கடல் ஆதிக்கத்தின் விரிவாக்கமே தற்போது உலகின் மிகப்பெரும் அரசியல் நெருக்கடிக்கான காரணியாக உருமாற்றம் பெற்றுவருகின்றது. உக்கிரேனுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைக்கும் கடல் சார் ஆதிக்கப்போட்டியே காரணம்.

 
2014 ஆம் ஆண்டு உக்கிரேனின் கிரைமியா பகுதியை தனதாக்கிக் கொண்ட ரஸ்யா தற்போது கருங்கடல் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உக்கிரேனின் கடற்படையின் 3 சுற்றுக்காவல் கப்பல்களையும் 25 கடற்படையினரையும் சிறைப்பிடித்துள்ளது.

 
நேட்டோ படைக்கும், மேற்குலகத்திற்கும் விடுக்கப்படும் சவலாகவே இதனைக்கருதும் ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் உக்கிரேனுக்கு ஆதரவாக களமிறங்கத் தயாராகி வருகின்றன. அதன் ஓரங்கமாக பிரித்தானியாவும், அமெரிக்காவும் தமது கடற்படைக்; கப்பல்களை கருங்கடல் பகுதியை நோக்கி நகர்த்தியுள்ளன.

 
சீனாவின் கடல் ஆதிக்கம் சென்கடு, டியாகு மற்றும் பரசல் உட்பட பல சிறிய தீவுகளினூடாக விரிவாக்கம் பெற்றுவருவது உலக அரசியலிலும், படைத்துறை சமநிலையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்ற இந்த வேளையில் ரஸ்யா தனது களமுனையை திறந்துள்ளது.

 
இந்த கடல் ஆதிக்கப்போட்டியே தற்போது சிறீலங்கா அரசியலிலும் பலமாக எதிரொலித்து வருகின்றது. சிறீலங்கா அரச இயந்திரத்தை முற்றாக செயலிழக்கச் செய்துள்ள இந்த பிராந்திய அதிக்கப்போட்டியானது, எந்த வித விட்டுக்கொடுப்புக்களுக்கும் வாய்ப்புக்கள் இல்லாத நிலையை பிராந்திய மற்றம் உலக வல்லரசுகளிடம் ஏற்படுத்தியுள்ளது.

 

 

சீனாவின் வளர்ச்சிக்கும் அதன் கடற்படையின் விரிவாக்கத்திற்கும் இந்தியா மற்றும் யப்பான் ஆகிய ஆசிய நாடுகளின் உதவிகளுடன் தடைகளை ஏற்படுத்தலாம் என்ற அமெரிக்காவின் கணிப்பு தவறாகிப்போயுள்ளது.

 
அதற்கு இரண்டு காரணங்களை கூறமுடியும், ஒன்று சீனாவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுப்பதென்பது இந்தியாவால் இயலத ஒன்றாக தற்போது மாற்றம் பெற்றுள்ளது. இரண்டாவது தென் ஆசியப் பிராந்தியத்தில் தனக்கு அருகாமையில் அமெரிக்காவின் பிரசன்னம் இருப்பதை இந்தியா விரும்பவில்லை.

 
தனக்கு எதிரான மறைமுகமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா கருதுகின்றது. எனவே தான் இந்தியாவை நம்பாத அமெரிக்கா தனது நேரிடையான தலையீட்டிற்கு முயற்சித்து வருகின்றது. அதனை முறியடிக்கும் இந்தியாவின் திட்டம் தான் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் மீள் வருகையும், சிறீலங்காவின் தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனாவின் கடும்போக்கான கொள்கையும்.

 
அதாவது இந்திய மற்றும் சீனாவின் ஆதரவுடன் மேற்குலகத்துடன் நேரிடையாக மோதிப்பார்ப்பதற்கு சிங்கள தேசம் முயற்சி செய்கின்றது என்றே இதனைக் கருத முடியும். எனவே தான் பொருளாதாரத்தடை கொண்டுவரப்படும் மற்றும் உலக ஆதரவுகள் விலக்கப்படும் என்று மேற்குலகம் மிரட்டியபோதும் சிங்கள தேசம் ரணில் விக்கிரமசிங்காவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு பின்னிற்கின்றது.

