மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகளை நிறைய சிறுகதைகளாக எழுதி இருக்கிறார், அதில் ஒரு கதை ஒரு போர் வீரனுக்கும், விபச்சார விடுதி ஒன்றில் உடல் நுகர்வு வணிகம் செய்கிற பெண்ணுக்கும் இடையில் நிகழும் உரையாடலாக நகரும்.

ஏரோது மன்னன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைத் தன்னுடைய அரச ஜோதிடர்கள் மூலமாக அறிகிறான், உலகின் மீட்பராக, மக்களின் ஏகோபித்த ஆதரவு பெறப்போகிற தேவகுமாரனாக இயேசு உருவாகப் போகிறார் என்று தெரிந்தவுடன் அரசதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிற ஏரோதுக்கு பதட்டம் உருவாகிறது, உடனே நாட்டில் 2 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள் எல்லாவற்றையும் கொன்று விடுங்கள் என்று உத்தரவு பிறப்பிக்கிறான். போர் வீரர்களும், பணியை சிரமேற்கிறார்கள்.

அப்படி ஒரு போர்வீரன் தான், கதையில் உரையாடல் நிகழ்த்துகிறான், விபச்சார விடுதிப் பெண்ணிடம் இரவில் அவன் சொல்கிறான், “எனக்கு வெண்ணீர் வைத்துக் கொடு, என் கரங்களைக் கழுவ வேண்டும், என் பாதணிகளை வெண்ணீர் ஊற்றி அதில் படிந்திருக்கும் குருதிக் கறையைக் கழுவ வேண்டும், எனக்கும் நான் கொன்ற குழந்தைகளுக்கும் என்ன பகை, அதிகாரத்தின் கட்டளையை நிறைவேற்றுகிற வரலாற்றின் காவலன் நான், என் பாவங்களை நான் வெண்ணீர் ஊற்றிக் கழுவிக் கொள்கிறேன், என் பாவங்களைக் குறித்த கேள்விகளை நீ ஏரோது மன்னனிடம் தான் கேட்க வேண்டும், என்னிடம் அல்ல”.

சீனாவுடனான எல்லைச் சண்டையில் இறந்து போன போர்வீரர் பழனியின் இறுதிச் சடங்கைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது ஏனோ எனக்கு பால் சக்காரியா நினைவில் வந்தார்.

வரலாறு முழுக்க நிகழ்ந்திருக்கும் படுகொலைகளில் பெரும்பான்மையானவை இப்படியான கூலிக் கொலைகள் தானே, பழனியின் இளம் மகன் எதற்காக சீனன் அப்பாவைக் கொன்றான் என்று தெரியாமல் சிதையருகே நின்று கொண்டிருக்கிறான், ஆர்ப்பரிக்கும் கூட்டம் பழனியின் தியாகத்தைக் கொண்டாடுகிறது, கூலி கொடுக்கும் அரசு 21 குண்டுகளில் எந்த நியாயமும் இல்லாத அந்தக் கொலையை மூடி மறைக்கிறது.

எல்லைக் கோடுகளில் சண்டை இல்லாத பொழுதுகளில், ஒரு இந்தியப் போர் வீரனும், ஒரு பாகிஸ்தானியப் போர் வீரனும் தங்கள் தேனீரைப் பகிர்ந்து கொள்கிறார்கள், தங்கள் ஊர்க் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள், தங்களுக்கு வரவேண்டிய நிலுவைச் சம்பளம் குறித்து மென்மையான குரலில் உரையாடுகிறார்கள், பழனியும் தன் மகனுக்குப் பிடித்தமான இனிப்பைப் பற்றியோ, தீபாவளிக்கு அவனுக்கு வாங்கப் போகிற ஆடைகளைப் பற்றியோ அப்படி ஒரு சக சீனப் போர் வீரனோடு அழகிய மாலைப் பொழுதொன்றில் உரையாடி இருக்கக் கூடும்.

யாரோ எங்கிருந்தோ எல்லைகளை வகுக்கிறார்கள், குளிர்ந்த அறையில் தேனீர் குடித்தபடி யாரோ கட்டளையிடுகிறார்கள், தேசத்தின் பெயரில் பழனி கொல்லப்படுகிறான், அதிகாரத்தின் குண்டுகள் தன்னைப் போலவே பிள்ளை குட்டிகளோடு விடுமுறையில் ஊருக்குத் திரும்பி வாழ நினைக்கிற சக போர் வீரனைக் கொன்று விடுகிறது. பழனியைக் கொன்றவன் அவனுடைய இளம் மகன் தந்தையின் சிதையருகே அப்படி நிற்பதைப் பார்த்தால் உறுதியாகக் கண்ணீர் உதிர்ப்பான், பால் சக்காரியாவின் கதையில் வரும் போர் வீரனைப் போல “ஸீ ஜிங்பிங்கிடமோ, நரேந்திர மோடியிடமோ போய் உன் தரப்பு நியாயத்தைக் கேள்” என்று சொல்வான்.

போரில் இறக்கிற எந்த நாட்டின் படை வீரனுக்கும் அவனுடைய இறப்புக்கான நியாயம் இருப்பதே இல்லை, காலம் காலமாக மானுடத்தின் அச்சுறுத்தலாக, நமது குழந்தைகளின் மீது திணிக்கப்படுகிற அநீதியாகப் போர் நிலைத்து நிற்கிறது, அதிகாரத்தின் சின்னமாக எல்லைகள் தொடர்ந்து நிலைத்திருக்கிறது.

ஆனாலும், தேசப்பற்று என்கிற கொடிய நோயை நாம் போற்றி வளர்க்கிறோம், தேசியக் கொடிகளைப் பிணங்களின் மீது போர்த்தி அடுத்த தலைமுறைக்கும் அந்த வெறியை மடைமாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். பழனியோ, பால் சர்க்காரியாவின் போர் வீரனோ எப்போதும் தன்னுடைய குழந்தைகளை அப்படி ஒரு துயரமான பொழுதில் நிறுத்த விரும்புவதில்லை, அதிகாரமும், அரசும், பசியும், கட்டளைகளும் தான் பழனியின் மக்களை அனாதைகளாக்கி விடுகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதைப் போல, “தேசியவாதம் என்பது மானுட மனம் முதிர்ச்சியுறாத ஒரு கொடிய நோய், மனித மனதில் ஒட்டியிருக்கும் பூச்சியைப் போல அது நெளிகிறது”. அரசதிகாரப் படுகொலைகளால் சிதைக்கு அருகில் நிற்கிற பழனியின் மக்கள் நம்முடைய புனித தேசப்பற்றை மன்னிக்க மாட்டார்கள்.

நமக்கென்ன, வாட்ஸ்சப்பிலோ, பேஸ்புக்கிலோ தேசப்பற்றின் பெயரால் பார்வர்டு செய்வதற்கு இன்று கிடைக்கிற படமாகப் பழனியின் மக்கள் மலிந்து ஆண்டுதோறும் வருவார்கள்.

கே. அறிவழகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here