வட மாகாணசபைத் தேர்தல் குறித்த புலம்பெயர் மற்றும் தாயகத்து செயற்பாட்டாளர்களின் கருத்துப் பகிர்வு!

0
459

சிறீலங்கா அரசு அறிவித்துள்ள வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் முதலமைச்சர் வேட்பாளாராக முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரனை நிறுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறுபட்ட ஆளுமைகளிடம் இருந்து பெற்ற கருத்துக்கள் இவை.

மே 18 இற்கு பிறகு போராட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் ஆளுமைகளாக தமது தளங்களில் நின்று தீவிரமாக செயற்படும் இவர்களின் கருத்துக்களை தமிழ் மக்கள் மட்டுமல்ல கூட்டமைப்பும் செவிமடுக்க வேண்டும். அனைவரின் கருத்துக்களும் பிரிக்கப்பட்ட மகாண சபை தேர்தலின் ஆபத்தை சுட்டிக்காட்டுவதுடன் 13 வது திருத்த சட்டத்தையும் நிராகரிப்பதை நீங்கள் காணலாம்.

பிராந்திய – பூகோள நெருக்கடிகளை கவனமாக எதிர்கொண்டு போராட்டத்தின் அடுத்த கட்ட போக்கை கொண்டு செலுத்த வேண்டிய கூட்டமைப்பு இணக்க – அடிபணிவு அரசியலுக்குள் தன்னை புதைத்து கொண்டது துரதிஸ்டவசமானது.இந்த பதிவை வெளிக்கொணர்வதனூடாக ஈழம்ஈநியூஸ் தனது வரலாற்று கடமையை செய்திருக்கிறது.

கூட்டமைப்பின் முடிவு என்பது தன்னிச்சசையானது என்பதை சுட்டிக்காட்டுவதுடன் அதன் செயற் பொறிமுறைகளில் சமகால அரசியல், சட்ட, ஊடக ஆளுமைகளுக்கு உடன்பாடில்லை என்பதை சுட்ட வேண்டிய வரலாற்று பொறுப்பு எமக்கு இருந்ததை உணர்ந்தே இந்த கருத்து பதிவை பெற்று உங்கள் முன் வைக்கிறோம்.

ஏனென்றால் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க போகும் எதிர்கால தலைமுறைக்கு ஒரு சரியான வரலாற்றை சொல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. இந்த பதிவுகள் அதை செய்யும் என்று நம்புகிறோம்.

ஆசிரியர் குழு

ஈழம்ஈநியூஸ்.

தமிழத் தேசியக் கூட்டமைப்பும், இந்தியாவும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றன – குமாரவடிவேல் குருபரன்- (விரிவுரையாளர், சட்டத்துறை, யாழ் பல்கலைக்கழகம் – பொதுமக்கள் அமைப்பு பிரதிநிதி )

Guruparan-Kumaravadivel 1

13 ஆவது திருத்தச்சட்டம் என்பது அரசியல் தீர்வுக்கான ஆரம்பமல்ல. அது மிகவும் அதிகாரமிக்க ஓற்றை ஆட்சி என்ற பதத்திற்குள் புதைந்துள்ளது. சிறீலங்கா அரச தலைவரினால் நியமிக்கப்படும் ஆளுணரிடமே எல்லா அதிகாரங்களும் உள்ளன.

13 ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலான தீர்வை ஏற்கவேண்டும் என்ற அழுத்தத்தை இந்திய மத்திய அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது திணித்துள்ளது.

தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவர் சம்பந்தன் அவர்கள் 13 ஆவது திருத்தம் தொடர்பான ராஜுவ் – தமிழர் விடுதலைக்கூட்டணியின் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர். 13 ஆவது திருத்தச்சட்டம் என்பது அரசியல் தீர்வுக்கான ஆரம்பமாகும் என்ற கருத்தை விதைப்பதன் மூலம் தமிழத் தேசியக் கூட்டமைப்பும், இந்தியாவும் தமிழ் மக்களை ஏமாற்ற முற்பட்டுள்ளன.

