சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பெரிதாக எதனையும் தெரிவிக்காத போதும், மேற்குலகம் மிகவும் பதற்றமான ஒரு நிலையில் காணப்படுவதாக அந்த நாடுகளின் அறிக்கைகளில் மூலம் அறியப்படுகின்றது.

 

 

அதிலும் குறிப்பாக அமெரிக்கா மிகவும் ஒரு கொந்தளிப்பான நிலையை அடைந்துள்ளது. இது தொடர்பில் உலக நாடுகள், பெரும்பாலும் மேற்குலக நாடுகளும் அதன் அமைப்புக்களும் வெளியிட்டுள்ள அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் வருமாறு:

 

 

ஐக்கிய நாடுகள் சபை

 

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டனியோ கட்டரஸ் மிகுந்த கவலையுடன் அவதானித்து வருகின்றார் என ஐ.நா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அதன பேச்சாளர் ஸ்ரிபனே துஜாரிக் தெரிவித்துள்ளார்.

 

 

சிறீலங்கா அரசு ஜனநாயக விழுமியங்களையும் அரசியல் சட்டவிதிகளையும் மதிக்கவேண்டும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து அனைத்து மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பொறுமை காக்கவேண்டும் என்பதுடன், தற்போதைய நிலைக்கு ஒரு தீர்வைக்காணும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

 

 

சிறீலங்காவின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சா பொறுப்பேற்றுக் கொண்டது, முன்னர் இடம்பெற்றது போன்ற மனித உரிமை மீறல்கள் மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிபகத்தின் ஆசியாவிற்கான பிரதிநிதி பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் பதவி நீக்கம் தொடர்பான சிறீலங்கா அரச தலைவர் சிறீசேனாவின் நடவடிக்கை நாடாளுமன்றத்திற்கோ அல்லது அமைச்சரவைக்கோ அறிவிக்காது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.

 

 

கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்கப்படாத நிலையில் ராஜபக்சா மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளதானது இலங்கையின் மனித உரிமை தொடர்பான எதிர்கால நிலை குறித்து அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

 

 

ராஜபக்சாவின் ஆட்சிக்காலத்தில் குற்றம் செயதவர்களுக்கான தண்டனையை தற்போதைய அரசு வழங்கவில்லை. எனவே அவர்கள் மீண்டும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.

 

 

கடந்த சில வருடங்களாக அரசாங்கத்தின் அழுத்தங்கள் இன்றி செயற்பட்டுவந்த ஊடக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள், பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புக்கள் என்பன மீண்டும் ஒரு அச்சமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளன.

 

 

இலங்கையில் மீண்டும் மனித உரிமைகளை மதிக்கும் நிலையை உருவாக்குவதில் பல நாடுகள் முன்னின்று உழைத்திருந்தன அந்த நன்மைகளை நாம் இழந்துவிடக் கூடாது. ரஜபக்சாவின் கட்டுப்பாட்டில் அரச ஊடகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ராஜபக்சாவின் நியமனத்தை ரணில் எதிர்த்ததைக் கூட அவர்கள் தெரிவிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் அவர்களின் டுவிட்டர் பதிவு

 

 

சிறீலங்கா அரச தலைவர் சிறீசேனாவின் நடவடிக்கையானது சிறீலங்காவில் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துள்ளது. பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்த சிறீசேன தற்போது போர்க் குற்றம் மற்றும் காணாமல் போதல் போன்றவற்றிற்கு காரணமானவரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளார்.

 

 

இதற்கு ஒரு அவசர நடவடிக்கை தேவை, இலங்கை மக்கள் அனைவரும் இந்த விடயத்தை கையில் எடுக்க வேண்டும். முன்னர் பெருமளவு குருதி சிந்தப்பட்டுள்ளதால் மீண்டும் பின்னோக்கி செல்லமுடியாது. ஒரு போர்க்குற்றவாளியை சிறீசேனா மீண்டும் பதவிக்கு கொண்டுவந்துள்ளார்.

 

 

அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம்

 

 

சிறீலங்கா அரசும் அதன் சபாநாயகரும் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டவேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே யார் ஆட்சியில் அமர வேண்டும் என்பதை முடிவு செய்யவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சிறீலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கான பிரிவு தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

 

 

சிறீலங்கா அரசு ஜெனிவாவில் எட்டப்பட்ட உடன்பாடுகளை கைப்பிடிக்க வேண்டும், மனித உரிமைகளைப் பேணுதல், விசாரணைகளை மேற்கொள்ளுதல், நீதியை பெற்றுக் கொடுத்தல், மீள்கட்டுமானம் போன்றவை தொடர்பி;ல் ஜெனிவாவில் உடன்பாடு எட்டப்பட்டதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

 

 

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம்

 

 

இன்று (30) கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலவரங்கள் வெடிக்கலாம். சிறீலங்கா அரசு மேற்கொண்ட ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளின் விளைவே இதுவாகும்.

 

 

சிறீலங்கா அரசு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரநிதிகளின் கருத்துக்களை அறியவேண்டும் என தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

 

ஐரோப்பிய ஒன்றியம் – பிரித்தானியா அரசு என்பன தமது குடிமக்களுக்கான பயண எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிதிருப்பதியையும் வெளியிட்டுள்ளது.

 

 

இதனிடையயே மகிந்தா அரசு தொடர்ந்தால் சிறீலங்கா மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத் தடையை விதிக்கும் சாத்தியங்கள் உள்ளதாக ராஜித சேனராத்னா கொழும்பில் தெரிவித்துள்ளார்.

 

 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசை தாம் ஏற்கப்போதவில்லை என அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாகவும், அரசியல் சட்டவிதிகளை மதிக்காது விட்டால் பொருளாதாரத்தடை கொண்டுவரப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

அதாவது இந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது இந்தியா தன்னிட்சையாக மேற்குலகத்திற்கு எதிராக நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளதாகவே தெரிகின்றது. ஆனால் இந்தியாவைத் தளமாகக் கொண்ட பல ஆய்வளர்கள் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயற்படுவதாக தமது ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.

 

 

அதாவது தமிழ் மக்களை திசை திரும்பும் நடவடிக்கையாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

 

 

செய்தித் தொகுப்பு ஈழம் ஈ நியூஸ்