வடமாகாணசபைத் தேர்தல் யாருடைய நலனுக்காக – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

0
675

Vigneswaran-300x225வடமாகாண சபைக்கான தேர்தல் மற்றும் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான சர்ச்சைகளே தற்போது சிறீலங்காவில் பேசப்படும் முக்கிய விடயம். அதிலும் வடமாகாண சபைத் தேர்தலின் மூலம் தமிழீழம் உருவாக்கப்பட்டுவிடும் என்ற கருத்தை விதைப்பதில் தென்னிலங்கை இனவாத அரசியல் சக்திகள் முனைப்பாக செயற்பட்டுவருகின்றன.

ஏற்கனவே தமிழ் மக்களால்  1987 ஆம் ஆண்டே நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தை தேர்தலின் முன்னர் முற்றுமுழுதாக செயற்திறனற்றதாக மாற்ற வேண்டும் என தென்னிலங்கை அரசியல்வாதிகள் கூச்சலிடுகின்றனர்.

வடமாகாணசபைக்கான தேர்தலை நடாத்துவோம், 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என பிரச்சாரம் மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு அதற்கு எதிராக  இனவாத சக்திகளை தென்னிலங்கையில் ஊக்கிவித்துவருவதும் வெளிப்படையானது.

ஏற்கனவே இராணுவ ஆளுணர்களின் கீழ் முழுக்க முழுக்க இரணுவத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள வட மகாணத்தில் தேர்தலை நடத்துவதன் மூலம் சிறீலங்கா அரசு சாதிக்க முனைவது என்ன? அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் சிறீலங்காவுக்கு ஏன் தற்போது ஏற்பட்டது?

போர் நிறைவடைந்த பின்னர் சிறீலங்காவின் பொருளாதாரம் பெரு வளர்ச்சியை காணும் என சிறீலங்கா அரசு எண்ணிய போதும், அது நிறைவேறவில்லை. சிறீலங்காவுக்கு வழங்கி வந்த வர்த்தக வரிச்சலுகைனை ஐரோப்பிய ஒன்றியம் 2010 ஆம் ஆண்டு நிறுத்திக் கொண்டது. வரிச்சலுகை வழங்கப்படும் நாடுகளில் ஜனநாயக ஆட்சி நிலவவேண்டும் என்பது வரிச்சலுகையின் அடிப்படை நிபந்தனை. ஆனால் சிறீலங்காவில் அது நிலவவில்லை என்பது அவர்களின் வாதம்.

ஐரோப்பிய ஓன்றியத்தின் இந்த முடிவால் சிறீலங்கா அரசு வருடம் தோறும் 350 மில்லியன் டொலர்களை இழந்து வருவதுடன், பல நூற்றுக்கணக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்களும் முடப்பட்டுள்ளன. இந்தநிலை தொடர்ந்தால் எதிர்வரும் 10 வருடங்களில் சிறீலங்கா 5 பில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் வேறு நாடுகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்களை தேடி ஐரோப்பிய நிறுவனங்கள் சென்றால் அவர்களை மீண்டும் சிறிலங்காவுக்கு கொண்டுவருவது கடினமான காரியம்.

எதிர்வரும் ஓக்டோபர் மாதம் கொண்டுவரப்படவுள்ள புதிய வரிச்சலுகையானது, அடுத்த 10 வருடங்களுக்கு வழங்கப்படும் எனவும், அதன் மூலம் 29 நாடுகள் பலனடையும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனை சிறீலங்கா மீண்டும் பெற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே.

இந்த வரிச்சலுகையானது சிறீலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 7,000 உற்பத்திப் பொருட்களுக்கு வரி விலக்கை வழங்கி வந்தது. மேலும் பல மாதங்களுக்கு முன்னர் அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1.9 பில்லியன் டொர்களை சிறீலங்கா அரசு கடனாக கேட்டிருந்தது. சிறீலங்கா அரசு பட்ட கடன்களின் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக சிறீலங்கா அரசு அதனை கேட்டிருந்தது. ஆனால் அனைத்துலக நாணய நிதியத்தின் கடன்களும் பல நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டவை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த 2012 மார்ச் இலும் 2013 மார்ச் இலம் சிறீலங்கா தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை ராஐபக்ச அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்த வேண்டும் என்பதும், பொறுப்புக் கூறல் தொடர்பில் உள்ளகப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுமாகும். இவ்விரண்டு விடயங்களும் சிறீலங்கா அரசுக்கு நெருக்கடியை கொடுக்கக்கூடிய விடயங்கள் அல்ல.

அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் போர் முடிவடைந்த பின்னரான சூழ்நிலையில் சிறீலங்கா அரசு இந்தியாவின் பிராந்திய நலன்களையும், அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் பூகோள நலன்களை அனுசரித்தும் செயற்படவேண்டும். இல்லையேல் இலங்கைக்கு பாதிப்பத் தரக்கூடிய தீர்மானங்களையும் எதிர்காலத்தில் தங்களால் மேற்கொள்ள முடியும் என்ற செய்தியை வழங்குவதேயாகும்.

வடமாகாண சபைத் தேர்தலை நடாத்துவதன் மூலம் எல்எல்ஆர்சி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற அழுத்தங்கள், பொருளாதாரச் சிக்கல்கள், பூகோள அரசியல் சிக்கல்கள், போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நெருக்கடிகள் இவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியுமென இலங்கை அரசு கணக்குப் போடுகின்றது.

மறுபுறத்தில் யுத்தம் மூலம் தமிழ் மக்களையும் புலிகளையும் அழிப்பதற்கு துணை நின்ற  சர்வதேச சமூகம் அரசியல் தீர்வு எதனையும் பெற்றுத் தரவில்லை என்ற அதிருப்தியும், ஏமாற்றமும் நிலத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழக மக்கள் மத்தியிலும் உள்ளது. இந்நிலையில் 13 ம் திருத்தச் சட்;டத்தின் கீழான மாகாண சபைத் தேர்தலை வடக்கிலும் நடாத்தச் செய்வதன் மூலம், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக் கொடுத்துள்ளதாகக் காட்டி தமிழ் மக்களை சமாளித்துக் கொள்ளவும்;, தமது நிகழ்ச்சி நிரலில் செயற்படும் தமிழ்த் தலைமைகளை பாதுகாத்துக் கொள்ளவும், முடியுமென  இந்தியாவும், மேற்குலக நாடுகளும் கணக்குப் போடுகின்றது. கடந்த மார்ச் மாதம் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா தீர்மானத்தில் வடமாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படல் வேண்டும் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டமைக்கு இதுவும் ஓர் முக்கிய காரணமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை அவர்கள் எதிர்வரும் மாதம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சிறீலங்காவின் இந்த நாடகம் ஆரம்பமாகி உள்ளது.

எனினும் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள வரைவுகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணசபைகள் அவை விரும்பும் பட்சத்தில் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்க முடியும் என்ற சரத்தை நீக்கவேண்டும் என்பதிலும், சாத்திரப்படிக்கு குறிப்பிடப்பட்டுள்ள காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை நீக்க வேண்டும் என்பதிலும் சிறீலங்கா அரசு தீவிரமாக செயற்பட்டுவருகின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அவசரமாக கூட்டும் சிறீலங்கா அரசு 13 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள காணி பொலிஸ் அதிகாரங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அறிய முடிகின்றது. பல அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை புறக்கணித்த போதும் சிறீலங்கா அரசு அதன் நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளது.

இம் மாதம் முதல் வாரத்தில் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனிடமும் சிறீலங்கா அரசு இதனையே தெரிவித்துள்ளது. அதாவது இலங்கை போன்ற சிறிய நாட்டில் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை பகிர்வது சிக்கலானது என ராஐபக்சே மேனனிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி மேனனுடனான சந்திப்பின் பின்னர் ஐனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எந்தத் தடைகள் வந்தாலும் 13 ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் நடவடிக்கைகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

மேனனின் வருகைக்குப் பின்னர் சம்பந்தனை அழைத்துப்பேசிய சனாதிபதி மகிந்தராஐபக்ச நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு மேற்கொள்ளும் 13 ம் திருத்தம் உள்ளிட்ட எந்தவொரு முயற்சியிலும் அரசு முன்வைத்த காலை பின்வைக்கப் போவதில்லை. நாங்கள் நினைத்ததை முடித்தே தீருவோம். இதனை தெட்டத் தெளிவாக இந்தியாக்குத் தெரிவித்துவிட்டோம் என்று சம்பந்தனிடம் கூறியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனவே சனாதிபதி மேனனிடம் கூறியதும், சனாதிபதி செயலகத்தின் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதும், சனாதிபதி சம்பந்தனிடம் கூறியுள்ள விடயங்கள் ஊடாகவும் புலப்படுவது என்னவென்றால் பெயரளவுக்கேனும் ஆளுனரது கைகளில் இருக்கும் காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களும் படிப்படியாக நீக்கப்படும் என்பதேயாகும்.

