வேலிக்கொரு குருவிச்சை

0
652

தினமும் அப்பாதையைக் கடப்பவனாகிலும், அவ்விடத்தில் எந்நாளும் தரித்ததில்லை. ஓரிரு வாரங்களுக்கு முன்னர் திறப்பு விழாக்காணும் வரை, வீதியின் இரு மருங்கிலும் வர்ணக் கொடிகள் நடப்பட்டு பரபரப்பாக் கப்பட்டிருந்தஉப்பாற்று வெளியின் எல்லையை தாண்டும் போதெல்லாம், இனம் புரியாத அறச்சீற்றம் ஒன்று பரந்தனை தாண்டும் வரை பரவும். ஆனையிறவில் அமைக்கப்பட்ட இரண்டாவது அத்துமீறல் சின்னம் அது.

tank
ஆனையிறவின் புகையிரத நிலையத்தினையும், ஏ-9 வீதியையும் இணைக்கும் பரப்பில், இராணுவ வீரனொருவனுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவிடம் மரணித்த போது சுமார் 35 வயதுடையவனாகவும், சற்றே மிதப்பான முன் பற்களும், வாடல் தோற்றமும், துணியிலான இராணுவத் தொப்பியும் அணிந்த குறித்த நினைவுச் சின்னத்துக்குரியவனின் பெயரை வாசித்து தெரிந்து கொள்வதற்காகவேனும் அவ்விடத் தைக் கடக்குகையில் நிதானிக்க விடுவதில்லை, மேலே சொன்ன “”அறச்சீற்றம்” எனப் படும் வயிற்றெரிச்சல்.

தேவை நாடி “”கூகுள்” ஆண்டவரை (றூலிலிஆயிe) உருட்டிய போதுதான் தெரிந்து கொள்ள முடிந்தது, முழுவுருவச் சிலையாக விறைத்த கல்லாகி இரு புறமும் இரண்டு இராணுவப் பொலிஸார் காவற் கடமையிலிருக்க, பளிங்குக் கற்களால் பீடமைக்கப்பட்ட குன்றில் நின்று கொண்டிருப்பவன் லான்ஸ் கோப்ரல்-காமினி குலரத்ன. சிங்க றெஜிமென்டின் 10 ஆவது படைப் பிரிவைச் சேர்ந்தவனாக, இறப்பின் பின் “”பரமி வீர விபூ­ணய” பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டவனின் தற்போதைய இருப்பு, இன அடக்கு முறையின் இன்னொரு அவதாரத்துக்காக சுலபமாக திருப்பி விடப்பட்டிருக்கின்றது.

ஏற்கெனவே ஆனையிறவில் அமைக்கப்பட்டிருந்த “”ஒரே தேசம்”-தொனிப் பொருளிலான போர் வெற்றி நினைவுச் சின்னத்திலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவுக்குள்ளாக, இன்னுமொரு இராணுவப் பராமரிப்புடைய நினைவிடத்தினை நிறுவியுள்ளதன் உள்நோக்கம் சந்தேகத்துக்கிடமின்றி சந்தேகமானதே!

1991 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 10 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட போரை, ஆனையிறவை நோக்கிய முதலாவது சண்டை எனக் குறிப்பிடுகின்றன இணையத் தளங்கள். ஆனால் சுட்டளவில் இதற்கு முன்னரும் ஆனையிறவினை கைப்பற்றுவதற்கான வெவ்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.

தனி முனையயான்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மேற் திகதியிடப்பட்ட சண்டையின் முடிவில் ஆனையிறவு இராணுவத்தளம், இலங்கைப் படையினரால்தக்க வைக்கப்பட்டதற்கான முழுமையான காரணமும், புகழும் காமினி குலரத்னவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அவனால் தடுத்து நிறுத்தப்பட்ட புலிகளின் கவச வாகனமும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