மீண்டுமொருமுறை பொறிக்குள் சிக்கியுள்ள தமிழர் அரசியல் -பாலசுந்தரம் நிர்மானுசன்

(ஊடகவியலாளர் – மனித உரிமைச் செயற்பாட்டாளார், ஐரோப்பா)

சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையின் கீழான 13ம் திருத்தச்சட்டம், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாகவோ, இடைக்காலத் தீர்வாகவோ அல்லது இறுதித் தீர்வாகவோ அமையாது என  நீண்டகால வாதங்களுக்கு பின்னர் வெளிப்படையாகக் ஏற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டைமைப்பு, 13ம் திருத்தச்சட்டத்துக்கு அமைவாக நடைபெறவுள்ள எதிர்வரும் வடமாகண சபைக்கான தேர்தலில் போட்டியிடுகிறது.
nermanu

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதென்பது, தமிழ் மக்களின் அவலங்களுக்கு பிரதானமான காரணங்களில் ஒன்றான ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை ஏற்றுக்கொள்வதோடு, தமிழர் தாயகம் இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு தமிழர் தரப்பிலிருந்தே மறைமுகமாக அங்கீகாரம் வழங்குவதாகவும் அமையும்.

வடமாகாண சபை தேர்தல் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக நடைபெறுவதோடு, சிங்கள பேரினவாதிகளும் அதை எதிர்கிறார்கள் என்ற காரணத்திற்காக, அந்தத் தேர்தல் தமிழர்களுக்கு சாதகமாக அமையும் என்ற வாதம், அரசியல் சாணக்கியம் அற்றதோடு, தமிழ் அரசியல் பீடத்தின் ஒரு பிரிவிலுள்ள அரசறிவியலின் வெறுமையை வெளிக்காட்டுகின்ற அரசியல் அபிவிருத்தியாவும் காணப்படுகிறது.

இந்த துன்பியல் சம்பவம், தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பான விடயங்கள், தமிழர் தேசத்தின் நலனுக்கு அமைய, பன்மைத்துவம் கொண்ட ஆக்கபூர்வமான அரசியல் கலந்துரையாடலின் பின்னர் முடிவுகள் எடுக்க வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தி நிற்பதோடு, அத்தகைய கட்டமைப்புக்கான தேவையை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகிறது.

போராட்டத்தை முன்னெடுக்க துணிவற்ற தலைவர்களின் பாதை – தீபச்செல்வன்

(கவிஞர், ஊடகவியலாளர், யாழ்ப்பாணம்)

வடக்கு மாகாண சபைத் தேர்தலை கூட்டமைப்பு புறக்கணித்திருக்க வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கொள்கையிலிருந்து விலக மாட்டோம் என்று சொல்லி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள்.
deepa

இன்று பிரிக்கப்பட்ட மாகாண சபையில் போட்டியிடுவதன் மூலம் வடக்கு கிழக்கு பிரிப்பை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்கிறதா? வடக்கு கிழக்குப் பிரிப்பு என்பது எமது போராட்டத்திற்கு எதிரானது. மாகாண சபை குறித்தோ, 13ஆவது திருத்தத்தை அழிக்கும் நடவடிக்கை குறித்தோ எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் கூட்டமைப்பு மூழ்கியிருக்கிறது.

நாம் எதற்காக போராடினோம்? எத்தனை லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? எத்தனை ஆயிரம் பேராளிகளை இழந்திருக்கிறோம்? கூட்டமைப்பு வரலாற்றுத் தவறிழைக்கிறது. போராடத் தயாராக இருக்கும் மக்களுக்கு முன்னின்று போராட்டத்தை முன்னெடுக்கத் தெரியாத அரசியல்வாதிகளால் வேறு என்ன செய்ய முடியும்?

உலகத் தமிழ் இளையோர் கவனத்திற்கு ஒரு அறை கூவல் – சேரன் சிறீபாலன் (மனித உரிமைச் செயற்பாட்டாளர், தமிழ் செயற்பாட்டாளர் – அவுஸ்திரேலியா)

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு போர் முள்ளிவாய்க்காலிலே முடிவுற்று நான்கு வருடங்கள் சென்று விட்டன. ஆனால் தமிழ் மக்களுக்கு இன்றுவரை அரசியல் உரிமையும், வறுமை அற்ற வாழ்வும் கிட்டவில்லை.

இராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கல் புத்தமத மாக்கல் என்பன தீவீரமாக நடக்கின்றன. வெளித்தோற்றத்திற்கு வடக்கு கிழக்கில் பொருளாதார வளர்ச்சி இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல. கிராமப் புறங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோர் எண்ணிக்கை முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு பெருகிவிட்டது.
OLYMPUS DIGITAL CAMERA

மாகாணசபைத் தேர்தலுக்கான தயாரிப்புக்கள் வேகமாக நடக்கின்றன. மக்கள் குறைகள் வெளிவராமல் தொண்டையோடு நிற்கின்றன. புலனாய்வுத் துறையினரின் கழுகுப் பார்வை காரணமாக மக்கள் தமது கருத்தை சொல்ல அஞ்சுகின்றார்கள். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் சதித்திட்டங்களால் உருவாக்கப்படுகின்ற தலைவர்கள், மக்கள் வெறுப்புக்கு இலக்கான விக்னேஸ்வரன் போன்ற தான்தோன்றித் தலைவர்கள் மழைக்கு முளைத்த காளான்கள் போல் தோன்றிவிட்டனர்.

அவர்களின் நோக்கம் தமிழ்மக்களின் விடுதலைக்காகவோ, தமிழீழத்தின் விடுதலைக்காகவோ இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கையாலாகத தனத்தை மீண்டும் நிருபித்துள்ளது. அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள அரசிற்கு சார்பாகவும் இராசதந்திரம் நடத்தும் புதுடில்லி அரசை நம்பி அரசியல் நடத்துகின்றனர். இந்தியா தமிழ்தேசியக் கூட்டமைப்பை தனது கைப்பொம்மையாக பயன் படுத்துகிறது. ஒன்றைமாத்திரம் இவ்விடத்தில் சொல்கிறோம் காலம் ஈழத்தமிழனை கொன்று விடும் தமிழீழம் காலத்தை வென்றுவிடும்.

தமிழீழத்தின் தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 21ம் நூற்றாண்டிலும் மிகமுக்கியமான நிகழ்ச்சியாகும். அன்புகண்ட நாடுகளில் கடல் கடந்து வாழும் தமிழர்களை ஒன்றிணைத்த ஈழப்போராக இடம்பெறுகின்றது எமது விடுதலைப்போர்.

தமிழீழம் ஒரு சர்வதேச விவகாரம் அது இலங்கைத் தீவுக்குள் அடங்கியதல்ல. செத்துபோன குதிரையை அடித்து எழுப்பும் முயற்சியே 13ம் திருத்தம் என்ற போலி அதிகாரப் பகிர்வு. இந்த 13ம் திருத்தம் எப்போ இறந்துவிட்டது. ஆனால் இன்றும் அதை அரசியல் இலாபத்திற்காக கையில் எடுத்து பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள். 1987ல் செய்யப்பட்ட 13ம் திருத்தம் காலாவதியாகி கால் நூற்றாண்டாகிவிட்டது.

வலதுகை கொடுக்க இடதுகை பறிக்க என்று சொல்வார்கள் 13ம் திருத்தம் வழங்கிய அரசியல் உரிமைகளை மீளபெறும் உபாயத்தை அதே 13ம் திருத்தத்தில் உள்ளடக்கி உள்ளனர். இதன் காரணமாகவே மிகப்பெரிய அரசியல் மோசடி 13ம் திருத்தம் வர்ணிக்கப்படுகின்றது. இலங்கை அரசின் பிரதிநிதியாக செயற்படும் மாகாணசபை ஆளுனரின் கைகளில் அனைத்து அதிகாரங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாகாணசபைக்குத் தெரிவுசெய்யப்படும் இந்த பிரதிநிதிகள் வெறும் தலையாட்டி பொம்மைகள் மாத்திரமே.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போருக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டும்போது 13ம் திருத்தத்தின் மூலம் அரசியல் உரிமைகளை வழங்கப்போவதாக உறுதி மொழி வழங்கியது இலங்கை அரசு ஆனால் நடந்தது என்ன? போரில் வெற்றிபெற்றுவிட்டோம் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் உரிமை வழங்கவேண்டிய அவசியம் இப்போதில்லை என்று சிங்கள பேரினவாதிகள் கூறத்தொடங்கிவிட்டார்கள். சர்வதேச சமூகத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் எழும்போதெல்லாம் 13ம் திருத்தத் சட்டத்தை பற்றி பேசுவது இலங்கை அரசின் வழமை.