 
1980 களில் சோவித்து ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இடம்பெற்ற பனிப்போரின் போது அமெரிக்காவின் இந்து சமூத்திரப் பிராந்திய ஆதிக்கத்தை தடுப்பதற்காக இந்தியா சிறீலங்காவின் இனமுரன்பாடுகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது.

 
சிறீலங்காவில் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்போரை ஊக்கிவித்தது, பல போராட்ட அமைப்புக்களுக்கு ஆயுதங்களும் பயிற்சிகளும் வழங்கியது. அதாவது இந்தியா ஒரு ஆயுதப்போரை விரும்பியது. அதன் பின்னர் தனது படைகளை களமிறக்கி அமெரிக்காவின் கனவைக் கலைத்தது.

 
ஆனால் இந்தியப் படைகளால் சிறீலங்காவில் நிரந்தரமாக தளம் அமைக்க இயலவில்லை, அதற்கு விடுதலைப்புலிகளும் தென்னிலங்கை மக்களின் இந்திய எதிர்ப்பு மனப்பான்மையும் காரணம்.

 
அரசியல் நெருக்கடிகளின் ஊடாக எட்டப்படும் உடன்பாடுகள் மூலம் தமது படைகளை அண்டைய நாடுகளில் வைத்திருப்பது என்பது அந்த நாடுகளின் பிரந்திய பாதுகாப்புக்கு பல அனுகூலங்களை ஏற்படுத்தும்.

 
எனவே தான் அமெரிக்கா தனது படைகளை உலகம் முழுவதும் பரவலாக நிலை நிறுத்தியுள்ளது.

 
உதாரணமாக வளைகுடா நாடுகளில் ஏறத்தாள 45,000 படைகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளபோது சிரியாவில் தனது 60,000 படைகளை கடந்த மூன்று ஆண்டுகளில் ரஸ்யா நிறுத்தியுள்ளது. ரஸ்யாவின் இந்த உத்தியானது தற்போது வளைகுடா நாடுகளில் அதன் ஆதிக்கத்தைச் செலுத்த அனுகூலமாக மாறியுள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வொசிங்டன் போஸ்ட் நாளேடு தெரிவித்துள்ளது.

 
அதாவது இந்தியப் படைகள் சிறீலங்காவில் நிரந்தரமாக தங்கியிருந்தால் இந்தியா தனது தென் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கும். ஆனால் 1987 களில் இந்தியா மேற்கொண்ட தவறான நடவடிக்கைகள் தான் இந்தியாவின் தற்போதைய தோல்விக்கான காரணம்.
இன்று சீனாவிடம் பறிபோயுள்ள சிறீலங்காவினை மீட்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் தனித்தனியாக முயற்சி செய்கின்றன.

 
எனவே தான் சிறீலங்காவில் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவர இந்தியா முயன்றது, அது தற்போது பின்னடைவைச் சந்திக்கப்போகின்றது என்ற நிலையில் தனக்கு சாதகமாக இயங்கும் குழுக்களைக் கொண்டு சிறீலங்காவில் சிறிய அளவில் மீண்டும் ஒரு ஆயுதப்போரை முன்னெடுக்க இந்திய உளவுத்துறை முயற்சி செய்கின்றது.

 
இந்தியாவின் இந்த திட்டத்திற்கு மகிந்தா தரப்பு தனது ஆதரவுகளை மறைமுகமாக வழங்கியுள்ளது. அதன் வெளிப்பாடு தான் கடந்த மாதம் 29 ஆம் நாள் நள்ளிரவு தென்தமிழீழத்தில் உள்ள வவுணதீவு பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்.

 
சிறீலங்கா காவல்துறையினரின் மீது ரி-56 துப்பாக்கி கொண்டு நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் கொல்லப்பட்டதுடன், தாக்குதலாளிகள் காவல்துறையினரின் ஆயுதங்களையும் கைப்பற்றி சென்றுவிட்டனர்.

