முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு, சூரிபுரம் பகுதியில் 2017 ஆம் ஆண்டு எம் மக்கள் இரவு பகலாக போராடி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ஒரு பகுதி காணியில் அரசு எந்த வசதிகளும் செய்து கொடுக்காத நிலையிலும் மெல்ல மெல்ல தமது முயற்சியால் குடியேறி இருக்கும் நிலையில் இந்த காணியிலிருந்து, தமிழ் மக்களை மீண்டும் வெளியேறுமாறு, கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் ஊடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த கொடிய மனித உரிமை மீறல் செயல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு, சூரிபுரம் பகுதியில் தமிழ் மக்களினால் குடியிருப்பாகவும் விவசாய நிலமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 50 ஏக்கர் காணியில் இருந்த மக்களையே தற்போது அங்கிருந்து வெளியேறுமாறு கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இவ்வாறு 19 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வோருவருக்கும் சுமார் இரண்டு ஏக்கர் காணிகள் காணப்படுவதோடு, பல ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்ட தென்னைமரங்கள், நிலக்கடலைச் செடிகள், மரமுந்திரிகை உள்ளிட்ட பயன் தரும் தாவரங்களும் குறித்த காணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, 12 கிணறுகளும் குறித்த காணியில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, வீதியில் பச்சிளம் குழந்தைகளும் இரவு பகலாக படுத்துறங்கி மக்கள் போராட்டம் நடத்தி 2017 ஆம் ஆண்டில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் நிலங்கள் இவை.

எந்த வாழ்வாதார உதவிகளும் அரசால் செய்து கொடுக்கப்படாத நிலையில் இரானுவத்திடம் இருந்து மீட்ட நிலங்களில் புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியோடு மீண்டும் குடியேறி வாழ்வை ஆரம்பித்த மக்களுக்கு இப்பொழுது மீண்டும் சிறிலங்கா இனவாத அரசு வல்லாதிக்க அடக்குமுறைகளை கட்டவிழித்து அநீதி விளைவிக்கின்றது.

அந்தவகையில் அடுத்தமாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் இந்தக் காணிகளில் இருந்து தமிழ் மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான நில அளவை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் நேற்றைய நாள் வருகை தந்திருந்ததால் கொதித்தெழுந்த பாதிக்கப்பட்ட மக்கள், ஒன்று கூடியிருந்தமையினை அடுத்து தமது நில அளவை நடவடிக்கையை மேற்கொள்ளாது சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கு நீதி வேண்டும் என தமிழ் மக்கள் போராடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here