ஒருமாத காலம் எப்படிக் கடந்தோம் என அறியாமல் கடந்திருக்கிறோம்… தேதி கிழமைகள் கூட தெரியாமல் அலைந்திருக்கிறோம்!!

 

எம் இனமும் கட்சியும் எங்களுக்கு கொடுத்த பணியை எங்களின் முழு பலத்தையும் திரட்டி மனப்பூர்வமாக செய்து முடித்திருக்கிறோம்.

 

கொளுத்தும் வெய்யிலில் தினந்தோறும் துண்டறிக்கைகளோடு வீடு வீடாய் நடந்த உறவுகளும், கடும் பொருளாதார நெருக்கடிகளை தங்கள் பங்களிப்பின் மூலம் தகர்த்தவர்களும், வாகனத்தில் அலைந்தோறும், மேடையில் முழங்கினோரும், குழந்தைகளை கைகளில் வைத்துக் கொண்டு பரப்புரையில் தங்களையே அர்ப்பணித்து நின்ற தாய்மாரும்.

 

சில காரணங்களால் வெளிவரமுடியாத நிலையிலும் இயக்கத்தை முன்னெடுத்து செல்ல ஆக்கபூர்வமாக அறிவுரை பகர்ந்தோரும்.

 

உண்மையில் சொல்லுவேன் மனித குலத்தின் சொத்துக்கள்… மாமனிதர்கள்!! தாங்கள் நெஞ்சில் ஏந்திய லட்சியத்திற்காய், தங்களை தூங்கவிடாத அந்த கனவுகளுக்காய் எந்த பலனையும் எதிர்பாராமல் அவர்கள் ஆற்றிய பணி சராசரி மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத ஒரு பேரற்புதம்!!

 

இது போன்ற தன்னலமற்ற அறிவார்ந்த இளைஞர்கள் எல்லாக் காலங்களிலும் பிறந்து வருவதில்லை.

 

நமது சக்தியை மீறி பிரம்மாண்டமாய் நடந்த பீளமேடு பொதுக்கூட்டத்திலும், இறுதிநாள் வாகன பரப்புரையிலும், ஆர்ப்பரிப்போடும் ஆராவாரத்தோடும் கலந்து நின்ற சொந்தங்கள்…

 

சில ஆயிரங்களை கையில் வாங்கிக் கொண்டு மிடுக்கு காட்டிய பல புதிய, பழைய கட்சிகளின் முகவர்களோடு உணவு கூட எதிர்பார்க்காமல் புன்சிரிப்பு மாறாமல் வாக்குச்சாவடிகளை அலங்கரித்த உறவுகள்…

 

அவர்கள் பிரபாகரன் என்னும் பெருந்தலைவனை நெஞ்சில் சுமக்கும் அழகிய மனிதர்கள்… சீமான் என்னும் கலகக்காரனின் கரம் பற்றி வலுவேற்றும் போராளிகள்!!

 

சுயநல, அநாகரீக மாபியாக்களுக்கு இடையே அவர்களின் கட்டற்ற பணபலத்தின் அச்சுறுத்தல்களுக்கு இடையே நமக்கான வலுவான தளம் அமைத்த இணையதள உறவுகள்…

 

நெருங்கி நின்று உதவியோர்… தள்ளி இருந்தாலும் அன்பால், வாழ்த்துகளால் எம்மை உற்சாகமூட்டியோர் அனைவருக்கும் நன்றி சொல்லி கடந்து போக, இது முடிவல்ல இது பயணம்… தொடர் பயணம்… சில தலைமுறைகலுக்கான தொடர் பயணம்…

 

அன்பின் வடிவானவர்களே காலத்தால், வரலாற்றால் நாமும் நினைவுகூறப்படுவோம்…

 

நம் பணி, நமது வெற்றி நமது தோல்வி அனைத்தும் சரித்திரத்தின் ஏடுகளில் சாகாவரம் பெற்று நிலைக்கும்!!

 

இந்தப் பயணத்தில் ஏதாவது ஓரிடத்தில் என்னால் ஏதேனும் சங்கடங்களை யாரேனும் சந்தித்திருந்தால் நம்மில் ஒருவன்தானே நீங்கள் தாராளமாய் பொருத்தருளலாம்!!

 

நம் ஒற்றுமையின் வலிமையை நாம் உணர்ந்த தருணமிது… இணைந்து நின்று பகிர்ந்து உழைத்து சாதித்து காட்டிய தருணமிது!!

 

2009 யாருமின்றி அழுதோம்!! 2019 எந்தப் பாராளுமன்றத்திலிருந்து எம் இன அழிப்பிற்கான உத்தரவுகள் பிறந்ததோ அந்தப் பாராளுமன்றத்துள் நுழைய முட்டி மோதுகிறோம்!!

 

ஒருநாள் உள்ளே போவோம்…

 

வலி சுமந்து… நெஞ்சில் வெறி சுமந்து…

 

காலம் நம்மை பயிற்றுவிக்கிறது… ஒரு நாள் நம்மை வெல்லவைக்கும்!! நாம் வெல்வோம் அதுதான் இயற்கையின் நியதி!!

 

நன்றி: பேராசிரியர் கல்யானசுந்தரம் சண்முகம்