பொதுநலவாய நாடுகளின் மாநாடு நாடக்கப் போகிறது அதற்கு முன்னார் தேர்தலும் 13ம் திருத்தத் சட்டமும் என்ற நாடகம் தொடங்கிவிட்டது. ஏற்கனவே வடக்கு கிழக்கு மாகாணங்கள் வெலிஓயா சிங்கள குடியேற்றத்தைபோல பிரிக்கப்பட்டுவிட்டன. நிரந்தரமாக பிரிக்கப்பட்டுவிட்டன. வெலிஓயா என்பது தமிழர் தாயகம் மணலாறின் புதிய பெயர் மணலறில் வாழ்ந்த தமிழர்கள் ஏதிலிகளாக படகுகளில் புகலிடம் தேடுகிறார்கள். அவர்கள் சிந்திய கண்ணீர் கடல் நீரை உப்பு நீராக மாற்றுகிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்துவிட்டதா? உள்ளத்தில் உறுதியும் செயலில் உண்மையும் இருக்குமானால் தாய் மண்ணுக்கான விடுதலைப் போர் ஒரு போதும் தோல்வி காணமாட்டாது. காலம் பிந்தினாலும் தமிழீழம் நிட்சயம் கிடைக்கும். இளையோர்களே நிகழ்வுகளை அவதானியுங்கள் உறுதியாக செயற்படுங்கள் எமது  எதிர்காலம் எங்கள் கைகளில் தங்கியுள்ளது.

வட மாகாணசபைத் தேர்தல் – ஒவ்வொரு தமிழர்களும் முடிவெடுக்க வேண்டிய விடயம் – சசிதர் மகேஸ்வரன் (தமிழ் செயற்பாட்டாளர், பிரித்தானியா)

சிறீலங்கா அரசாங்கத்தின் 13 ஆவது திருத்தச்சட்டமும் அதன் மூலம் உருவாக்கப்படும் மாகாணசபைகளும் சிறீலங்கா அரசாங்கத்தையும், ஒரே நாடு என்ற கொள்ளையையும் மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டவை. பிரித்தானியா உட்பட பல நாடுகளில் இது உள்ளபோதும் தனது ஆளுணர்களின் உதவியுடன் மாகாணசபைகளை தனது பிடிக்குள் வைத்திருப்பதற்கு சிறீலங்கா அரச தலைவருக்கு உதவியை இந்தச் சட்டம் வழங்குகின்றது.
sasithar

யார் தேர்தலில் வெற்றிபெற்றாலும் இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு போன்ற திட்டமிட்ட இனஅழிப்பு தொடரவே செய்யும். மாகாணசபை அதிகாரங்களின் ஊடாக ஒரு அரசியல் தீர்வை பெற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.

சிங்களவர்கள் எதிர்க்கின்றனர் என்பதற்காகவே தமிழ் மக்கள் 13 ஆவது திருத்தச்சட்டம் மூலம் கொணடுவரப்பட்ட மாகாணசபையை தமிழ் மக்கள் ஆதரிக்கின்றனர். அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்பட்ட சிறீலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு சார்பான ஐ.நா தீர்மானம் தொடர்பிலும் இதுவே நிகழ்ந்தது.

