனமான றோ அமைப்பின் அதிகாரியாக, கேரளத்தைச் சேர்ந்தவராக, இலங்கைக்கு படத்தின் கதாநாயகன் ஜான் ஆபிரகாம் சென்று, அங்கு உள்ள நிலைமையை அறிவதாகவும், பின்னர் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படுவதாகவும், இப்படம் சித்தரிக்கிறது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், பாஸ்கரன் என்ற பெயரில், படத்தில் ஒரு பாத்திரமாக்கி, ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதே, அன்றைய ராஜீவ் காந்தி அரசு, ஈழத்தமிழர்களுக்குச் செய்த மன்னிக்க முடியாத, துரோகம் ஆகும்.

நயவஞ்சகமாகப் பொய் சொல்லி, தலைவர் பிரபாகரன் அவர்களை இந்தியாவுக்கு அழைத்துக் கொண்டு வந்து, அவரது விருப்பத்துக்கு எதிராக, கட்டாயப்படுத்தித் திணித்த ஒப்பந்தம்தான் ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்பதை, ஓகஸ்ட் 4 ஆம் நாள் சுதுமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

‘பிரபாகரன் தலைக்குப் பத்து இலட்சம் பரிசு’ என்று இந்திய இராணுவ அமைச்சர் கே.சி.பந்த் அருகில் இருக்க, ஜெயவர்த்தனா அறிவித்தார். தியாக தீபம் திலீபன், துளி நீரும் பருகாமல் உயிர்ப்பலி ஆனதற்கும் இந்திய அரசே காரணம். குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட, 12 புலிப்படைத் தளபதிகள், நச்சுக்குப்பி கடித்து மடிவதற்கும், இந்திய அரசே காரணம். 1987 அக்டோபரில், பிரபாகரனைக் கொலை செய்ய, இந்திய இராணுவ கொமாண்டோக்களை ஏவினர். புலிகளின் செய்தித்தாள் அலுவலகங்கள், தொலைக்காட்சி அலுவலகத்தை, இந்திய இராணுவம் தாக்கி அழித்தது.
untitled
எண்ணற்ற தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தனர். யாழ்ப்பாண மருத்துவமனையின் மீது குண்டுகளை வீசினர். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்தனர். ‘தமிழர்களின் சடலங்கள், சாலை ஓரங்களில் கிடக்கின்றன. நாய் நரிகளும், காக்கை கழுகுகளும் தின்னுகின்றன’ என்று, இலண்டனில் இருந்து வெளியாகின்ற கார்டியன் பத்திரிகை தெரிவித்தது.

இந்திய இராணுவத்தின் இக்கோரத் தாண்டவத்தைப் பற்றி, ஒரு வினாடி காட்சி கூட இத்திரைப்படத்தில் கிடையாது. இந்திய உளவுத்துறை நிறுவனமான றோ, பிரபாகரனைக் கொலை செய்யப் பலமுறை திட்டமிட்டது. அதற்காக, மாத்தையா, கிருபன் போன்ற துரோகிகளைப் பயன்படுத்தியது. போரை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தைக்குத் தான் தயார் என்றும், பிரபாகரன், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய எட்டுக் கடிதங்கள் எழுதியும், அவற்றை ராஜீவ் காந்தி குப்பைத் தொட்டியில் போட்டார்.

இந்திய உளவு நிறுவனம் றோ, விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ் தளபதி ஜொனியை, சென்னையில் இருந்து வன்னிக்காடுகளுக்கு அருகில் சேர்த்து, பிரபாகரனைச் சந்தித்து வருமாறு அனுப்பி வைத்தது. அவர் திரும்பி வருகையில், இந்திய இராணுவமே அவரைச் சுட்டுக் கொன்றது. இப்படி ஒரு துரோகத்தை உலகில் எந்த நாடும் செய்தது இல்லை. 1993 யாழ்ப்பாணத் தளபதி கிட்டுவை, இந்தியக் கடல் எல்லையில் இருந்து பலநூறு கிலோ மீட்டர்களுக்கு அப்பால், பன்னாட்டுக் கடல் பரப்பில், இந்தியக் கடற்படை முற்றுகை இட்டுத் தாக்கிக் கொன்றது.