 
வழமை போல இந்த தாக்குதலை விடுதலைப்புலிகள் செய்திருக்கலாம் என சிங்கள படைத்தரப்பு குற்றம் சுமத்தியுள்ள போதும், அதனை உறுதிப்படுத்துவதற்கு மிகப்பெரும் முயற்சியை எடுத்துள்ளார், மகிந்தாவின் விசுவாசியும், சிறீலங்கா அரசின் பிரதான ஒட்டுக்குழுவான கருணா குழுவின் தலைவருமான கருணா.

 
தனது வாதத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைத் தலைவர் திரு பொட்டு அம்மான் நோர்வேயில் இருந்து இந்த தாக்குதலை வழிநடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் சிறீலங்கா அரச தரப்பின் ஒரு பிரிவும், இந்திய உளவுத்துறையுமே இந்த தக்குதலின் பின்னனி என்பது வெளிப்படையானது.

 
அதற்கான காரணங்கள் பல, பூகோள அரசியலில் இந்திய மற்றும் மகிந்தா தரப்பு சந்தித்த நெருக்கடி ஒருபுறம் இருக்க, கடந்த மாதம் தமிழீழத்திலும், தமிழகத்திலும் பெரும் எழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் இந்திய கொள்ளை வகுப்பாளர்களையும், சிங்கள தேசத்தையும், ஒட்டுக்குழுக்களையும் அச்சமடைய வைத்துள்ளது.

 
விடுதலைப்புலிகளை போரில் வீழ்த்தியதுடன், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிதை;துவிடலாம் என நம்பிய இந்த தரப்புக்கள் தற்போது தமிழ் மக்களின் விடுதலை உணர்வு பல மடங்கு உச்சம் பெற்றதை கண்டு அஞ்சுகின்றனர்.

 
அதாவது தமிழ் மக்களின் இந்த விடுதலை உணர்வும், தமிழகத்தின் எழுச்சியும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மேலும் ஒரு சமச்சீரற்ற களமுனையை திறந்துவிடும் என்ற அச்சம் இந்தியாவையும், சிறீலங்காவையும் ஆட்கொண்டுள்ளது.

 
எனவே அதனை முறியடிப்பதற்கு தமிழ் மக்கள் மீது மீண்டும் ஒரு இனப்போரை கட்டவிழ்த்துவிட சிங்கள இந்திய கொள்கைவகுப்பாளர்கள் திட்டமிடுகின்றனர். அதற்கான ஆயுதக்குழு ஒன்றை தயார்படுத்த திட்டமிடுகின்றது இந்தியா.

 
சீனாவுடன் ஒப்பிடும் போது பொருளாதார மற்றும் படைத்துறைக் கட்டமைப்பில் பின்தங்கியுள்ள இந்தியா தனது பிராந்திய ஆளுமைக்காக உள்நாட்டுக் கலவரங்களையும், துணைஇராணுவக் குழுக்களையுமே பயன்படுத்தி வந்துள்ளது.

 

1990 களில் மலைதீவிலும் புளொட் துணைஇராணுவக்குழுவின் உதவியுடன் இந்தியா தனது பிராந்திய ஆளுமையை காண்பிக்க முனைந்திருந்தது.

 
ஆனால் இந்தியாவின் தற்போதைய திட்டத்திற்கு உதவியாக தன்னிடம் உள்ள ஒட்டுக்குழுக்களின் உதவியுடன் அதனை நிறைவேற்றியுள்ளது சிறீலங்கா அரசின் ஒரு தரப்பு.

 
இந்த ஆயுத நடவடிக்கை மூலம் இந்தியாவின் பிராந்திய ஆளுமையை காப்பாற்றுவது ஒருபுறம் இருக்க, தற்போது ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் நெருக்கடிகளில் இருந்து தப்பிப் பிழைக்க வழிதேடுகின்றது சிறீலங்காவின் தென்னிலங்கை அரசியல் தரப்பு.