13 ஆவது திருத்தச்சடடத்தை எதிர்ப்பதற்கு சிங்களவர்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அதனை ஆதரிப்பதற்கு தமிழ் மக்கள் வலுவான காரணங்களை தேடவேண்டும். 13 ஆவது திருத்தச்சடடம் பல வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவை முன்னெடுக்க வேண்டிய கடமை தமிழ் மக்களுக்கு உண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அதன் தலைவர்களின் நலன்களை பாதுகாக்கவே உதவும். தமிழ் தேசியம் தொடர்பில் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தன்னிச்சையாக முடிவெடுப்பார்களாக இருந்தால் வடமாகாணசபை தேர்தலை புறக்கணிப்பதே அதன் விளைவாக இருக்கும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்,  யாழ்ப்பாணம்

13வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாண முறைமையை ஏற்றுக்கொள்வதென்பது எமது மக்களிற்கு நாமே வெட்டிக்கொள்ளும் சவக்கிடங்கு.
Gajen-300x225

தற்போதுள்ள ஒற்றை ஆட்சிக்குள்  தீர்வு என்பது எவ்வகையிலும் சரிவரப்போவதில்லை, எந்தவிதமான பிரயோசனமும் அற்று 25 வருடங்களிற்கு மேலாக நிராகரிக்கப்பட்டிருந்த மாகாண சபை முறைமையை தற்போது தூக்கிப்பிடிப்பது கேலிக்குரியது.

கூட்டமைப்பு உருவாக்கும் “மிகை போலி பிம்ப உலகு” – பரணி கிருஸ்ணரஜனி (பெண்ணிய மற்றும் அரசியல் ஆய்வாளர், வியன்னா, ஒஸ்ரியா)

முள்ளிவாய்க்காலில் நாம் வீழ்த்தப்பட்ட போதும் எமக்கான அரசியல் இருப்பு என்பது அப்படியேதான் இருந்தது. யதார்த்தம் அதை மறுத்தாலும் உண்மை அதுதான். அழிவும் அவலமும் நிகழ்ந்தாலும் எமது இருப்பு தொடர்பான வரலாற்று செய்தி அந்த அழிநிலத்தில் வைத்து தெளிவாக எழுதப்பட்டதை இப்போது யாரும் உணரலாம். ஆனால் தமிழர்களின் பிரதிநிதிகள் தாங்கள்தான் என்ற கோசத்துடன் கூட்டமைப்பு பிரிக்கப்பட்ட கிழக்கு மகாணசபை தேர்தலில் பங்கெடுத்த போதே அந்த இருப்பு லேசாக ஆட்டம் காணத்தொடங்கிவிட்டது. எனவே வடக்கு மகாண தேர்தலில் கூட்டமைப்பு பங்கெடுப்பது என்பது அந்த இருப்பின் மீதியை அழித்தொழிக்கும் முயற்சியே..
parani

எல்லாத்தையும் விட அபத்தம் அரசியல் தீர்விற்கான அடிப்படையாக ஏற்றுக்கொள்ளவே முடியாத 13 வது சட்ட திருத்தத்தை முன்மொழிந்தவாறு கூட்டமைப்பு இந்த தேர்தலில் குதிப்பது. ஒற்றை அரசியலமைப்பையும் அதன் கீழான மகாணசபை முறைமையையும் நிராகரித்த எமது போராட்டம் இன்று அதன் நோக்கத்தையே இழந்து அனாதையாக நிற்கிறது. உண்மையான “முள்ளிவாய்க்கால்” இதுதான்.

தேர்தலில் பங்கு பற்றுவதனூடாக சில சாத்தியமான மக்கள் செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என்ற சிக்கலான வாதத்தையம் கள யதாhத்தத்தையும் கணக்கில் கொண்டு பல நிபந்தனைகளுடன் முன்பு கிழக்கு மகாண தேர்தலிலும் சரி தற்போது வடக்கு தேர்தலிலும்சரி சிவில் சமூகம் மற்றும் பல அரசியல், சமூக – உளவியல் பகுப்பாய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட எந்த கருத்துக்களையும் செவிமடு;க்காத கூட்டமைப்பு தன்னிச்சையாக செயல்படுவது துரதிஸ்டவசமானது மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டியதும் கூட.