இந்திய இராணுவம் ஈழத்தில் இழைத்த கொடுமைகளை, மனதில் ஆறாத இரணமாகிப் போன ஈழத்தமிழர் துயரத்தை, இந்திய அரசின் துரோகத்தை, நான் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் முன்னிலையிலேயே, நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டாகப் பதிவு செய்து இருக்கிறேன். 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சோனியா காந்தி இயக்குகின்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பெருந்துரோகத்தால், இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த துரோகத்தை மறைக்கவும், கொடிய இந்திய அரசுக்குத் தொடர்ந்து உதவவும், இலங்கை-இந்திய அரசுகளின் திட்டமிட்ட ஏற்பாடுதான், ஜோன் ஆபிரகாமின் மெட்ராஸ் கஃபே திரைப்படம் ஆகும். என்ன கொழுப்பு இருந்தால், நம்மை யார் என்ன கேட்க முடியும் என்ற திமிர் இருந்தால், படத்துக்கு ‘மெட்ராஸ் கஃபே’ என்று பெயர் சூட்டுவான்? ஈழத்தமிழர்களுக்குப் பெருங்கேடு செய்த ஜே.என். தீட்சித், இந்திய அரசின் துரோகத்துக்குக் ஆலோசனைகள் கூறிய எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், கொடியவன் ராஜபக்சவுக்கு ஆலோசகரான சுதீஷ் நம்பியார் போல, கேரள மண்ணில் இருந்து மற்றொருவன் ஜான் ஆபிரகாம். மெட்ராஸ் கஃபே திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு, இந்திய அரசும், சிங்கள அரசும், பெருமளவுக்கு உதவி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

1984 இல், புதுடில்லியில் நடைபெற்ற பிரதமர் இந்திரா படுகொலையைப் பின்புலமாகக் கொண்டு, சீக்கிய இன மக்களை இழிவுபடுத்தித் திரைப்படம் தயாரிக்கும் துணிச்சல், பாலிவுட் திரை உலகுக்கு உண்டா? அப்படி ஒரு படம் தயாரித்து, பஞ்சாபில் திரையிட முனைவானா? தமிழர்கள் சொரணை அற்றுப் போய் விட்டார்களா? சோற்றால் அடித்த பிண்டங்களா? தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள், இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது, நெஞ்சு கொதித்ததால்தான், கொழுந்து விட்டு எரிந்த மரண நெருப்புக்கு, முத்துக்குமார் உள்ளிட்ட 18 தமிழர்கள், தங்கள் உயிர்களைப் பலியிட்டனர். தமிழனுக்கு நீதி கேட்டு நாம் போராடுகிறோம். நீதியை அழிக்க, வல்லாண்மை சக்திகள், வேகமாக வேலை செய்கின்றன.

இந்தக் கூட்டுச் சதியை, தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலக நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இப்படம் திரையிடப்பட்டாலும், அங்கு உள்ள தமிழர்கள், தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்ய வேண்டும். ஓகஸ்ட் 23 ஆம் திகதி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திரைப்படத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும். இதனை மீறி படம் திரையிடப்பட்டால், மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களில் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தடுப்பதற்கு அறப்போர் நடத்திட வேண்டும்! தமிழகத்தில் திரையிடுவதற்கு, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது திரை அரங்குகளின் உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என வேண்டுகிறேன். தமிழகத் திரை உலகத்தினர்,

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையிடுவதைத் தடுப்பதற்கு முன்வர வேண்டுகிறேன். இதற்கு மேலும் இப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுமானால், அதனைத் தடுப்பதற்கு, திரை அரங்குகளை முற்றுகை இடும் அறப்போரை நடத்துவோம்’ என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேவேளை, புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் இந்தப் படத்தை திரையிட்டால் அந்தத் திரையரங்குகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவும் தயாராகிவருவதாக தெரியவருகின்றது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் தற்போது இப்படத்திற்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றுள்ளன.