24 கோடைகளையும், மாரிகளையும் மாறி மாறிக் கடந்த அந்த இரும்பு வாகனம், இற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பாக வீதியோரத்தில் உக்கிய தகரமாகிக் கொண்டிருந்த போது பார்த்தவர்களில் எவரேனும், இன்றைய தோற்றத்தை கண்ட மாத்திரத்திலேயே உணர்ந்து கொள்ள முடியும். குறித்த கவச வாகனம் புனரமைப்புச் செய்யப்பட்டு, புது வர்ணப் பூச்சிடப்பட்டிருக்கும் உண்மையை? இந்த மண்ணின் மக்களால் தேவைக்கு அதிகமாகவே புரிந்துணரப்பட்டு, காலங்களுக்கு அதிகமாகவே நேசிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் இராணுவ வர்ணங்கள் எவை யயன்று அச்சொட்டாகத் தெரிந்த கண்கள், ஒற்றைப் பார்வையிலேயே வித்தியாசம் கண்டு பிடிக்கும் தொலைவுக்குள்ளாகவே சிங்களத் தூரிகைகளால் மீள் வர்ணம் பூச முடிந்துள்ளது.

கைவிடப்பட்ட கவச வாகனத்தினை ஒன்பது வருடங்களுக்கு மேலாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும், அதனை அகற்றவோ, முற்றாக தகர்க்கவோ விடுதலைப் புலிகள் எண்ணியிருக்காத நிலையில், அந்த இரும்புக் குலியலின் மீதான அவர்களின் நாட்டம் என்னவென்று எண்ணித் துணியும் நிலையிலும் முடிவெடுக்க இயலவில்லை இராணுவத்தரப்புகளால். இன்றைக்கு பெரும் பொருள் செலவில் நினை விடம் அமைத்து போற்றப்படும் அளவுக்கு, புலிகளின் இராணுவ நடவடிக்கையயான்றை முற்றாக தடுத்து நிறுத்தும் வலுவுடன் கவச வாகனத்தை தனியயாருவனாக காமினி குலரத்ன நிறுத்திய நிகழ்வு உண்மையாயின், தமது குறிப்பிடத்தக்க தோல்வியின் அடையாளமான அவ் வாகனத்தை ஏன் விடுதலைப் புலிகள் அவ்விடத்திலேயே வைத்து 9 வருடங்கள் அழகு பார்த்திருக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.

ஆயுதங்களால் நெருங்க முடியாத தடுதிறனுடன், வலுவான இரும்புத் தகடுகளால் சூழமைக்கப்பட்டு புலிகளின் நகர்வின் முன்னணியில், பாதுகாப்புடன்- பின்தொடருகின்ற போராளிகளுக்கான காப்பினை வழங்கிக் கொண்டு நகர்ந்த கவசவாகனத்தின் ஏணிகளில் ஏறிதன் கையிலிருந்த இரண்டு கையயறி குண்டுகளை (கிரனைட்) வாகனத்தில் உள்ளே வீசி வெடிக்கச் செய்த “”காமினி குலரத்ன” வின் ஈகம் தான், 91 இல் ஆனையிறவை காப்பாற்றியது என்று இரண்டாவது மகாவம்சத்தின் திரிபினை எழுதிப் புகழுகின்றன சிங்கள ஊடகங்கள். “குலரத்ன’வை போற்றும் பாடல்கள் கூட, காணொளியாக்கம் செய்யப்பட்டு இணையத்தில் கிடைக்கின்றன.

ஆனால், இரண்டு கையயறி குண்டுகளின் வெடி பரப்பு எவ்வளவு? தாக்கு திறன் எவ்வளவு? சேதம் தரும் எல்லையாதளவு? என்று ஒரு நிமிடம் நின்று நிதானிக்க இயல்பவர்களின் இரண்டாவது பார்வையிலேயே “”காமினி குலரத்ன” வின் கம்பீரம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.

இராணுவ முன்னரங்கை விட்டு வெளியேறித் தாக்குதல் நடத்த முயன்ற போது, எதிரியின் அணியினை மிகவும் அண்மித்து மரணித்த இராணுவ வீரனொருவனுக்கு கிடைத்த மிகை மரியாதையின் உட்கிடையில் ஆக்கிரமிப்பு நோக்கத்தின் பங்கு அளப்பரியது. இன்றேல், நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த வீரனொரவனுக்கு, அதே அணியி னரால் செய்யப்படுகின்ற அங்கீகாரத்தினை கேள்வி கேட்கவோ, பரிகசிக்கவோ தேவை யில்லாது கடந்திருக்கும் இந்த நினைவுச் சின்னமும்! முன்னரங்க காவல் நிலைகளில், காப்பரணை விட்டு ஏனைய படையினர் தப்பியோடிய நிலையில் தனித்து நின்று போராளிகளால் சூழப்பட்ட நிலையில் மரணித்துக் கிடந்த “”காமினி குலரத்ன” கவச வாகனத்தின் ஏணியில் ஏறினான். இரண்டு குண்டுகளை வீசினான்.

