பொதுநலவாய போட்டிகளுக்கு போர்க்குற்றவாளியான அதிபர் இராசபக்சவை அழைப்பதை கண்டித்து ஸ்கொட்லாந்து முதல்வருக்கு கடிதம்.

சர்வதேசப் போர்க்குற்றவாளியாகக் கருதப்படும் சிறிலங்கா அதிபர் மகிந்த இராசபக்ச ஸ்கொட்லாந்தில் நடைபெற இருக்கும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டதைக் கண்டித்து உலகளாவிய தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பிரித்தானியா எங்குமுள்ள தமிழ் சமூகங்கள் இணைந்து ஸ்கொட்லாந்து முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தின் முழுமையான வடிவம் பின்வருமாறு:

அன்பான முதலமைச்சர் அவர்களுக்கு,

விடயம்: பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளும் சனாதிபதி மகிந்த இராசபக்சவுக்கான அழைப்பும்.

Tamil youth
மிக நீண்ட காலமாகத் தமது சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஸ்கொட்லாந்து மக்களின் போராட்டத்தோடு ஈழத்தமிழர்களின் சுதந்திர போராட்டம் தொடர்புபடுவதால், தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பிரித்தானியா எங்குமுள்ள தமிழ் சமூகங்கள் சார்பாக, ஸ்கொட்லாந்தின் வரலாற்றுத் திருப்பம் வாய்ந்த தனிநாடாகப் பிரிந்துசெல்வதற்கான கருத்துக்கணிப்பில் வெற்றிபெற தங்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். இலங்கைத் தீவின் வடகு-கிழக்கைத் தமது பூர்வீகத் தாயகமாகக் கொண்ட தமிழர்கள், பிரித்தானியா இலங்கையை விட்டு வெளியேறிய நாளிலிருந்து சுதந்திரத்துக்காக நீண்ட காலமாகப் போராடிவருகிறார்கள். சிறிலங்காவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்டுவரும் திட்டமிட்ட தாக்குதல்களும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையும் இன்றுவரை தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.

2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட ஆயுத மோதலின் போது சிறிலங்காவின் இனப்படுகொலை முகத்தை உலகம் கண்டுகொள்ளத் தவறிய வேளை, சிறிலங்காவின் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையானது, நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் வாயிலாகவும் சிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலை குறித்து சனல்-4 ஊடகத்தால் காண்பிக்கப்பட்ட ஆவணப் படங்கள் ஊடாகவும் உலகிற்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இனப்படுகொலையை நடத்திவரும் சிறிலங்காவில் 2013 பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதற்கான முடிவை அரசசார்பற்ற நிறுவனங்களும் மனித உரிமைகளுக்கான அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த நிலையிலும், பிரித்தானியாவும் பொதுநலவாய நாடுகளும் அங்கு அந்த மாநாட்டை நிகழ்த்தியதன் மூலம் ஒரு வரலாற்றுத் தவறை இழைத்தன. தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான சிறிலங்காவின் நீண்ட வரலாற்றைக் கொண்ட திட்டமிட்ட தாக்குதல்கள் சான்றாக இருப்பதோடு, அவர்கள் பின்பற்றுகின்ற மதங்களுக்கு எதிரான அதிகரித்துவரும் சகிக்க முடியாத்தன்மை இன்று தொடர்ந்து வருகிறது.

ஸ்கொட்லாந்தைப் போன்றே தமிழர்களும், பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியாளர்களால் ஒற்றையாட்சிக்குள் இணைக்கப்படுவதற்கு முன்னர் சிறிலங்காவின் வடக்கு – கிழக்கில் தமது சொந்தத் தனியரசை நிறுவியிருந்தார்கள். அன்று அழைக்கப்பட்டது போல், இலங்கைத் தீவில் இருந்த இருவேறு இராச்சியங்கள் 1833 ஆம் ஆண்டு பிரித்தானியாவால் தமது சொந்த நிருவாக நோக்கங்களுக்காக ஒன்றிணைக்கப்பட்டது. அந்த ஒற்றையாட்சி முறைமையானது பிரித்தானியாவால் வரையப்பட்ட நில எல்லைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. முந்தைய காலனி ஆட்சியாளர் என்ற முறையில், பலியாட்களான தமிழர்களை சிறிலங்காவில் சிங்கள தேசத்தின் கொடுமைகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய நியாயமான கடப்பாடு பிரித்தானியாவுக்கு உள்ளது.