நன்றி: ஈழமுரசு

**

தமிழினத்தை இழிவுபடுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் – பிரித்தானியா

தமிழகர்களின் நியாமான விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நியாப்படுத்தி மதராஸ் கபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கிணங்க சென்னை திரையரங்கு ஒன்றில் 18.08.2013 அன்று அப்படம் திரைப்படப்பட்டது.இப் படத்தை பார்த்த தமிழ் அமைப்புக்கள் சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது. என கருத்து வெளியிட்டு உள்ளனர் இதே வேளையில் மெட்ராஸ் கபே திரைப்படத்தை லண்டனில் சினி வேல்ட் திரையரங்கில் 23.08.2013 அன்று திரையிட திட்டமிட்டுள்ளார்கள்.

அதனால் மெட்ராஸ் கபே திரைப்படத்தை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் ஒன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழீழ லட்சியத்தில் தொடர்ந்து பயணிக்கவும் மாவீரர்களின் கனவை நனவாக்கவும் அணைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.

காலம் : THURSDAY 22 AUGUST 16:00 – 18:00

இடம் : CINEWORLD HEAD OFFICE | POWER ROAD STUDIOS
POWER ROAD | CHISWICK | LONDON | W4 5PY |
TUBE : DISTRICT LINE to GUNNERSBURY | BUS : 440

மேலதிக விபரங்களுக்கு : TCC-UK : Tel 02033719313

உங்கள் எதிர்ப்புக்களை திரையரங்கிற்கு தொலைபேசி மூலமாகவும் வெளிப்படுத்தலாம்.
தொ.இல: 02087424010 ….

மெட்ராஸ் கஃபே’ திரைப்படத்தை தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புறக்கணிப்போம்

இலங்கை அரசின் சதியின் பின்புலத்தில், தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ‘மெட்ராஸ் கஃபே’ என்ற திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளதோடு தமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் ஆகஸ்டு மாதம் 23 ம் திகதி திரையிடவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்படுவதை தமிழகத்தில் உள்ள தமிழர்கள் வன்மையாகக் கண்டித்து மாபெரும் மக்கள் எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கனடிய மண்ணிலும் மற்றய புலம் பெயர் தேசங்களில் எல்லாம் எதிர் வரும் ஆகஸ்ட் 23 ம் திகதி இத்திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக கேள்விப்படும் நாம் இதனை வன்மையாக கண்டித்து எதிர்க்கின்றோம்.

சனல்-4 மாதிரியான ஆதார பூர்வமான திரைப்படத்தை எதிர்கொள்ள முடியாத இலங்கை அரசு, இப்படியான புனை கதைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் திரைப்படத்தை மூன்று மொழிகளில் திரையிட்டு மக்களின் மனதில் இராணுவத்தை மேலாகவும்இ தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளையும், போராட்டத்தையும் இழிவு படுத்தவும் முயற்சிக்கின்றது.

ஈழத்தமிழினத்தை கூட்டுசதியால் முள்ளிவாய்க்கால் படுகொலையில் அழித்தது போதாது என்று இப்பொழுது இந்த பரப்புரை சூழ்ச்சியிலும் களமிறங்கி உள்ளன இந்த தமிழின பகைவர் கூட்டம். இந்த வஞ்சனை சூழ்ச்சியை ஒட்டு மொத்த தமிழினமும் வலிமையோடு எதிர்க்க வேண்டும். தமிழர்களை இழிவு படுத்தி.

தமிழர் இன விடுதலைப் போரட்டத்தை கொச்சைப்படுத்திக் கொண்டு தமிழர்கள் வாழும் இடங்களில் எல்லாம் இந்த திரைப்படம் திரையிடப்படுவது எத்தகைய கயமைத்தனம்!!! இத்திரைப்படத்தை திரையிடுவதன்மூலம் தமிழர்கள் பணத்தை சுருட்டி தமிழரைக்கொண்டே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்த சதிச் செயலுக்கு எந்த தமிழர்கள் ஆதரவு கொடுத்தாலும் அது தமிழ் இனத் துரோகமாகவே கருதப்படும்.

