2009 இல் ஐநாசபை மட்டுமல்ல அதன் உறுப்பு நாடுகளும் தமது பொறுப்புக்களிலிருந்து தவறின : ஐநா பிரதி பொது செயலாளர் ஜேன் எலிசன்

0
666

Jan-Eliasson-1இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை மத்திரமின்றி ஐக்கிய நாடுகளின் அங்கம் வகிக்கின்ற உறுப்பு நாடுகளும் தமது பொறுப்புகளில் இருந்து தவறி இருப்பதாக ஐக்கிய நாடுகளின் பிரதி பொது செயலாளர் ஜேன் எலிசன் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவர்தான் அண்மையில் ஐநா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐநா பாதுகாப்பு சபை என்பன கட்டமைப்புரீதியாக 2009 இல் செயலிழந்து போனதாக கூறியவர்.

தமிழின அழிப்பில் ஐநா உட்பட அனைவருமே குற்றவாளிகள் என்று நாம் தொடர்ந்து கூறிவரும் குற்றச்சாட்டை தற்போது ஜேன் எலிசன் பகிரங்கமாக ஆனால் வேறு ஒரு தொனியில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு மாத்திரம் இன்றி அதன் அங்கத்துவ நாடுகளுக்கும் இலங்கை யுத்த விடயத்தில் இருந்த பொறுப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் உறுப்பு நாடுகள் எதிர்வரும் காலத்தில் இலங்கையின் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கிய அவதானத்தை செலுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் ஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் இனப்படுகொலைக்கு துணைநின்றவர்களாக பல மேற்குலக நாடுகளை பகிரங்கமாக குற்றம் சாட்டியதை நாம் அறிவோம்.

தொடர்ந்து அனைத்துலக மட்டத்தில் 2009 இல் ஒரு இனத்திற்கு அநீதி இழைக்கப்பட்ட ஆவணங்களும் வாக்குமூலங்களும் வெளிவந்துகொண்டிருக்கும் வேளையிலும் தமிழ் அமைப்புக்களோ, தமிழ் தலைவர்களோ மக்களை ஒன்றுதிரட்டி போராடுவதற்கு முன்வராதது வருத்தமளிக்கிறது.

ஒவ்வொரு தருணத்திலும் நாம் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகிறோம். ஜேன் எலிசனின் இந்த பகிரங்க வாக்குமூலமும் தொடர்ந்து முன்வைக்கப்படும் பரிந்துரையும் முக்கியமானது. அவர் இலங்கையில் மறுசீரமைப்பு என்று குறிப்பிடுகிறார். இதை நாம் ஏற்க முடியாது. நடந்த இனஅழிப்பிற்கு நீதிதான் சரியானதும் ஏற்புடையதுமான தீர்வாகும்.

நமது அமைப்புக்கள் அனைத்துலக மட்டத்தில் இராஜதந்திரநகர்வுகளை மேற்கொண்டு நீதியை வென்றெடுக்கும் தருணம் இது. சமகாலத்தில் பரந்துபட்ட அளவில் மக்கள் போராட்டங்களையும் களம்,புலம், தமிழகம் என்று விரிவுபடுத்துவதும் முக்கியமானது.

நாம் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதற்கான அனைத்து நியாயங்களையும் சம்பந்தபட்டவர்களே வாக்குமூலங்களாக வழங்கிக்கொண்டிருக்கும் தருணம் இது.

இனியாவது ஒன்றுபட்டு போராடுவோம். நீதியை வென்றெடுப்போம்.

ஈழம்ஈநியூஸ்.