அத்துடன் புலிகள் நிலை குலைந்தனர். ஆனையிறவு காப்பாற்றப்பட்டது. அதற்காகத்தான் நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது. அருகிலேயே ஆனையிறவு புகையிரத நிலையமும் அமைக்கப்பட்டது. புகையிரத நிலையத்துக்கு சிங்களப் பெயர் சூட்டுவோம். யாழ்ப்பாணம் வரும் பெரும்பான்மையினப் பயணிகளை இளைப்பாற வைப்போம். இராணுவ நலன் புரிக்கான உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களும் தரித்துச் செல்ல வேண் டும். இன்றளவு வரைக்கும் அந்த இராணுவ வீரனின் தியாகமாக சொல்லப்படுகின்ற புனைவின் துணை கொண்டு ஆக்கி இறக்கப்பட்ட பாற்சோறும் கட்டுச் சம்பலும் இவ் வளவே! அண்மை எதிர்காலத்தில் இராணுவக் குடியேற்றமும், நீள் எதிர்காலத்தில் சிங்களக் குடியேற்றமும் மட்டுமே இலக்குகள். ஆகவே தமிழா-சும்மா இரு சொல்லற?

“”பரமி வீர விபூ­ணய-லான்ஸ் கோப்ரல் காமினி குலரத்ன”வை பெற்றவரும், சுற்றமும் உறவுகளும் பெற்ற பெருமையில் வெறும் ஒற்றைச் சதவீதமேனும் வெளிப்படுத்த இயலாமல், குறைந்தது நினைவு கூரக்கூட அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்ட முப்பத்தியயட்டாயிரத்துக்கு மேற்பட்ட மண்ணுக்குரிய பிள்ளைகளின் தியாகங்களின் வேரில், வேற்றின ஒட்டு மரம் காய்த்துக் கனிந்து குலுங்குவதை அழகென்று ஆராதிக் கவா முடியும்?

அடுத்த ஒன்பது வருடங்களின் பின் 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 இல் தொடங்கிய 35 நாள்களில் ஏப்ரல் 22 இல் ஆனையிறவை வசப்படுத்திய விடுதலைப் புலித் தளகர்த்தர்கள் கேணல் பால்ராஜ், தீபன் உள்ளிட்ட எவருமே நினைக்கப்பட இயலாத வெற்றிடத்தில் உனக்கு மட்டுமென்ன பூசையும், புஸ்பலங்காரமும் என்று சினந்து கொள்வதில் நியாயமில்லாமல் இல்லை!

மண் தொட்டுக் கிடப்பவன், எரிகளத்தில் சினந்து எதிர்நின்ற பகைவனேயாயினும், உயிரிழந்த பின்னால் அவனுடலுக்கும் சீர் செய்து மாண்பளித்த களப்பண்பாட்டினை கடந்த காலமாக்கிச் சென்ற மறவர்களை தெய்வமாக்கிப் பூசிப்பவர்களின் எண்ணங்களும் அவ்விதமானவையே. இருப்பினும் தமிழர் தாயகத்தின் பூர்வீகத்துக்குரிய, வரலாற்றுத் தொடர்புடைய கேந்திரங்களை திட்டமிட்டு கலப்பு மாற்றம் செய்யும் நோக்கில் தருவிக் கப்படும் கதைகள், இத்தீவுக்கு முற்றும் புதியனவல்ல. “”வெலி ஓயா” வான மணலாறு, “தொப்பிகல” வான குடுமிமலை, “”கந்தவுட”வான கந்தரோடை, “”கதிரகம”வான கதிர்காமம் யாவையும் குனிந்து பணிந்த பிறகும், ஆனையிறவில் அடுத்த குட்டும் தலையைத் தாக்கும் வரை நிமிராமல் முரண்டு பிடிப்பதும், புரண்டு படுப்பதும் தற்போதைக்கு தமிழரின் கழுத்தை அழகு செய்யும் அணிகலன்கள்!

