முன்னாள் இந்தியப் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் இந்த வாரம் காலமாகிவிட்டார். அவரின் மறைவு தொடர்பில் மீண்டும் ஒரு விவாதம் தமிழ் மக்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்தியாவின் இனஅடக்குமுறையின் தத்துவம் புரியாததனால் ஏற்பட்ட ஒரு வெற்றிடம் தான் இந்த விவாதத்திற்கான கால விரயம் என்பது.

 

இந்தியவிலும் சரி தமிழ் நாட்டிலும் சரி தமிழினத்தின் விடுதலையை விரும்பும் மக்களும், சமூக ஆவலர்களும் உண்டு, விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல்வாதிகளும் இருக்காலம் ஆனால் அவர்களை இந்த பட்டியலில் தற்போது இணைக்கமுடியாது ஏனெனில் எதிர்க்கட்சி வரிசையிலோ அல்லது பதவியற்ற நிலையிலேயோ அவர்களுக்கு வரும் தமிழ் இனமான உணர்வுகள் பதவியில் இருக்கும் போது பறந்துவிடுகின்றனது.

 

உதாரணத்திற்கு அண்மையில் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியை இங்கு குறிப்பிடலாம், அவரது கட்சி ஆட்சியில் இல்லாதபோது அவரின் செயற்பாடுகளில் தமிழ் இனமான உணர்வுகள் அதிகம் காணப்படுவதுண்டு.

 

வாஜ்பாயின் அரசியல் கட்சியில் இருந்தவர்களில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ச் பெர்ணாண்டார்ஸ் அவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலையை ஆதரித்திருந்தார். தமிழ் இனத்திற்கு எதிரான இந்திய அரசின் ஒடுக்குமுறைகளை வெளிப்படையாக எதிர்த்தவர்களுள் அவரும் ஒருவர்.

 

இயல்பாகவே தனது நாட்டின் மீதும், படைத்துறை மீதும் அக்கறைகொண்ட இந்த மனிதர் ஏனைய இனங்களின் விடுதலையையும் நேசிக்கும் பண்பைக்கொண்டவர். விடுதலைப்புலிகளை மட்டும் அவர் ஆதரிக்கவில்லை. பர்மாவின் கொடுங்கோல் ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக போராடிய ஆங் சன் சூகி அவர்களின் மிகப்பெரிய படம் ஒன்றின் மூலம் தனது அலுவலக மாளிகையின் சுவரை அலங்கரித்த அவர் 1998 ஆம் ஆண்டு இந்தியா மேற்கொண்ட அதிர்ச்சிகரமான அணுக்குண்டு சோதனைக்கும் காரணமானவர்.

 

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கார்கில் போரில் முக்கிய பங்குவகித்த பெர்ணான்டர்ஸ் படையினருடன் நெருக்கிய உறவைக் கொண்டிருந்ததுடன் அவர்களின் மதிப்புக்குரியவராகவும் விளங்கினார், விடுதலைப்புலிகளுடன் நெருக்கமானவர்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என தமிழினத்தின் விரோதியான சுப்பிரமணியன்சுவாமி போன்றோர் தொடர்ச்சியாக கூச்சலிட்டபோதும், அந்த வாதத்தை தனது செயலால் உடைத்த மனிதர் அவர். அதாவது விடுதலைப்புலிகளை ஆதரித்தவர் தான் கார்கில் போரில் வென்றார், அவர் தான் அணுக்குண்டை வெடிக்க வைத்து உலகத்திற்கு அதிர்ச்சியை உண்டாக்கினார். எமது முதன்மையான எதிரி சீனா என வெளிப்படையாக கூறினார்.

 

ஆனால் சுப்பிரமணியம்சுவாமி போன்ற அரசியல்வாதிகளால் தான் உண்மையாகவே ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை இந்தியா இன்றுவரை விளங்கிக்கொள்ளவில்லை. எனினும் இந்திய அரசில் அங்கம் வகித்த அவரைக் கூட இந்திய கொள்கைவகுப்பு இனவிரோத கும்பல் கட்டிப்போட்டுவிட்டது.

 

தமிழ் இனத்தின் மீதான சிங்கள இனத்தின் ஆக்கிரமிப்பு சின்னமாக விளங்கிய ஆனையிறவுத்தளம் 2000 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வீழ்ச்சிகண்டதுடன், யாழ்குடாநாட்டையும் மீண்டும் கைப்பற்றும் நகர்வுகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருந்தனர்.