இந்த இடத்தில்தான் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவம் கேள்விக்குள்ளாகிறது. புலிகளால் உருவாக்கபட்ட அமைப்பு என்ற வாதத்தை தம்மை நோக்கி மக்கள் விமர்சனம் செய்ய முற்படும்போதே பயன்படுத்தும் கூட்டமைப்பு நோக்கத்தில் செயற்பாடுகளில் அதற்கு எதிர்நிலையே எடுத்து வருகிறது. புலிகளால் கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட யாருமே இன்று கூட்டமைப்பில் இல்லை என்பதே இந்த யதார்த்தத்தை உணர போதுமானது. பிரச்சினை தற்போது அதுவல்ல.

தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சாவுமணி அடிக்கும் செயற்பாடுகளுக்கு நாம் எத்தனை நாட்கள்தான் துணையாக இருப்பது? இப்போது தேர்தலில் வாக்களிக்க சொல்லி கேட்பதனூடாக இந்த வரலாற்று துரோகத்தில் மக்களையும் பங்காளிகளாக்கும் வேலையை செய்கிறது கூட்டமைப்பு என்றே எண்ணத் தோன்றுகிறது.

மே 18 உடன் புலிகளின் ஆயுதபோராட்டம் முடிவுக்கு வந்தபோதே புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் செயற்திறனும் – அதற்கான இடமும் முடிவுக்கு வந்துவிட்டது. வெளிப்படை உண்மை அதுதான் என்ற போதிலும் இதை நாம் சொல்லவில்லை. கூட்டமைப்பே அதை தினமும் நிருபிக்கிறது. எனவே சம்பந்தர் கூட்டமைப்பை கலைத்து விட்டு புதிதாக ஒரு பெயரிலோ அல்லது தமிழரசுக்கட்சியின் பெயரிலோ இந்த தேர்தல்களாகட்டும் வேறு பல இனத்தை கூறுபோடும் வேலைகளாகட்டும் செய்யலாம்.

ஏனென்றால் அதில் எமக்கு தீர்வுகள் கிடைத்தால் சந்தோசம். மறுவளமாக தோல்வி கிடைத்தால் அது எமக்கு பிரச்சினையல்ல. அது தமிழர்களின் அரசியல் தோல்வியாக இருக்காது. ஒரு கட்சியின் – அமைப்பின் இராஜதந்திர சறுக்கலாகவே இருக்கும். ஆனால் புலிகளால் முன்மொழியப்படவர்கள் என்ற அடையாளத்துடன் – தமிழர்களின் பிரதிநிதிகளாக இத்தகைய வரலாற்று தவறுகளை புரிவது தமிழர்களின் ஒட்டு மொத்த தோல்வியாகவே போய் விடும் ஆபத்த இருக்கிறது. அத்துடன் இலட்சக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் இரத்தத்தில் கட்டி எழுப்பபப்ட்ட ஒரு நிழல் -நிகர் அரசின் போராட்ட விழுமியங்களை தார்மீக நெறிகளை இப்படியான வெளிஅழுத்தங்களினாலும் பதவி ஆசைகளினாலும் குழிதோண்டிப் புதைப்பதை அனுமதிக்கவும் முடியாது.

அதை விட முக்கியமானது. இன்று ஏகப்பிரதிநிதிகள் என்ற போர்வையில் தமிழர் அபிலாசைகளை நாசம் செய்துவிட்டு இவர்கள் ஒரு கட்டத்தில் ஓடும்போது அடுத்த தலைமுறை அதை மீட்டெடுத்து முன்னகர்த்துவது என்பது முடியாததாகவே இருக்கும்.

வரும் மனிதஉரிமை பேரவை ஒன்றுகூடல், பொதுநலவாய மாநாடு, நவநீதம்பிள்ளையின் வருகை என்ற சமகால நிகழ்வுகளை மையப்படுத்தியும் தூரநோக்கில் போர்க்குற்ற – இனப்படுகொலை விசாரணைகளிலிருந்து தப்பிக்கவும் என்று பல நோக்கங்களுடன் ஒன்றுக்குமே உதவாத ஒரு தேர்தலை ஏதோ தமிழீழ ரேஞ்சுக்கு கற்பிதம் செய்தபடி இராஜதந்திர கபடியாடும் இன அழிப்பு அரசின் சூழ்ச்சி வலைக்குள் கூட்டமைப்பு சிக்குண்டது துரதிஸ்டவசமானது.

