10 நாட்களுக்கு முன் பருவமடைந்த சிறுமியை கடத்தி பாவச்சாதனை படைத்துள்ளது: மனோ

0
544

mano_ganeshanகாணாமல் போன தனது அண்ணனை தேடி ஆர்ப்பாட்டம் செய்து வந்த விபூசிக்கா பாலேந்திரன் என்ற சிறுமியையும், அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரனையும் கைது செய்து இலங்கை அரசு பாவச்சாதனை படைத்துள்ளது. இவர்களது கைது மக்கள் கண்காணிப்பு குழுவுக்கும், இந்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் எந்த வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவிலை என்று மக்கள் கண்காணிப்பு குழுவின் ஏற்பாட்டாளாரான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு நிப்போன் ஹோட்டலில் மக்கள் கண்காணிப்பு குழுவினால் நேற்று நடத்தப்பட்ட விசேட ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி , சிறிதுங்க ஜயசூரிய, அசாத் சாலி,விக்கிரமபாகு கருணாரத்ன, ஜ.ம.முவின் உப செயலாளர் சண். குகவரதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மேலும் கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,

கடந்த வருடம் அரசின் அழைப்பை ஏற்று இலங்கை வந்த ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும், பொதுநலவாய மாநாட்டுக்கு வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரொனும், வடக்குக்கு சென்ற போது அங்கு நடைபெற்ற காணாமல் போனோரது குடும்ப அங்கத்தர்களின் ஆர்ப்பாட்டங்களில் சிறுமி விபூசிக்காவும், அவரது தாயாரும் பிரதான பங்கு வகித்திருந்தனர்.

இதை தொடர்ந்து தன்னை மர்ம நபர்கள் தொடர்வதாகவும், தானும், தன் மகளும் அச்சறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், ஜெயகுமாரி பாலேந்திரன் மக்கள் கண்காணிப்பு குழுவுக்கு தகவல் அனுப்பி இருந்தார். அதுபோல் அவர் தனது நிர்க்கதி நிலைமை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கும், கொழும்பில் உள்ள தூதரகங்களுக்கும் அறிவித்திருந்தார் என்பதும் எமக்கு தெரியும்.

தங்கள் இலங்கை விஜயங்களின் போது கதறியழுது, தங்கள் துன்பங்களை சாட்சியமாக எடுத்து சொன்ன சிறுமி விபூசிக்கா பாலேந்திரன் மற்றும் அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரன்ஆகியோர் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களுக்கும்,பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரொன் அவர்களுக்கும் இருக்கின்ற சாட்சிகளை பாதுகாக்கும் கடப்பாட்டை நாம் இங்கே கடுமையாக சுட்டி காட்ட விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

திட்டமிட்ட நடவடிக்கை

காணாமல் போன தம் உறவுகளை தேடி ஆர்ப்பாட்டம் செய்யும் குடும்ப அங்கத்தவர்களை கைது செய்து தடுத்து வைக்கும் நடவடிக்கையாகவே நாம் இதை கருதுகிறோம். அரசு சட்ட விரோத சந்தேக நபர்களை தேடி கைது செய்வதை நாம் தடுக்க முனையவில்லை.

ஆனால்,பயங்கரவாதிகளை தேடி அழிக்கின்றோம் என்ற போர்வையில், காணாமல் போன தம் உறவுகளை தேடி அலைபவர்களையே நீண்ட நாள் வேவு பார்த்து, அச்சுறுத்தி கைது செய்வதை நாம் ஏற்க முடியாது. அது மட்டுமல்லாமல், தனது அரசியல் இராணுவ கபட நோக்க நடவடிக்கைகள் அனைத்துக்கும், புலிகளை கைது செய்கிறோம் எனக்கூறி நியாயம் கற்பிப்பதையும் ஏற்க முடியாது.

பெண் அதிகாரிகள் இருக்கவில்லை

கைது செய்யப்பட்ட இருவரும் பெண்கள். அதிலும் ஒரு சிறுமி, 10 நாட்களுக்கு முன்னர் தான் பருவம் எய்தினவர். இந்நிலையில் இவர்கள் கைது செய்யப்படும் போது பெண் அதிகாரிகள் இருக்கவில்லை என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது. இது கொடூரமானது.

அரசு அச்சம்

சிறுமி விபூசிக்கா பாலேந்திரன் மற்றும் அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரன்ஆகியோர் ஐநா மனித உரிமை பேரவை மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு சாட்சியம் ஏதும் அளித்து விடுவார்களோ என்ற அச்சம் இந்த அரசுக்கு நீண்ட நாட்களாக இருந்துள்ளது. அதனாலேயே தன்னை மர்ம நபர்கள் தொடர்வதாகவும், தானும், தன் மகளும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும், தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரன்கூறியிருந்தார்.

அண்ணன் உயிருடன் இருப்பதாக கண்டுபிடிப்பு

விபூசிக்கா பாலேந்திரனின் கடைசி அண்ணன் இராணுவத்திடம் சரணடைந்தவர் என்றும்,அதன்பிறகு அவர் காணாமல் போயிருந்தார் என்றும், சமீபத்தில் கற்றுக்கொண்ட ஆணைக்குழு வெளியிட்ட புனர்வாழ்வு அளிக்கப்படுவோர் புகைப்படத்தில் அவர் உயிருடன் இருக்க காணப்படுகிறார் எனவும், அவரை தங்களுக்கு காட்டுங்கள் எனவுமே விபூசிக்கா பாலேந்திரன்,அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரனுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றார்.

சாட்சிகள் பாதுகாப்பு

நடைபெற்ற குற்றசெயல்கள் தொடர்பாக சாட்சியம் கூறி, சர்வதேச சமூகத்துக்கு தங்கள் துயர்களை எடுத்து சொல்லும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நியதி. இலங்கை வந்த ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம், பிள்ளையும், பொதுநலவாய மாநாட்டுக்கு வந்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரொனும் இதையே சொல்லி சென்றுள்ளார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கமரொனும் நவனீதம்பிள்ளையும் காக்கவேண்டும்

தங்கள் இலங்கை விஜயங்களின் போது கதறியழுது, தங்கள் துன்பங்களை சாட்சியமாக எடுத்து சொன்ன சிறுமி விபூசிக்கா பாலேந்திரன் மற்றும் அவரது தாயாரான ஜெயகுமாரி பாலேந்திரன் ஆகியோர் தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களுக்கும்,பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரொன் அவர்களுக்கும் இருக்கின்ற சாட்சிகளை பாதுகாக்கும் கடப்பாட்டை நாம் இங்கே கடுமையாக சுட்டி காட்ட விரும்புகிறோம்.