 

இந்த நிலையில் சிறீலங்கா அரசுக்கு நேரிடையான உதவிகளை வழங்க வாஜ்பாய் அரசு தயங்கி நின்றது, அதற்கான காரணம் பெர்ணான்டார்ஸ் தான், எனினும் சிங்கள அரசு தனது வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் மூலம் மேற்கொண்ட மிகப்பெரும் அழுத்தத்தினாலும், தமிழின விரோத இந்திய கொள்கைவகுப்பாளர்களினாலும் இந்திய அரசின் நிலையில் மாறம் ஏற்பட்டது.

 

யாழ்குடாவில் சிக்கியிருந்த 40,000 இற்கு மேற்பட்ட சிங்களப்படையினரை மீட்பதற்கு தனது கப்பல்களை அனுப்ப இந்திய அரசு முன்வந்தது. அதனை வெளிப்படையாகவும் அறிவித்தது.

 

ஆனால் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் சிங்களப் படையினரின் தாக்குதல்களுக்கு மத்தியில் சிக்கியிருந்த 3 இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களைக் காப்பாற்ற இந்திய அரசு தனது கப்பல்களை அனுப்ப முன்வரவில்லை என்பதை நாம் இங்கு குறித்துக் கொள்ளவேண்டும்.

 

அது மட்டுமல்லாது, இந்தியாவின் நேரிடையான ஆயுத உதவிகள் தமிழ் மக்கள் மத்தியில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என தெரிவித்த இந்திய அரசு பாகிஸ்த்தானிடம் பல்குழல் எறிகணை செலுத்திகளை கொள்வனவு செய்யுமாறு சிறீலங்காவுக்கு பரிந்துரையும் செய்திருந்தது.

 

இதிலிருந்து நாம் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும் அதாவது தமிழ் இனத்திற்கு எதிரான போரில் இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் நண்பர்கள், இதுவும் நாம் மனதில்கொள்ளவேண்டிய கருத்தாகும்.

 

பாகிஸ்த்தானிடம் இருந்து அதிகளவான ஆயுதங்களை சிறீலங்கா அரசு அவசரமாக கொள்வனவு செய்தது, அதன் பின்னர் களநிலமை மாறிப்போனது.

 

தமிழீழம் மலருவதை இந்திய வலிமையாக எதிர்த்ததன் நோக்கம் என்ன?

 

அதற்கு காரணமும் தமிழகமே, அதாவது தமிழீழம் மலர்ந்தால் தமிழக மக்களுக்கும் அவர்களின் உரிமைகளை முழுமையாக வழங்கவேண்டிய நிலை ஏற்படும், சுயாதின காவல்துறை அதிகாரம், சுயாதீன நீதித்துறை அதிகாரம் என்ற கோரிக்கைகள் தமிழகத்தில் வலுப்பெறும் என்ற காரணத்தினால் தான் பிறக்காத தமிழீத்தின் மீது இந்தியா போர்தொடுக்கின்றது.

 

அதாவது தமிழக மக்களின் உரிமைகளுக்கும் சேர்த்தே ஈழத்தமிழினம் துன்பத்தையும் பேரவலங்களையும் எதிர்கொண்டு நிற்கின்றது.

 

இந்திய அரசியலை பொறுத்தவரையில் தமிழ் இனத்திற்கு எதிரான அதன் கொள்கைகள் எப்போதும் மாற்றமடைந்ததில்லை. ஆனால் கடும்போக்காளர் மற்றும் மென்போக்களர் என வேறுபடுவதுண்டு. எனவே வாஜ்பாய் அரசும் தமிழ் இனத்தின் விடுதலையை மழுங்கடிக்க சிங்கள தேசத்துடன் கைகோர்த்த அரசாகவே கடந்து போயுள்ளது.

 

நாம் இங்கு யாரையும் நிந்திக்கவில்லை அதேசமயம் அவர்கள் போற்றுவதற்கும் தகுதியானவர்களும் கிடையாது. அதாவது மனிதாபிமானம், மனித நேயம் தொடர்பில் துணிச்சலான முடிவெடுக்கம் அதிகாரமற்றவர்கள் எனவே அவர்களிடம் நாம் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பதுடன், அவர்களை நல்ல தலைவர்களாக வரலாற்றில் எழுதவும் முடியாது.