ஈழத் தமிழர்களது நீதிக்கான நியாயமான விடுதலைப் போராட்டம் தமிழக தமிழர்களையும் உலகத் தமிழ் மக்களையும், வேற்று இனத்தவர்களையும் தன்பால் ஈர்த்து அணிசேர்த்து வலுவடைந்து வரும் நிலையில் இந்த உணர்வை சிதைத்து எம் தமிழீழ விடுதலைபோராட்டதின் பால் தமிழர்க்கு உள்ள நம்பகத்தன்மையையும் பற்றுறுதியையும் முறியடிக்கும் நோக்கோடு திட்டமிட்டு களமிறக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

தமிழகத்தில் மட்டுமன்றி தமிழர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களை பாதிக்கும் வலுவான ஊடகம் திரைத்துறை என்பதை உணர்ந்து இலங்கை அரசு அதனையே ஆயுதமாக தேர்ந்தெடுத்து இந்த சக்திவாய்ந்த ஊடகத்தினூடாக ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்தை வில்லத்தனமான சூழ்ச்சியோடு எமக்கு எதிரான ஆயுதமாகப் படைத்துள்ளது . அது மட்டுமன்றி தமிழர்களை இழிவுபடுத்தும் இத்திரைப்படத்தை உலகெங்கும் திரையிட்டு தமிழர்களின் நிதியை அபகரிப்பதோடு தமிழர்க்கெதிரான சூழ்ச்சியான இழி கருத்தையும் வஞ்சகத்தோடு விதைக்கும் வஞ்சனையோடு உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். இந்த வஞ்சகத்தை புரிந்து கொண்டு தமிழர்கள் விழிப்புணர்வோடு செயற்பட்டு இந்த திரைப்படத்தை கடுமையான கண்டனத்தோடு புறக்கணித்து எம் இனமானத்தை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றோம்!

இந்த திரைப்படத்தை வன்மையாக கண்டித்து எமது எதிர்ப்பை பதிவு செய்யும் போராட்டத்தில் மாபெரும் மக்கள் திரட்சியாக அணிதிரள்வோம்! எமது வலிமையான போராட்டத்தினூடாக இனியொரு காலமும் இத்தகைய சூழ்ச்சியில் இலங்கை அரசு எக்காலத்திலும் இறங்காது இருப்பதை உறுதி செய்வோம்!

விழித்தெழுவோம்! அநீதிகளை மிதிதெழுவொம் ! ஒன்றுபட்ட தமிழினமாக மக்கள் சக்தியாக அனைத்து சூழ்ச்சிகளையும் வென்றெழுவொம் !

மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை

தொலைபேசி: 416.830.7703
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
முகநூல்: facebook.com/canadianncct

பிரபாகரன்மீது வெறுப்பு ஏற்படுத்தும் விதமாக மெட்ராஸ் கபே! காங்கிரஸை காப்பாற்றவா மெட்ராஸ் கபே?[ விகடன் ]

‘மெட்ராஸ் கஃபே _ படம் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது! ஈழத் தமிழ் மக்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் வழங்க நினைக்கும் ராஜீவ் காந்தி, வடக்குக் கிழக்கு தேர்தலை அமைதியாக நடத்தவும் ஈழ மக்களுக்கு சமாதான சகவாழ்வை பரிசளிக்கவும் இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்கிறார். அந்த ஒப்பந்தத்தை பாஸ்கரன் (பிரபாகரன்) எதிர்க்கிறார்.

எதிர்க்கும் பாஸ்கரனை சரிக்கட்ட, அல்லது தீர்த்துக்கட்ட விக்ரம் சிங் என்ற ரா உளவு அதிகாரி யாழ்ப்பாணம் செல்கிறார். அவருடன் பிரிட்டன் ஊடகவியலாளர் ஜெயாவும் (அனிதா பிரதாப்) செல்கிறார். ஜெயா, பாஸ்கரனைச் சந்தித்து நேர்காணல் எடுக்க, விக்ரமோ சிறியை (சிறி சபாரத்தினம்) வைத்து பாஸ்கரனை முடிக்கத் திட்டமிடுகிறார் அதற்காக சிங்கப்பூரிலில் இருந்து ஆயுதங்களைக் கப்பலில் தருவித்து சிறிக்கு வழங்கத் திட்டமிடுகிறார். இன்னொரு பக்கம் மல்லையாவை (மாத்தையா) ராவின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரவும் முயற்சி நடக்கிறது.

