விசாரணையை விரைந்து ஆரம்பிப்பதற்கான பலமான ஆதரவு இப்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது

0
625

விசாரணையை விரைந்து ஆரம்பிப்பதற்கான பலமான ஆதரவு இப்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டிருப்பதை உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நேற்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமையை அடுத்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மூன்று தீர்மானங்களை முன்னெடுத்து வழிப்படுத்திய அமெரிக்காவுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் நன்றி பாராட்டுகின்றார்கள்.

இவ்விடயத்தில் விசேட கவனம் எடுத்துச் செயற்பட்ட பிரிட்டன் அரசுக்கும் பிரதமர் டேவிட் கமரூனுக்கும் நாம் நன்றியாக உள்ளோம். இதற்கு ஆதரவான பிரசாரச் செயற்பாடுகளை முன்னெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், உலகெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்கள், தமிழக மக்கள், சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொறுப்புக் கூறல், மீள் நல்லிணக்கம், பேச்சு மூலமான அரசியல் தீர்வு, அமைதி ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து – சில சமயங்களில் மிகுந்த துணிச்சலுடன் – குரல் எழுப்பிவரும் தென்னிலங்கை சிவில் சமூகம் உட்பட தமிழர்கள், தமிழ்ப் பேசும் முஸ்லிம்கள், சிங்களவர்கள், கிறிஸ்தவ மதகுருமார் மற்றும் இலங்கைக்குள் இருக்கும் ஏனையோர் என அனைவருக்கும் அத்தரப்புகளின் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை நாம் அங்கீகரிக்கிறோம். கூட்டமைப்பின் எம்.பிக்களோடு, இந்த விடயத்துக்காக பிரசாரம் செய்வதற்கு எமது உலகத் தமிழர் பேரவையும் உலகின் பல நாடுகளுக்கும் பல விஜயங்களை மேற்கொண்டது.

கடந்த வாரம் கூட தென்னாபிரிக்காவுக்கும் பொட்ஸுவானாவுக்கும் விஜயம் மேற்கொள்ளப்பட்டது. எதிர்காலத்தில் தீர்வுக்கான ஏதேனும் அரசியல் பேச்சுகளுக்கு அனுசரணைப் பணி வகிக்கவேண்டியிருக்கலாம் என்ற கருத்தில் தென்னாபிரிக்கா இந்த வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் விட்டபோதிலும், முந்திய இரண்டு வருடங்களிலும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்த பொட்ஸுவானா இம்முறை பிரேரணையை ஆதரித்து வாக்களித்தமையை நன்றியுடனும் மகிழ்வுடனும் நினைவு கூருகின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையை நிராகரிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு அங்கு வாக்களிக்கத் தகுதியான நாடுகளில் 25 வீதமானவை மட்டுமே இணக்கம் தெரிவித்திருக்கின்றன.

இலங்கைக்கு ஆதரவான சில நாடுகள் இந்தப் பிரேரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்கு பரந்தளவிலான விசாரணையை நடத்துவதற்கான ஆணையை வழங்கும் பிரேரணை வாசகங்களை நீக்கவேண்டும் என்றும் கோரி முன்னெடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போனமை குறித்து நாம் திருப்தி அடைகிறோம். இந்த விசாரணையை உடனடியாக ஆரம்பிப்பதற்கான பலமான முழு ஆதரவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இப்போது வழங்கப்பட்டிருக்கின்றது என்பது மிகவும் முக்கியமான விடயம். சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பான சாட்சியங்கள் இலங்கை அரசினால் அழிக்கப்படுகின்றமை மேலும் இடம்பெறாமல் இருக்கின்றமையை உறுதிப்படுத்தும் வகையில் மேற்படி விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும்.

இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்து நிலைப்பாட்டை நாமும் பகிர்ந்து கொள்கின்றோம். உத்தேச விசாரணையில் சாட்சியமளிக்க முன்வரும் சாட்சிகளும் அவர்களது உறவினர்களும் எவ்வாறு பாதுகாக்கப்படுவார்கள் என்பது குறித்து அதிகாரபூர்வமான பகிரங்க அறிக்கை ஒன்றை விடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம். சர்வதேச விசாரணை முழுமையானதாகவும் விரிவானதாகவும் அமைவதை உறுதிப்படுத்துவதற்காக, தங்களின் சாட்சியங்களைத் தவறாது அளிப்பது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழனினதும் கடமையாகும்.

அதேபோல சிங்களவர்கள் உட்பட தமிழர்கள் அல்லாத ஏனையோரும், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிறுவனங்களும், அரச மற்றும் ஐ.நா. அலுவலகங்களும் தங்களிடம் இருக்கக்கூடிய நம்பகமான சாட்சியங்களைச் சமர்ப்பிக்க முன்வரவேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் முயற்சிகளுக்கு உலகத் தமிழர் பேரவை அனைத்து சாத்தியமான வகைகளிலும் உதவும். -என்று உள்ளது.