யாழ்-கண்டி நெடுஞ்சாலையில், வவுனியாவுக்கு இப்பால் வீதியோர உணவகங்களைக் கையாள்வதில் இராணுவ நலன்புரி சங்கங்களே முன்னுரிமை எடுத்தாள்கின்றன. தேவைக்கதிகமாக வடமாகாணத்தில் நிலை கொள்ளச் செய்யப்பட்டுள்ள சீருடையினர் பொழுதுபோக்காக மட்டுமன்றி, வருமான வழியாகவும் கைகளில் தேநீர் கோப்பை ஏந்தவும், அப்பக் கரண்டி பிடிக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ள நிலையில், யாழ்ப்பா ணத்தை குறிவைத்து குவியும் பெரும்பான்மையின சுற்றுலாப் பயணிகளின் இளைப் பாறும் இடங்களுக்கான முதற் தெரிவும் இராணுவ நலன்புரி உணவகங்களே!

திருமுறிகண்டிப் பிள்ளையார் கோயிற் சூழலில் வட பகுதியிலிருந்து தென் பகுதிக்குச் செல்லும் அல்லது மீளும் தமிழ்ப் பயணிகளை கொண்ட வாகனங்களே, தரித்தும் உணவோ- பானமோ கொண்டபின் நகர்கின்றன.

எதேச்சையாகத் தரிக்கும் மாற்றின வாகனங்கள் ஒன்று இரண்டு சூடம் அல்லது தேங்காய்களுடன் வடபகுதிக்கான மட்டுப்படுத்தப்பட்ட அன்னியச் செலாவணியை ஈட்டித் தந்துவிட்டு, புகைகக்கியபடி புறப்பட்டு விடுகின்றன.

மற்றப்படி எந்தவொரு தனியார் தமிழ் மனம் கமழும் உணவகத்திலும் கை நனைக்காத கொள்கையே அவர்களுடையது?

புறப்படுகையிலேயே சமையல் ஏற்பாடுகளுடன் கிளம்பு கின்ற பழக்கமும், தண்ணீர் மூலமும், ஏதோவொரு நிழல் மரமும் சந்திக்கும் புள்ளியில் அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு சுற்றி அமர்ந்து விடுகின்ற இயல்பும் சிங்களப் பயணிகள் மூலமான சுற்றுலாத் துறையின் உணவுசார் வருமானங்களை வடபுலத்துக்கு அவ்வள வாக ஈட்டித் தருவதில்லை.

தவறிக் கிடைக்கும் சிறு வீரமான பயணிகளின் உணவு, தங்குமிடச் செலவீனங்க ளையும் இராணுவ நலன்புரி உணவகங்களும், விடுதிகளும் தட்டிச் செல்வதன் மூலம், வீதியோர விற்பனை அகங்கள் எவற்றிலும் முதலிட இயலாத தொழில் வறுமைக்குள் வடபகுதி மக்கள் தள்ளப்பட்டிருப்பதற்கு-பளபளப்புச் செழுமையுடன் பேணப்படும் இராணுவ நினைவுச் சின்னங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

கடந்துபோன போரில், அடக்கப்பட்ட இனத்துக்கான நினைவுச் சின்னங்கள் புதைகுழி களினுள் வன்கூடுகளாகவும், சிதைக்கப்பட்ட சிமெந்துக் சுவர்களாகவும் ஒடுக்கப்பட்டும், பாதிப்புக் குறைந்த ஆளுமினத்தின் வலிந்த பழிவாங்கல்களுக்கான சின்னங்கள் மெருகூட்டப்பட்டு பேணப்படுவதும் கூட, அடுத்த தசாப்தங்களுக்கான தமிழினத்தின் போராடும் தேவையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஏதுக்களில் ஒன்றாகவே நினைந்து நினைந்து கால்களின் கீழ் கடந்து போகின்றன எம் பாதைகள்.

நன்றி : உதயன் பத்திரிகை