ஹலிடேயின் கனேடியப் பயணம் – கலக்கத்தில் சிறீலங்கா அரசு

0
640

halliday-unஅடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நாவின் 25 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் சிறீலங்கா அரசு மீது அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணையைகோரும் தீர்மானம் ஒன்றை அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து கொண்டுவரத்திட்டமிட்டுள்ளன.

கனடாவின் பிரதான அரசியல் கட்சிகளின் ஆதரவுகளை இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக தேடும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உதவிச் செயலாளர் நாயகம் டெனிஸ் ஜே ஹலிடே அவர்கள் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறீலங்காவின் கொழும்பைத் தளமாகக் கொண்ட நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எதிர்வரும் இரு வாரங்கள் கனடாவில் தங்கியிருக்கும் ஹலிடே கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கனேடிய தமிழ் தேசிய அவை மேற்கொண்டுள்ளது.

கனேடிய அரசின் உயர் அதிகாரிகள், கனேடிய தமிழ் தேசிய அவையின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் மக்களை சந்திக்கும் ஹலிடேயின் திட்டம் குறித்து சிறீலங்கா அரசு கடும் கவலையில் ஆழ்ந்துள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

34 வருடங்களாக ஐ.நாவில் பணியாற்றிய ஹலிடே ஈராக் குறித்த ஐநாவின் கொள்கை தொடர்பான முரன்பாடுகளால் 1998 ஆம் ஆண்டு தனது பதவியை துறந்திருந்தார். கனேடிய அரசியல் கட்சிகளின் ஆதரவுகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின்; நடவடிக்கைக்கு ஆதரவாக திரட்டுவதற்கு ஐநாவின் முன்னாள் உதவிச் செயலாளர் முயன்று வருகின்றார்.

ஆனால் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து கொண்டுவரத்திட்டமிட்டுள்ளன தீர்மானத்திற்கு தாம் ஆதரவு அளிக்கவுள்ளதாக கனடாவில் ஆட்சியில் உள்ள கொன்சவேட்டிவ் கட்சி தெரிவித்துள்ளது. கனேடிய அரசின் இந்த திட்டத்திற்கு எல்லா அரசியல் கட்சிகளும் தமது ஆதரவுகளை வழங்கவேண்டும் என கனேடிய தமிழ் தேசிய அவை தெரிவித்துள்ளது.

கனடாவைப் போலவே பிரித்தானியாவிலும் அதன் தொழிற்கட்சியின் கொள்கை விளக்க ஆலோசகர் உலகத் தமிழ் பேரவையுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் இடையில் பல சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

ஹலிடேயின் பயணத்தை முன்னிட்டு பகிரங்கமான சந்திப்பு ஒன்றையும் ஞாயிற்றுக்கிழமை (16) கனேடிய தமிழ்த் தேசிய அவை ஏற்பாடு செய்துள்ளது. இதன் மூலம் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கான ஆதரவுகளை அது திரட்ட முன்வந்துள்ளது.

இந்தச் சந்திப்பில் கனேடிய அரசில் அங்கம்வகிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இந்த சந்திப்பில் ஈழத்தமிழரான கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் பங்குகொள்வாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் அவருக்கும் கனேடிய தமிழ் தேசிய அவைக்கும் இடையில் முரன்பாடுகள் உள்ளன.

இதனிடையே நோர்வேயானது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்காதபோதும் அமெரிக்காவும், பிரித்தானியாவும் இணைந்து கொண்டுவரவுள்ள தீர்மானத்திற்கு வலுவான ஆதரவுகளை வழங்கி வருகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்.