வாக்குறுதிக்கு மாறான செயல்

0
689

deepaமுதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியின் முன்பாக பதவிப் பிரமாணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்கள். பின்னர் ஜனாதிபதியின் முன்பாக பதவிப் பிரமாணம் செய்யப் போவதாக அறிவித்தார்கள்.

தமது தேர்தல் விஞ்ஞாபனத்திலோ அல்லது தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலே ஜனாதிபதியின் முன்பாக பதவி ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூட்டமைப்பு தெரிவிக்கவில்லை. அவ்வாறு தெரிவித்திருந்தால் இந்த தேர்தலின் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருக்கும்.

மாறாக இனக்கொலையாளியை தோற்கடிப்போம் என்றே தெரிவித்திருந்தனர். எதுவுமற்ற மாகாண சபையில் தாம் போட்டியிடுவதாகவும் இந்தத் தேர்தலில் ஒற்றுமையாக இலங்கை அரசை நிராகரிக்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.

இனப்படுகொலையாளியை தோற்கடிப்போம் என்று கூறிவிட்டு இனக்கொலையாளியிடம் பதவி ஏற்பது
வாக்களித்தமை காயுமுன்னே வாக்குறுதியை மீறும் செயல். ஜனாதிபதி முன்னிலையில் வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லாத பொழுது எதற்காக கூட்டமைப்பாகவே இந்த முடிவை எடுத்துள்ளது? இதன் மூலம் தற்பொழுதுள்ள மாகாண சபைத் தீர்வை ஏற்றுக்கொண்டதாக இலங்கை அரசாங்கம் கூறும் வாய்ப்புக்கள் உள்ளன.

தவிரவும் இலங்கை ஜனாதிபதிமீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை
குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து அவரைக் காப்பாற்றும் வகையிலும் இது அமையலாம். அவ்வாறான நெருக்கடிகளின்போது அவரே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதை நல்லெண்ண நடவடிக்கையாக சம்பந்தர் சித்திரிக்கின்றார். ஆனால் இந்த ராஜதந்திரங்களும் நல்லெணங்களும் ராஜபக்ச மற்றும் சிங்கள இனவாதிகளால் எப்படி பயன்படுத்தப்படும் என்பதே இங்கு சிக்கலாக உள்ளது.

அவர்கள் நல்லெண்ணம் நல்லிணக்கம் என்று கருதுவது சரணாகதி அரசியலாகும். இணக்க அரசியல் மூலம் எல்லாவற்றையும் இழப்பதையே நல்லெண்ணமாக அவர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே சிங்கக் கொடி ஏந்துதல், போருக்கு நன்றி தெரிவித்தல் என சம்பந்தர் வெளிப்படுத்திய நல்லெண்ண நிகழ்வுகளை நாம் பார்த்துக்
கொண்டிருந்திருக்கிறோம்.

இலங்கை அரசிடம் நற்சான்றிதழ் வாங்குவதன் மூலமோ அல்லது இந்தியாவின் வாய்ச்சொல்லுக்கு ஏற்ப செயற்படுவதன் மூலமோ எமது பிரச்சினைக்கான தீர்வைப் பெற இயலாது. உலக மக்களின் ஆதரவைப் பெற்று எமக்கான தீர்வைப் பெறுவதற்கு எமது இனம் எதிர்கொண்ட இனப்படுகொலையையும் போர்க்குற்றங்களும்தான் ஆயுதம்.

அதற்கு நீதி வேண்டும். அதற்கான நீதி என்பது இனியும் அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறாத எnதிர்காலத்தைப் பெறுவதற்கான தமிழர் தேசத்தில் தன்னாட்சியேயாகும்.

மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறான வகையில் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்கின்றது. ஏனெனில் மக்கள்
மகிந்தவை இனப்படுகொலையாளியாகக் கருதுகிறார்கள். கூட்டமைப்பு ஜனாதிபதியாகக் கருதுகிறது அவர்கள் தோற்கடித்த நினைத்த தரப்பிடம் இப்பொழுத பதவி ஏற்பது மக்களின் உணர்வை கடுமையாகப் பாதிக்கும் செயல்.

இந்த செய்தியைக் கேட்டும் நிகழ்வுகளைப் பார்த்தும் கொந்தளித்த பலரைக் கண்டேன். மக்களிடம் வாக்கைப் பெறுவதற்கு புலிகள் சார்ந்த உணர்ச்சியும் கொழும்பில் இந்த மாதிரியான ராஜபக்ச சார்ந்த ராஜதந்திரமும் என்கின்ற போக்கு நேர்மையற்ற அரசியலாகவே தெரிகிறது.

ஈழம் ஈ நியூஸ்.
தீபச்செல்வன், எழுத்தாளர், ஊடகவியலாளர்,
முன்னாள் செயலாளர் – யாழ் பல்லைக்கழக மாணவர் ஒன்றியம்.
கிளிநொச்சி.