1948, 1956, 1958, 1967, 1977, 1983 இல் நடைபெற்ற தமிழர் எதிர்ப்புப் படுகொலைகள், கலவரங்கள் மற்றும் 2009 இல் நடத்தப்பட்ட இனப்படுகொலையின் உச்சம் போன்ற தமிழிர்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்களின் காரணமாக ஒற்றையாட்சி நாடு என்பதற்கான நம்பிக்கையானது மோசமாக தோல்வியடைந்தது. இன்றும் தமிழ் மக்களின் பாதுகாப்பை பிரித்தானியா உறுதிப்படுத்தாமல் உள்ளது. ஆதேவேளை ஸ்கொட்லாந்து மக்கள், நாடுதழுவிய ரீதியிலான ஒரு கருத்துக்கணிப்புக்கு வாக்களிப்பதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் தமத அடையாளத்தை மீள நிறுவிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழர் தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, தமிழ் மக்களுக்கான மனித உரிமைகளை மறுக்கின்ற ஒரு நாட்டை ஆட்சிசெய்கின்ற ஒரு இனப்படுகொலைச் சூத்திரதாரியான, ஓரு போர்க் குற்றவாளியான சனாதிபதி மகிந்த இராசபக்ச பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக இன்னும் அழைக்கப்பட இருப்பதானது, ஒரு கருத்துக்கணிப்பு ஊடாக சுதந்திரத்துக்கான உரிமையை நிலைநாட்டவுள்ள ஸ்கொட்லாந்தின் நேர்மைக் குறைவாக நாம் பார்க்கிறோம். மேலும், அண்மையில் ஐகிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பால் மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க சிறிலங்கா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஸ்கொட்லாந்து, சிறிலங்காவின் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் ஒரு பங்காளியாக இருப்பதைத் தடுப்பதற்கு தங்களது சிறந்த பணியறைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். போதுநலவாயப் போட்டிகளுக்கு சனாதிபதி மகிந்த இராசபக்சவை அழைப்பதன் மூலம் நீங்கள் உலகின் மிக மோசமான இனப்படுகொலை நாடுகளுள் ஒன்றுக்கு மரியாதை வழங்கப்போவது மட்டுமன்றி, அடிப்படையில் ஸ்கொட்லாந்தின் கருத்துக்கணிப்பு எதற்கு எதிராக நடைபெற உள்ளது என்கின்ற அந்த நாட்டின் பார்வைகளுக்கும் ஆதரவு வழங்குவதாக அமையும்.

1948 இல் இருந்து நடத்தப்பட்டுவரும் தமிழ் இனப்படுகொலை தொடர்பாக ஐ.நா.வால் ஒரு சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு, மேற்கொண்டு எந்த இரத்தமும் சிந்தாமல் தமிழர்கள் மத்தியில் அமைதியானதும் சனநாயக முறையிலானதுமான ஐ.நா.வின் ஆதரவோடு ஒரு கருத்துக்கணிப்பு நடாத்தப்படும்வரை, தென்னாபிரிக்க இன ஒதுக்கீட்டுக் கொள்கை போன்று, ஒவ்வொரு துறையிலும் சிறிலங்காவை புறக்கணித்து, தனிமைப்படுத்த வேண்டும்.

இறுதியாக, சிறிலங்காவின் திட்டமிட்ட கொடுமைகளதும் இனப்படுகொலையினதும் முடிவைப் பெறுவதில் தமிழர்களின் வேதனையை ஸ்கொட்லாந்து உணர்ந்துகொண்டு, ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு சிறிலங்கா சனாதிபதியை அழைக்காது, சிறிலங்காவைத் தனிமைப் படுத்துவதற்கு பொருத்தமான நடவடிக்கையை எடுக்குமென்று தமிழர்களாகிய நாம் மிகுந்த ஆர்வத்தோடு நம்புகிறோம்.

Full text of the letter signed by diaspora student and youth organizations from across the globe

http://www.tamilnet.com/img/publish/2014/07/Diaspora_student_and_youth_organizations_Letter_to_Alex_Salmond.pdf