சிறிக்கு ஆயுதங்கள் கப்பலில் வந்து இறங்கும்போது உளவு அதிகாரி ஒருவராலேயே அந்தச் செய்தி புலிகளுக்குச் சொல்லப்பட்டு புலிகள் வந்து ஆயுதங்களைக் கைப்பற்றிச் செல்கிறார்கள். இறுதியில் மல்லையாவும் சிறியும் கொல்லப்படுகிறார்கள். ராவின் திட்டங்கள் தோல்வியடைய அடுத்து ராஜீவ் காந்தி பதவி இழக்க, அடுத்து வரும் பிரதமர் இந்தியப் படைகளை இலங்கையில் இருந்து வாபஸ் பெறுகிறார்.

அடுத்த தேர்தலுக்குத் தயாராகும் ராஜீவ் காந்தி தன் தேர்தல் பிரசாரத்தில், ‘மீண்டும் தான் ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பேன்� என அறிவிக்க, பாஸ்கரன் ராஜீவைக் கொல்லுமாறு கட்டளையிடுகிறார். அதை இடைமறித்துக் கேட்கும் ரா அதிகாரிகள் ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கு முன்னால் ஹைதராபாதில் இருக்கும் ராஜீவ் காந்தியை தமிழகம் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். அதையும் மீறி வரும் ராஜீவ் காந்தி எல்.டி.எஃப். அமைப்பால் (புலிகள்) கொல்லப்படுகிறார்.

லண்டன் பத்திரிகையாளர் ஜெயா மூலம் ராஜீவ் கொலை பற்றிய செய்தியை உறுதிபடுத்திக் கொள்ளும் விக்ரம்சிங் ராஜீவ் கொல்லப்பட்ட மேடைக்கு அருகில் செல்லும்போது குண்டு வெடிப்பதோடு படம் முடிவுக்கு வருகிறது.

ஈழத்தில் இருந்து ராஜீவைக் கொல்ல பாஸ்கரன் திட்டமிடுவதும் சிங்கப்பூரில் இருக்கும் மெட்ராஸ் கஃபேயில் அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதும் ஜெர்மனியில் இருந்து வரும் இன்ஜினீயர் ஒருவர் வெடிகுண்டை தயாரித்துக் கொடுப்பதாகவும் சொல்கிறது ‘மெட்ராஸ் கஃபே.

”அப்பட்டமாக ஈழத்தமிழர் பிரச்னையை குறிப்பாக விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் சொல்லும் சம்பவம் எதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையிலும் சொல்லப்படாத சம்பவங்களை இதில் கற்பனையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

ராஜீவ் காந்தி மீது அனுதாபம் ஏற்படுத்தும் வகையிலேயே திரைக்கதையும் உருவாக்கப்பட்டிருப்பது பற்றி நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் பிரபாகரன்மீது வெறுப்பு ஏற்படுத்தும் விதமாக கதை நகர்வதுதான் பிரச்னை. ஒரு ஆயுதக் குழுக்கள் தமிழ் பேசும் பெண்களையும், குழந்தைகளையும் கொடூரமாகச் சுட்டுக் கொல்வதில் இருந்துதான் படம் துவங்குகிறது.

ஒரு கட்டத்தில் உளவு அதிகாரியான விக்ரம் சிங்கின் இளம் மனைவியை கொச்சிக்கே வந்து கொலைசெய்கிறார்கள் புலிகள். படம் முழுக்க ஆயுதங்கள் மீது வெறி கொண்டவர்களாகவும் கொலைசெய்ய அஞ்சாதவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள்.

போராளிகளின் தரப்பு நியாயங்கள் துளிகூட படத்தில் இல்லை. ராஜீவ் காந்தி மரணமடைந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தப் படத்துக்கான தேவை இப்போது என்ன? என்பதுதான் எங்களது கேள்வி” என்கிறார்கள் தமிழீழ ஆதரவாளர்கள்.

”வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுக்க காங்கிரஸ் எதிர்ப்பலை வீசும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் படம் ஓரளவு கைகொடுக்கலாம் என்பதற்காகவே இப்படி ஒரு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.

இந்திய அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த ராஜீவ் காந்தியை சிங்கள ராணுவத்தைச் சேர்ந்தவர் பிடறியில் அடித்தது படத்தின் இயக்குனர் ஜான் ஆப்ரஹாமுக்கு தெரியவில்லை. படத்தின் காட்சிக்காக சிங்கள போர்விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை உற்றுக்கவனித்தால் இந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளர்கள் யார் என்பது தெரியும்!

**

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் வேடத்தில் அஜய் இரத்தினம்! தமிழர்கள் இதை ஏற்பார்களா? – இராஜ்குமார் பழனிசாமி

தமிழர்களை பொறுத்தவரை தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் என்பவர் உலகில் உள்ள அனைத்து தமிழர்களாலும் போற்றப்படுபவர். வணக்கத்திற்கு உரியவர். தமிழின உணர்வாளர்கள் சிலர் அவரை கடவுளுக்கு நிகராக போற்றுகின்றனர்.

தமிழினத்தின் வீர அடையாளமாக இராஜ ராஜ சோழனை போலவே பிரபாகரனும் கருதப்படுகிறார். அந்த அளவிற்கு தமிழ்த் தேசிய கட்டமைப்பை உருவாக்கியவர் பிரபாரகரன்.

உலகில் உள்ள போராளிப் படைகளில், தங்களுகென்று தரைப் படை, கப்பல் படை, வான் படை என முப்படைகளை கட்டி எழுப்பிய ஒரே படை விடுதலைப் புலிகளின் படையே ஆகும். அப்படிப்பட்ட ஒப்பற்ற புலிகளின் இயக்கத்தின் தலைவர் மேதகு பிரபாகரன் ஆவர்.

பிரபாகரன் வேடத்தில் நடிக்க இதுவரை திரையுலகில் யாரும் முயற்சித்தது இல்லை. அப்படியே முயற்சித்தாலும் அவரை ஒரு கதாநாயகனாகத் தான் படத்தில் காட்டுவார்களே தவிர ஒரு கெட்ட சக்தியாக காட்ட மாட்டார்கள். அப்படி காட்டினால் தமிழர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். மெட்ராஸ் கபே என்ற படத்தில் ராஜீவ் காந்தியை ஒரு கதாநாயகனாக்கி , பிரபாகரனை அவருக்கு எதிரான தீய சக்தியாக காட்டுயுள்ளனர். இதை தமிழ் மக்கள் எப்படி ஏற்பார்கள்?

மேலும் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் அஜய் இரத்தினம் இந்த வேடத்திற்கு பொருத்தமானவர் தானா என்று யோசிக்கவேண்டும். உலகத் தமிழினமே போற்றும் ஒரு தலைவரின் வேடத்தில் நடிக்க அஜய் இரத்தினம் போன்ற மூன்றாம் தர நடிகருக்கு என்ன தகுதி உள்ளது என தமிழின உணர்வாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இராஜ இராஜ சோழன் வேடத்தில் நடிக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பொருத்தமாக இருந்தார். அதுவும் இராஜராஜ சோழனை போற்றும் படமாக அது அமைந்தது. ஆனால் பிரபாகரனை போல் வேடமிட்டு நடிப்பதற்கு இதுவரை கதாநாயனாக நடிக்காத, எதிர்மறை வேடங்களில் மட்டுமே நடித்து வந்த அஜய் இரத்தினத்தை தேர்ந்தெடுத்தது திட்டமிட்டு பிரபாகரனை அவமதிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.

இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க அஜய் எவ்வாறு சம்மதித்தார்? தமிழர்கள் இதை பார்த்து கொந்தளிப்பார்கள் என்று அவருக்கு தெரியாமல் போனது ஏன் ? மேலும் படத்தின் படி பிரபாகரன் இந்தியாவிற்கு எதிரான தீய சக்தியாக காட்டப்படும் போது, அந்த வேடத்தில் நடிக்க அவர் மறுத்திருக்க வேண்டும் அல்லவா? அப்படி செய்யாமல் கொடுத்த காசுக்கு வேலை பார்க்கும் விதமாக தமிழர்களின் அடையாளமாக விளங்கும் பிரபாகரன் வேடத்தில் அஜய் நடிப்பதை தமிழர்கள் ஒரு நாளும் ஏற்கமாட்டார்கள்.

இப்படி நடிக்கும் அஜய் ரத்தினத்தை தமிழர்கள் இனியும் தமிழகத்தில் நடிப்பதை விரும்ப மாட்டார்கள். ஒப்பற்ற ஒரு தலைவனின் வேடத்தில் , ஒரு சிறிதும் பொருத்தமில்லாத ஒரு நடிகர் நடிப்பதை தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் நிச்சயம் ஏற்க மறுப்பார்கள் என்றே சொல்லலாம்.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் அஜய் ரத்தினத்திற்கு கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. உண்மையில் இப்படி ஒரு பாத்திரத்தில் அஜய் நடித்திருக்க கூடாது என்று பலரும் கருத்து கூறியுள்ளனர். தமிழர்களுக்கு எதிரான மெட்ராஸ் கபே படத்தை தடை செய்ய வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில், இப்படத்தில் பிரபாகரன் வேடத்தில் அஜய் ரத்தினம் நடித்திருப்பதை பார்த்தால் மேலும் தமிழர்கள் கோபம் அடைவார்கள் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள பல கோடி உணர்வாளர்கள் நிச்சயம் பிரபாகரனாக நடிக்கும் அஜய் ரத்தினத்தை ஏற்க மாட்டார்கள் மெட்ராஸ் கஃபே சொல்லும் பொய்யான செய்தியையும் ஏற்க மாட்டார்கள்.

தமிழரை மோசமாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபேயை மும்பையிலும் திரையிடக் கூடாது – பாஜக

தமிழரை மோசமாக சித்தரிக்கும் மெட்ராஸ் கபேயை மும்பையிலும் திரையிடக் கூடாது என்று பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாகவும் தமிழரை மோசமானவர்களாகவும் சித்தரிக்கும் ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று தமிழக கட்சிகளை சேர்ந்த சீமான், வைகோ உள்ளிட்டோர் தடை கோரியுள்ளனர்.

இந்தப் படம் வெளியாகும் அரங்குகளை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விஷயத்தில் தன் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.இந்நிலையில் தடைசெய்யப்பட்ட எல்.டி.டி.ஈ. இயக்கத்தை தவறாக சித்தரித்து காட்டப்பட்டுள்ள ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தை மும்பையில் வெளியிட மும்பை பாராதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மும்பை பாரதீய ஜனதா தலைவர் அஷிஷ் ஷெலார் கூறுகையில், “ஜான் ஆபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ள ‘மெட்ராஸ் கபே’ திரைப்படத்தில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை தீவிரவாதியாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை இந்த படம் காட்டுகிறது. மேலும் தீவிரவாத செயல்களுக்கு தமிழ் அமைப்புகள் உதவியதாக காட்டப்படுகிறது.

இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தடை கோரி தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் ஏராளமான தமிழ் சகோதரர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நிறைய அமைப்பினர் எங்களிடம் இந்த திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து விளக்கியுள்ளனர்.எனவே, ‘மெட்ராஸ் கபே’ திரைப்படம் மும்பையில் திரையிடப்படுமானால், சமுதாயத்தில் முரண்பாட்டை உருவாக்கும் என்று அறியப்படுகிறது.மாநில அரசு இப்படம் திரையிடுவதை தடுக்காவிட்டால், தியேட்டர்களில் பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்துவார்கள்,” என்று குற்றிப்பிட்டுள்ளார்.