அதை மக்கள் நம்பும்படி வற்புறுத்தும் அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வது.? ழான் போத்திரியா என்று பிரெஞ்சு தத்துவமேதை ஊடக வெளியின் அபத்தங்களை முன்வைத்து “மிகைப்போலி பிம்ப உலகு” என்ற கருத்துருவாக்கத்தை முன்வைத்தார்.

அதாவது உண்மை எது பொய் எது கண்டறிய முடியாமல் இனி ஊடகங்கள் கட்டமைப்பதே உண்மை என்ற நிலைக்கு வந்து விட்டோம் என்று..

கூட்டமைப்பும் தனது இயலாமையினாலும் ஆளுமை சிக்கலினாலும் பதவி ஆசையினாலும் தமிழ் மக்களை சுற்றி ஒரு “மிகை போலி பிம்ப உலகை” கட்டமைக்க முற்படுகிறது. 13 வது திருத்த சட்டம், பிரிக்கப்பட்ட மகாண சபை தேர்தல் எல்லாம் எமக்கு ஏதோ விடிவின் ஒரு புள்ளி என்று தமிழ்மக்களை நம்ப வைத்ததே இதற்கு சாட்சி.

எதிரிகள், வெளிச்சக்திகள், மற்றும் கூட்டமைப்பு சேர்ந்து விரிக்கும் இந்த பிம்ப உலகில் சிக்குண்டும் இன அழிப்பை சந்தித்து பேதலித்து போயுள்ள உளவியலும் சேர்ந்து மக்களை இந்த உண்மைகளை உணரவிடாமல் தடுக்கின்றன. விளைவாக வரலாறு ஒரு முட்டுச்சந்தியை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

தவறான பாதையில் நிறுத்தப்பட்டுள்ள தவறான தெரிவு – அருஷ் ( படைத்துறை ஆய்வாளர். பிரித்தானியா).

வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் சிறீலங்கா அரசு கூறும் நிபந்தனைகளை அப்படியே ஏற்று அதில் போட்டியிட்டு சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஏறத்தாள 65 வருட இனஅடக்குமுறை, 40 வருடங்களுக்கு மேற்பட்ட இனஅழிப்பின் வலிகள், ஆயுதப்போராட்டத்தின் மூலம் சிந்தப்பட்ட குருதி என்பன மூலம் ஏற்படுத்தப்பட்ட பேரம் பேசும் வல்லமை, சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இன அழிப்பு தொடர்பில் திரும்பியுள்ள அனைத்துலகத்தின் கவனம் என்பன பதவி மோகத்திற்காக சிதைக்கப்படப் போகின்றன.

சிறீலங்கா அரசின் இரணுவ ஆளுணர்கள் கூறும் இடத்தில் உக்கார்ந்து, அவர்கள் கூறும் கட்டளைகளை நிறைவேற்றும் வடமாகாணசபை முதலமைச்சரினால் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் எதனையும் செய்யமுடியாது என்பது தெளிவானது.

ஆனால் சிறீலங்கா அரசையும், அதன் இனப்படுகொலைக்கு துணைநின்ற இந்திய மத்திய அரசையும் அனைத்துலகத்தின் அழுத்தங்களில் இருந்து காப்பாற்றவும், இந்திய அரசின் பூகோள நலனைக் காப்பாற்றவும்  இது  உதவலாம்.

விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நாமம் இந்த தேர்தலிலும் அதன் நிழலில் போட்டியிடுபவர்களுக்கு வாக்குகளை அள்ளி வழங்கும் என்பது உண்மை.

