வண பிதா மீதான தாக்குதலுக்கு மன்னார் ஆயர் கடும் கண்டனம்

0
688

Ch-4-Jurnalistயாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்திய தமிழ் உறவுகள் மீதும், கத்தோலிக்கப் பாதிரியார் மீதும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமையவே பொலிஸார் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இது ஒரு மிருகத்தனமான செயல். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .

காணாமற்போனோரின் உறவினர்கள் வடக்கிலிருந்து கொழும்பு சென்று பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த சர்வதேச தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் போராட்டங்களை நடத்த முயற்சித்தனர். எனினும், கொழும்பு சென்ற அவர்களை இடைவழியில் அரச படைகள் தடுத்துத் திருப்பியனுப்பி விட்டன.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டிருந்த பிரிட்டன் பிரதமரை நேரில் சந்தித்து மனுவைக் கையளிப்பதற்காக காணாமற் போனோரின் உறவினர்கள் அமைதி வழியில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைக் குழப்பியடிப்பதற்காகவும், பிரிட்டிஷ் பிரதமரை அவர்கள் நேரில் சந்திப்பதைத் தடுத்துநிறுத்துவதற்காகவும் பொலிஸார் படுமோசமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என்று பாராமல் அங்கு நின்ற அனைவர் மீதும் பொலிஸார் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமையவே தமிழ் உறவுகள் மீதும், கத்தோலிக்க பாதிரியார்கள் மீதும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். மக்களின் அஹிம்சைப் போராட்டத்தில் கலந்துகொண்ட கத்தோலிக்கப் பாதிரியார்களை அடித்துக் கீழே விழுத்திய பொலிஸார், சப்பாத்துக் கால்களால் அவர்களை உதைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கத்தோலிக்கப் பாதிரியார்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். எனவே, சர்வதேச சமூகம் விழித்தெழுந்து இலங்கை அரசின் மனித நேயமற்ற – மிருகத்தனமான செயல்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்தக் கொடூர சம்பவங்களைக் கண்களால் மட்டும் பார்த்துவிட்டு சர்வதேச சமூகத்தினர் அமைதி காக்கக்கூடாது. அடுத்தகட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும்

மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை.