தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதாவது தமிழரசுக் கட்சியை தமிழ்த் தேச அரசியலிலிருந்து அகற்றுவதென்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

ஏனென்றால் சிங்கள , பிராந்திய, மேற்குலக சக்திகளினால் தமிழீழ நடைமுறை அரசையும் அதன் குடிமக்களையும் அழித்தொழிக்கும் புரெஜெக்ட் பெக்கன் திட்டத்தின் பிரகாரம் புலிகளிற்கு பின் தமிழரசுக் கட்சியே அந்த வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம் காய்கள் நகர்த்தப்பட்டு இன்று வரை அதைக் கட்டிக் காத்து வருகிறது மேற்படி சதிக் கூட்டணி.

2009 இற்கு முன்பே இதற்காகக் காய்கள் நகர்த்தப்பட்டன.

புலிகளின் வீழ்ச்சிக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலை புலிகளின் தொடர்ச்சியாக காவும் வல்லமை கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்/ ரவிராஜ்/ சந்திரநேரு/ சிவமகாராஜா / சிவநேசன் போன்றோர் படுகொலை செய்யப்பட்டு தமிழரசுக் கட்சிக்கான தனித்த இருப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தின் ஆணி வேராகவும் , ஒரு அச்சாகவும் இருந்த தராகி சிவராம்/ புலிகளின் லொபியைக் காவக்கூடிய கூட்டமைப்புக்கு ஒரு கடிவாளமாக இருக்கக்கூடிய சிவில் தலைவர்களான கருணாகரம் அடிகளார் போன்றோர்களும் தேடித் தேடி வேட்டையாடப்பட்டு ஒரு அசைக்க முடியாத சக்தியாக தமிழரசுக் கட்சியை களத்தில் விட்டது மேற்படி சதிக் கூட்டணி.

‘புலிகள் வன்முறையாளர்கள்/ புலிகள் ஆயுதம் ஏந்தியது தவறு’ என்று தமது எசமானர்களின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஓயாமல் கூச்சலிடும் சம்பந்தனும், சுமந்திரனும் அரசியல் செய்ய உயிர்ப்பலி எடுக்கப்பட்டவர்களின் கதை இது.

அடுத்து மேற்படி சதிக் கூட்டணியின் உத்தரவின் படி எஞ்சியிருந்த புலிகளின் லொபி குழாமான கஜன் அணி வெளியேற்றப்பட்டது.

இனித்தான் தமிழரசுக் கட்சியின் இருப்புக்காக முக்கியமான ஒரு தரப்பு அழித்தொழிக்கப்பட்ட ஒரு கதைக்குள் வரப் போகிறோம்.

இது ஒரு நீண்ட கதை. முடிந்தவரை சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

புலிகள் ஆயுதத்தை நம்பி மட்டும் போராட்டம் நடத்தினார்கள். அதனால்தான் முள்ளிவாய்க்காலில் வீழ்ந்தபோது அவர்களிடம் எந்த B பிளானும் இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் முன் வைக்கபட்டு வருகிறது.

இது தவறு. B பிளான் மட்டுமல்ல Z வரைக்கும் அவர்களிடம் பிளான் இருந்தது இன்று நாம் புலிகளைத் தொடர்ந்து கற்கும்போது அறிந்து கொள்கிறோம்.

அதில் ஒன்றுதான் இது.

இன அழிப்பை நிறுவுவதும்/ இறைமையைத் தக்க வைப்பதும்தான் தலைவரின் இறுதி நேர முதன்மை யுக்தியாக இருந்தபோதும் கூடவே அதனூடாகவே அவர் வேறு சிலவற்றையும் சிந்தித்திருக்கிறார்.

2009 தமிழின அழிப்பின் இறுதிக்கட்டம். பிராந்திய – மேற்குலக சதிகள் மற்றும் உள்ளக துரோகங்களினால் தமிழர் தேசம் முற்றாக அழிக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில் தலைவர் பிரபாகரன் தனித்த ஒரு மனிதனாக இதற்கு எதிரான பகடையாட்டத்தை ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். விளைவாக இந்த கூட்டணிக்கு எதிராக பல ‘செக்’களை வைத்த தலைவர் பிரபாகரன் அதன் ஒரு கட்டமாக அனைத்துலக அனுசரணையுடன் அரசியற் போராளிகள் ஐநா விடம் ஒப்படைக்கப்படுவதற்கு காய் நகர்த்துகிறார். ஆனால் தமிழின அழிப்பில் ஒரு பங்காளியாக செயற்பட்ட ஐநா இதை வெற்றிகரமாக செய்து முடிக்காதென்பதும் அதை பிராந்திய – மேற்குலக சதி வலையமைப்பு முடக்கும் என்பதையும் தெரிந்திருந்த போதும், மூன்று முக்கிய நோக்கங்களை முன்வைத்து அதை செய்ய புகுந்தார்.

01. ஆயுதமின்றி ஐநா அனுசரணையாளர்களை நோக்கி போகும் அரசியல் போராளிகளை கொல்லும் சிங்களத்தின் அப்பட்டமான இனஅழிப்பை அம்பலப்படுத்துவது

02. மேற்குலக – ஐநா வுடன் பேசிய பின் சென்ற பேராளிகளை காப்பாற்றாது தமிழின அழிப்புக்கு துணைநின்ற ஐநாவை / மேற்குலகத்தை அம்பலப்படுத்துவது
அல்லது இதன் வழி அவர்களுக்கு ஒரு நெருக்கடியை உண்டாக்கி அவர்களை நீதியை நோக்கி உந்தித் தள்ளுதல்.

03. இனஅழிப்பு அரசின் படைகளையும் பிராந்திய மற்றும் மேற்குலக சதி வலையமைப்பையும் தாண்டி ஒருவேளை ஐநாவினால் அரசியற் போராளிகள் காப்பாற்றப்பட்டால் கள யதார்த்தம் கருதி ஆயுத வழி முறைகளை கைவிட்ட தமிழ்த்தேச அரசியலை அவர்கள் முன்னெடுப்பார்கள் என்ற நோக்கம் கருதியது.

பா. நடேசன் தலைமையிலான ஒரு அணியும் பின்பு யோகரட்ணம் யோகி தலைமையிலான ஒரு தொகுதி அரசியற்போராளிகள் அணியும்
ஒருசேர ஆயுதங்களை கைவிட்டு சென்றது இந்த பின்னணியில்தான்.

தலைவர் பிரபாகரன் எதிர்பார்த்த முதல் இருவிடயங்களும் நடந்தன. மூன்றாவது யோசித்த விடயத்திற்கு இனஅழிப்பு படைகளும் பிராந்திய மேற்குலக சதிவலையமைப்பும் அனுமதிக்கவில்லை.

காரணம் நம் எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனாலும் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் இடத்தை புலிகளின் அரசியல் மீண்டும் நிரப்பி விடக் கூடாது என்பதாலேயே அத்தனை அரசியற் போராளிகளும் அழித்தொழிக்கப்பட்டார்கள்.

புலிகளுக்கு தடை இருந்த போதும் தொண்ணூறுகளில் புலிகள் உருவாக்கி தாமே பின்பு கலைத்த ‘விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி’ என்ற கட்சி சிறீலங்காவில் ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாகவே இருந்து வந்தது. அதன் செயலாளராக யோகரட்ணம் யோகி இருந்தார்.

பலருக்குத் தெரியாத கதை. 2012 இல்தான் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.

ஒரு வேளை யோகி தலைமயிலான அணி ஐநா அனுசரணையுடன் தப்பியிருந்தால் இந்த கட்சி மீளுயிர் பெற்று தமிழ்த் தேச அரசியல் இன்னொரு பரிமாணத்தை எட்டியிருக்கும்.

சிங்களம் பெரும் நெருக்கடியைச் சந்தித்திருக்கும்.

கூட்டமைப்பு கலைக்கப்பட்டு தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு தமிழர் போராட்டம் தற்காலிகமாக வேறு ஒரு வடிவம் எடுத்திருக்கும்.

ஆனால் தமிழரசுக் கட்சியின் இருப்புக்காக அவர்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள்.

இன்று அந்த இரத்தத்திலும் / அவர்களின் பிணங்களின் மீதும் ஏறி நின்று போலி ஜனநாயகம் பேசியபடி தமிழர் விரோத அரசியல் செய்கிறது தமிழரசுக் கட்சி.

இதை யாருக்குச் சொல்லி அழுவது?
– Parani Krishnarajani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here