யாழ்.பல்கலையில் தியாகி திலீபன் அவர்களின் நினைவுநாள் இன்று உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது

0
687

thileepan_remember_jaffna_2013_2தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து எமது மக்களின் விடுதலைக்காக தன்னை தியாக ஆகுதியாக்கிய தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது ஆண்டு நினைவுதினம் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வேளை மாணவர் பொது அறையில் ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கு தியாகி திலீபன் அவர்களின் உருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

26 வருடங்களுக்கு முன்னர் திலீபன் உயிர்நீத்த இதே நாளன்று 10.48 மணிக்கு மாணவர்கள் ஈகச் சுடரேற்றி மௌன வணக்கம் செலுத்தினர். இதன் போது மாணவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக காணப்பட்டனர். இதேவேளை, திலீபன் அவர்களின் நினைவை முன்னிட்டு இன்று காலை பல்கலைக்கழகத்தின் கட்டடங்கள் பலவற்றிலும் விளம்பரப் பலகைகளிலும் திலீபன் அவர்களின் அஞ்சலிப் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனாக இருந்த இராசைய பார்தீபன் என்ற திலீபன் அவர்கள் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசாங்கத்தாலும் படைகளாலும் சீரழிக்கப்பட்டதை, கொல்லப்பட்டதைக் கண்டு பொறுக்க முடியாமல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அங்கத்தவராக தன்னை இணைத்துக்கொண்டார்.
thileepan_remember_jaffna_2013_3
தாயத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வழிசமைக்குமாறு கோரி 26 ஆண்டுகளுக்கு முன்னர் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு முன்னர் திலீபன் உண்ணாவிரதமிருந்தார். 12 தினங்கள் நீராகாரம் கூட அருந்தாமல் இந்திய அரசிடம் நீதி கோரிய அவரின் கோரிக்கைகளை இந்திய அரசாங்கம் நிறைவேற்ற மறுத்தது.

இந்த நிலையில் 1987 செப்ரெம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 10.48 மணியளவில் திலீபனின் உயிர் எங்களை விட்டுப் பிரிந்தது. தாயகமெங்கும் சோகமயமானது. அன்று தொடக்கம் இன்று வரை திலீபன் அவர்கள் வீரகாவியமான நாளை மக்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.