 

தமது இனம் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் தமிழகத்தை விட ஏனைய மாநிலங்களின் இனப்பற்று மிக மிக அதிகம், அங்கு வாழும் மக்களும், கலைஞர்களும், அரசியல்வாதிகளும், ஏன் வியாபாரிகளும் சரி தமது இனத்தின் நலனையே முன்நிறுத்துவதுண்டு. இதற்கு சிறு உதாரணமாக தமிழக சினிமா பாடகி எஸ் ஜானகி அவர்கள் ஒரு நேர்காணலின் போது கூறியவற்றை இங்கு தருகின்றேன்.

 
“எனக்கு தமிழில் அதிக விருதுகள் கிடைத்ததுண்டு ஆனால் நான் பல மொழிகளில் பாடியிருக்கிறேன், அவர்கள் எனக்கு விருதுகள் கிடைப்பதை விரும்பவில்லை எனவே அதிக விருதுகளை அங்கு பெற முடியவில்லை, ஏனெனில் நான் தமிழ் பாடகி, ஒரு தடவை எனது திறமைகளை புறம்தள்ள முடியாது, எனக்கு விருது வழங்கியே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம் ஒன்று கன்னடத்தில் ஏற்பட்டது, ஆனால் அவர்கள் எனக்கு விருது வழங்கவில்லை, விருது வழங்கும் நிகழ்வையே இரத்துச்செய்து விட்டனர்”

 

இது தான் அவர் கூறிய கருத்துக்கள் அதாவது ஒரு தமிழ் பாடகிக்கு விருது வழங்க வேண்டிய நிலை வந்துவிட்டதே அதனை தடுக்க வேண்டும் என்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் நிகழும் விருதுவழங்கும் நிகழ்வை நிறுத்தி தமது இனத்தின் தனித்தன்மையை காப்பாற்றியிருக்கின்றனர் அவர்கள்.

 

ஆனால் நமது தமிழகம் என்ன செய்கின்றனது, வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று யாரோ ஒரு வேற்று மொழிக்காரன் தனது நன்மைக்காக கூறியதை தூக்கிவைத்து சொந்த இனத்தையே அழித்துக்கொண்டிருக்கின்றோம்.

 

உங்கள் பிரதேசத்தில் அல்லது உங்கள் மாநிலத்தில் உங்கள் உறவுகள் உங்கள் இனத்தவர் முன்னேறுவதற்கு வழி ஏற்படுத்துங்கள்.  அது கலைத்துறையோ, சினிமாவோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியோ, வியாபாரமோ, கல்வித்துறையோ, அல்லது அபிவிருத்தியோ எதுவாக இருப்பினும் உங்கள் இனத்தின் முன்னேற்றத்தை தெரிந்தொடுத்து முன்னுக்கு கொண்டு வாருங்கள் அதன் மூலம் வேற்று இனத்தவரின் மறைமுக ஆக்கிரமிப்பை கட்டுக்குள் கொண்டுவரமுடியும், அதன் அடுத்த நகர்வு தான் அரசியல் உறுதித்தன்மையை ஏற்படுத்தும்.

 

தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலும் வேற்று இனத்தவரை உள்புகுத்தும் இந்திய கொள்கைவகுப்பாளர்களின் நோக்கமும் அதுவே அதாவது வேற்று இனத்தவரின் உள்நுளைவு தமிழக அரசியலின் உறுதித்தன்மையை ஆட்டம்காணச்செய்யும்.

 

சிறீலங்காவிலும் அதுவே நிகழ்கின்றது, தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கில் ஒவ்வொரு துறையிலும் சிங்கள இனத்தவர்கள் மெல்ல மெல்ல உள்நுளைக்கப்படுகின்றனர். புதிய பௌத்த விகாரைகளும் அங்கு உருவாகின்றன. ஒவ்வொரு இந்து கோவில்களுக்கு அருகிலும் புத்தர் வாடகைக்கு குடிவந்துகொண்டிருக்கின்றார்.

 

நாம் என்ன செய்யலாம்?

 

முதலில் எதிரியின் திட்டங்களை துல்லியமான இனம் காண்பதன் மூலம் தான் நாம் எமது வெற்றியை நோக்கி நகரமுடியும்.

 

ஈழம் ஈ நியூஸ் இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்