அப்படியாயின் 13 இல் (ஆளுனரின் கைகளில்) உள்ள அதிகாரங்களை பாதுக்காப்பதற்காக என்று கூறி மேனன் அவர்களை அவசரமாக இலங்கைக்கு அனுப்பிய இந்தியாவினது காணி பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்படுவது பற்றிய நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை 13 ம் திருத்தச் சட்டத்தில் உள்ளதாகக் கூறப்படும் எந்த அதிகாரங்கள் நீக்கப்படுவது பற்றியும் எந்த அக்கறையோ, கவலையோ கிடையாது. 13 ம் திருத்தச் சட்டம் என்பது வெறும் எலும்புக் கூடாகவேனும் இருந்தால் போதும் என்பதே நிலைப்பாடாக உள்ளது. ஏனெனில் அது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நியாயப்படுத்தும் இணைப்பு ஆவணமாக உள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்தை தாஜா பண்ணி தன்பக்கம் கொண்டுவர விரும்பும் இந்தியா தமிழ் மக்களுக்கு அதிகாரம் கொடு என்று கேட்டு சிங்களத் தரப்பை ஆத்திரப்படுத்தி, தனக்கு எதிரான சக்திகளுடன் நெருக்கமாக்கிவிடும் செயலை செய்ய விரும்பாது. மாறாக  தமிழ்த் தரப்பை மேலும் மேலும் விட்டுக் கொடுப்புக்களை செய்து சிங்களத்துடன் அனுசரித்துச் செல்லுமாறே நிற்பந்திக்கும்.

இந்நிலையில், வடமாகணசபைத் தேர்தலும், 13 ஆவது திருத்தச்சட்டத்தின் அமுலாக்கமும் பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து (Scotland) மாநிலத்தைப் போல, கடனாவின் கியூபெக் (Quebec) மாநிலத்தைப் போல, ஸ்பெயின் நாட்டின் கற்றலோனா (Catalonia) மாநிலத்தைப் போல ஒரு நிலையை சிறீலங்காவில் உருவாக்கிவிடும் என தென்னிலங்கையின் கடும்போக்காளர்கள் தென்னிலங்கை மக்களை மிரட்டி வருகின்றனர்.

10,587 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கொசோவா தனிநாடாக பிரிந்து சென்றபோது, அதிகளவான கடற்கரை பகுதியையும், 8,686 சதுர கி.மீ பரப்பளவும் கொண்ட வடபகுதி கிழக்குடன் இணைந்து தனிநாடா பிரிந்து செல்வது சாத்தியமானது ஒன்று என்பதும் அவர்களின் வாதம்.

ஆனால் ஸ்கொட்லாந்திற்கு பிரித்தானியா வழங்கிய அதிகாரங்களுடன், 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஒப்பிடும் போது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்களையே காணமுடியும். காணி அதிகாரம், காவல்துறை அதிகாரம், தனியான நாடாளுமன்றம், பணத்தை ஸ்கொட்லாந்து வங்கிகளே அச்சிடும் உரிமை, மாநில வங்கிகள், தனியான கல்வி அதிகாரம் என்ற அதிகாரங்களை கொண்ட ஸ்கொட்லாந்தின் அதிகாரங்களுடன் இந்தியாவும், சிறீலங்காவும் இணைந்து தமிழ் மக்கள் மீது திணிக்க முயலும் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் அதிகாரங்களை ஒப்பிட முடியாது.

வடமாகணசபைத் தேர்தல் என்ற துரப்புச் சீட்டை பயன்படுத்தி தத்தம் நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள இலங்கை அரசும், இந்திய மற்றும் மேற்குலக அரசுகளும் காய்நகர்வுகளை செய்கின்றபோது, அதில் போட்டியிடுவதன் மூலம் அந்த காய்நகர்த்தல்களுக்கு வழிசமைத்துக் கொடுக்கும் தமிழ்த் தரப்பு யாருடைய நலனுக்காக அதில் போட்டியிட்டு மாகாண சபைகளையும், 13ம் திருத்தத்தினையும் ஏற்றுக் கொள்வதான தோற்றப்பாட்டினை உலகிற்குக் காட்ட முயல்கின்றது.

இதுநம்தேசம்