எனவே தான் தமிழரசுக் கட்சியும், ஏனைய ஆயுதக்குழுக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்டமைப்பை விட்டு வெளிவருவதற்கு அஞ்சுகின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சிங்கள ஆதிக்கத்தையோ அதன் கூலிப்படையாக செயற்படும் ஒட்டுக்குழுக்களையோ தமது பகுதிகளில் இருந்து தள்ளிவைப்பதையே விரும்புகின்றனர். எனவே தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை நிறுத்துகின்றதோ அதற்கு வாக்களிக்க வேண்டிய கட்டயம்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு செயற்படுகின்றதா? என்பது கேள்விக்குறியானது. ஏனெனில் அவர்களால் நிறுத்ததப்பட்டுள்ள முதலமைச்சர் வேட்பாளர் என்பவர், தவறான பாதையில் நிறுத்தப்பட்டுள்ள தவறான தெரிவாகவே காணப்படுகின்றார்.

அவர் தெரிவித்துவரும் கருத்துக்களும் நம்பிக்கை கொண்டதாக காணப்படவில்லை. தமிழ் மக்களுகளின் தேவை என்பது அர்பணிப்பும், விட்டுக்கொடுக்காத தைரியமும், அரசியல் முதிர்ச்சியும் கொண்ட ஒரு அரசியல் தலைவரே தவிர இந்தியாவினதும், சிறீலங்காவினதும் விருப்பத்திற்குரியவர் அல்ல. அதற்காக எமது இனம் குருதி சிந்தவும் இல்லை.

தேர்தல் தலைவர்களும் தேசியத்தலைவரும் – இதயச்சந்திரன் (அரசியல் ஆய்வாளர், பிரித்தானியா).

வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக மூன்று விதமான போக்குகள் தென்படுகின்றன. தேர்தலை முற்று முழுதாக புறக்கணிக்க வேண்டும் என்பது ஒன்று.
ithaya

தேர்தலில் ஈடுபட்டாலும், கூட்டமைப்பின் கொள்கை விளக்க அறிக்கையில், சுயாதீன சர்வதேச விசாரணை, நிரந்தர தீர்வு எது என்பது குறித்த முன்மொழிவு, போன்ற அடிப்படை விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பது இரண்டாவது.

மூன்றாவதாக, சர்வதேசம் (?) விரும்புவதால் போட்டியிடவேண்டும், மகிந்தரோடு பேசித்தீர்க்கலாம், நீதிமான் விக்கினேஸ்வரன் எல்லாவற்றையும் வென்று தருவார், என்பதான பார்வையாகும். நான்காவது பார்வை ஒன்று உண்டு. அது மக்கள் பார்வை. தம் மீதுஇ இந்திய- மேற்குலக அணிகளால் திணிக்கப்பட்ட தேர்தல் இது என்பதாகும்.

சிங்கக் கொடியைக் கையில் பிடித்தாலும், வட- கிழக்கு எமது தாயகம் இல்லை என்று சொன்னாலும், இனப்படுகொளையாளி சரத் பொன்செக்காவிற்கு வாக்களியுங்கள் என்று கேட்டாலும், தமிழ் தேசிய அரசியலின் தவிர்க்க முடியாத, அதேவேளை தம் மீது திணிக்கப்பட்ட தெரிவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருப்பதாக மக்கள் உணர்கின்றார்கள்.

மகிந்த பரிவாரங்களோ அல்லது ஜே.ஆரின் வழித்தோன்றல்களோ, தமது எஞ்சியிருக்கும் அரசியல் உரிமைகளைக் களவாடிச் சென்று விடக்கூடாது என்பதற்காகஇ வேறு வழியின்றி கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்றார்கள். பிரித்தானியர் சென்ற நாள் முதல், இற்றைவரை இந்த எதிர்ப்பரசியலை மக்கள் விரும்பித்தான் செய்கிறார்கள்.

சிங்கள தேசத்தின் நாடாளுமன்றில் தமக்கான தீர்வு கிடைக்குமென்கிற நம்பிக்கை மக்களிடம் இல்லை. மாகாணசபைக்கும் அது பொருந்தும்.பண்டா-செல்வா ஒப்பந்தம் முதல், இரணில்- பிரபா ஒப்பந்தம் வரை எல்லாக்கிழிப்புக்களையும் மக்கள் பார்த்து விட்டார்கள்.

தேர்தல்காலத் தலைவர்களையும், தேசியத்தலைவரையும், இனம் பிரித்துப்பார்க்கும் வல்லமையும் மக்களுக்கு உண்டு.