17 தொண்டு நிறுவன ஊழியர்களை சுட்டுக்கொன்ற இலங்கை ராணுவம்: பிரான்ஸ் அம்பலம்

0
590

muthur-ngo-srilanka-600இலங்கையில் உள்நாட்டு போரில் நிவாரணப்பணிக்கு சென்ற தனது ஊழியர்கள் 17 பேரை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாக பிரான்ஸ் நாட்டின் தொண்டு நிறுவனமான ஏ.சி.எப் அம்பலப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் போரின்போது நிவாரணப்பணிக்காக சென்றிருந்த பிரான்ஸ் நாட்டின் ஏ.சி.எப். என்னும் பட்டினிக்கு எதிரான நடவடிக்கை அமைப்பு ஊழியர்கள் 17 பேரை சிங்கள ராணுவம் மிகக்கொடூரமான முறையில் கொன்று குவித்து இருப்பது இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து ‘ஏ.சி.எப்.’ அமைப்பு, ‘17 மனித நேய உதவி பணியாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதின் உண்மை வெளிப்பாடுகள்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:

“மூதூரில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி சிங்கள ராணுவம், கடற்படை, காவல்துறையினர் மனிதப்படுகொலைகளை அரங்கேற்றினர். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.

இதுவரை எங்கும் நேர்ந்திராத அளவுக்கு நடந்த மனித உரிமை மீறல் குற்றங்களில் ஒன்றாக, 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலையை சொல்ல வேண்டும். அவர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு, பின்னர் முழங்கால் போட வைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் ஒவ்வொருவரையும் தலையில் சுட்டு கொன்றனர்.

சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் 16 பேர் தமிழர்கள், ஒருவர் முஸ்லிம்.

இவர்களை கொன்றது சிங்கள அரசின் படைகள்தான். இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ விசாரணை முடிவுக்காக காத்திருந்தோம். ஆனால் கடைசியில், போர்க்குற்றம் புரிந்தவர்களை இலங்கை அரசு நீதியின் முன் நிறுத்தும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம்.

சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தித்தான், இலங்கை மனித உரிமை மீறல் குற்றவாளிகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.

ஏ.சி.எப். செயல் இயக்குனர் மைக் பென்ரோஸ் இது தொடர்பாக கூறுகையில், “ஒவ்வொரு நாளும், நாங்களும் எங்களைப் போன்ற மனிதநேய அமைப்புகளும் போர்ப் பிரதேசங்களில் பணியாற்றினோம். மனிதநேய உதவிகளை செய்த பணியாளர்களை மதிக்காதவர்களை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். இந்தக் குற்றங்களை செய்தவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது” என்றும் கூறியுள்ளார்.

இறுதிக்கட்டப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை அரசின் மீது சர்வதேச அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இதில் தீவிரமாக உள்ளார். தற்போது பிரான்ஸ் நாடும் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கை அரசிடம் சர்வதேச நாடுகள் காட்டும் பொறுமை குறைந்து விடும்

இதனிடையே, மனித உரிமை மீறல் பற்றி இலங்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிஷா தேசாய், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இலங்கை அரசிடம் சர்வதேச நாடுகள் காட்டும் பொறுமை குறைந்து விடும்.

குறிப்பாக, பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தனது சொந்தமான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். தனது சொந்த நடைமுறைகளின் ஊடாக, இலங்கை இந்த விவகாரங்களுக்குப் பதிலளிக்கும் என்பதையே நாம் விருப்புடன் எதிர்பார்க்கிறோம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கையினால் அதனைச் செய்யமுடியும் என்று நம்புகிறோம். உண்மையான முன்னேற்றம் இல்லாவிட்டால், அனைத்துலக சமூகத்தின் பொறுமை குறைந்து போகத் தொடங்கி விடும்” என்றார்.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று உலகநாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.