 
அதாவது சிறீலங்காவில் தற்போது தோன்றியுள்ள அரசியல் நெருக்கடியானது ஒரு வன்முறையாக மாறலாம் என அமெரிக்கா அடிக்கடி எச்சரிக்கைகளை விடுத்து வந்ததும் நாம் அறிந்ததே. ஆனால் இந்த வன்முறை என்பது 1988 ஆம் ஆண்டு ஏற்பட்ட தென்னிலங்கை ஆயுதக்கிளர்ச்சி போன்றதாக இருக்கலாம் என்ற கருத்துக்களே பரவலாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை தமிழ் மக்கள் பக்கம் திருப்பிவிடுவதற்கு சிறீலங்கா அரசும் அதன் துணைஇராணுவக்குழுக்களும் மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடே வவுணதீவுத் தாக்குதல்.

 
எனினும் இந்த தாக்குதல் குறித்து மேற்குலக ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்காத போதும், இந்திய ஊடகங்கள் “மீண்டும் விடுதலைப்புலிகள்”; என்ற தலைப்பில் செய்திகளை வெளியிட்டு ஒரு பலவீனமான இந்திய சார்பு ஆயுதக்குழு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

 
ஆனால் இவர்களின் இந்த அரசியல் சதியில் சிக்கப்போவது முன்னாள் போரளிகளும், அப்பாவித்த தமிழ் மக்களுமே என்பது தான் தற்போதைய கவலைக்குரிய விடயமாகும். இதுவரையில் பல போராளிகளை சிறீலங்கா படையினர் கைது செய்துள்ளதுடன், தமிழ்ப் பகுதிகளில் தமது நடவடிக்கைகளையும் சிங்களப் படையினர் மீளவும் ஆரம்பிக்க முயன்று வருகின்றனர்.

 
பயங்கரவாதச்சட்டம் என்ற போர்வையில் படையினருக்கு அதிக அதிகாரங்களை வழங்கி மீண்டும் ஒரு இனச்சுத்திகரிப்புக்கு சிறீலங்கா தேசம் தயாராகின்றது. ஆனால் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் ஆதாரமற்ற இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழர் தரப்பு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளப்போகின்றது என்பதே தற்போதைய கேள்வி.

 
விடுதலை உணவாளர்கள், தேசியத்திற்கு ஆதரவானவர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் மிகவும் ஒரு ஆபத்தான நிலையை எதிர்கொண்டுள்ளனர். எனவே இந்த விடயத்தை தமிழர் தரப்பு மிகவும் கவனமாக கையாள்வதுடன், அனைத்துலகத்தின் அனுசரனையுடன் முறியடித்து முன்னாள் போராளிகள் உட்பட அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

 
தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறி 2008 ஆம் ஆண்டு வன்னியில் இருந்து வெளியேறிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும், மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் தற்போது சிறீலங்கா சென்று அங்குள்ள நிலமையை கண்காணிப்பதற்கு எந்ந பிரச்சனையும் இருக்கப்போவதில்லை.

 

 

ஆகவே சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதித்தன்மையற்ற நிலைப்பாட்டை முன்வைத்து முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் மக்களின் பாதுகாப்புக்களை உறுதிப்படுத்த உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகள் மூலம் ஒரு வலுவான கோரிக்கையை முன்வைக்கலாம்.
சிறீலங்கா மற்றும் இந்திய அரசுகளின் அரசியல் வியூகங்களுக்குள் நாம் வீழ்ந்து போகாமல் நகர்வுகளை மேற்காள்ள வேண்டும். அதற்குரிய சரியான அரசியல் கட்டமைப்பானது தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் தமிழகத்திலும் தேவையாகும்.

 
இந்த மூன்று தளத்திலும் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் தான் எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளப்போகும் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன், தற்போது எழுந்துள்ள அனைத்துலக கடல்சார் பூகோள அரசியல் நெருக்கடிகளில் தமிழர் தரப்பு தனக்கு என ஒரு பேரம்பேசும் அரசியல் சூழலையும் உருவாக்க முடியும்.